

ஆரோக்கிய உலகத்துக்குள் நேசத்துடன் நம்மை வரவேற்கும் ‘பச்சைப் பூங்கொத்து’ அறைக்கீரை! நலம் கொடுக்கக் காத்துக்கிடக்கும் முதல் கீரை ரகம் இது எனலாம். தமிழர்களின் உணவு முறையுடன் நெருக்கமான தொடர்புடையது அறைக்கீரை. திட உணவை உண்ணத் தொடங்கும் குழந்தைகளுக்குக் கீரை வகைகளில் முதல் கீரையாக ஊட்ட வேண்டியது இக்கீரையைத்தான்!
உலகிலும் மரபிலும்: இந்திய, சீன, தாய்லாந்து பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் மருந்தாக அறைக்கீரை ரகங்கள் பயன்படுகின்றன. ‘இன்கா’, ‘மாயன்’ நாகரிகங்களில் அறைக்கீரை முக்கிய ஊட்டப் பொருளாக இருந்திருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா, மலேசியா என உலகம் முழுக்கவே அறைக்கீரை ரகங்களின் பயன்பாடு இருக்கிறது.
இனிப்புச் சுவையை அடிப்படையாகக் கொண்ட அறைக்கீரை, உடலுக்கு வலுவைக் கொடுக்கக்கூடியது. பசியின்மையைப் போக்கி நல்ல பசி உணர்வை உண்டாக்கும். ‘அறுகீரை பத்திய மாகும்…’ என்கிற சித்த மருத்துவப் பாடல், நோய்களுக்கான பத்திய உணவுப் பொருளாக அறைக்கீரையைக் குறிப்பிடுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த கீரையாக இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார் சித்தர் திருமூலர்.
சத்துகளின் குவியல்: உணவு வகையாக அவ்வப்போது சமைத்து உண்ண காய்ச்சல், வாத நோய்கள் விலகும். ‘மலத்தை இளகலாக வெளியேற்ற அறைக்கீரை இருக்க பயம் கொள்வதேன்’ என்று சொல்லுமளவுக்கு மலக்கட்டுப் பிரச்சினை ஏற்படாமல் காக்கும் தன்மை இக்கீரைக்கு உண்டு. வாத நோய் அறிகுறிகளைக் குறைக்கும் மருத்துவக் கீரையாகவும் இதைப் பயன்படுத்தலாம்.
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சீருணவில் சேர்க்க வேண்டிய முக்கியமான கீரை ரகம் இது! உடல் வெப்பத்தை லேசாகக் கூட்டி, காமத்தைப் பெருக்கும் மன்மதனின் அம்பு போன்ற செய்கை கொண்டது. வீரியக் குறைபாட்டைப் போக்கி, இல்லற வாழ்வைச் சிறப்பாக்கும் அதிசயக் கீரை என்பதை, ‘வீச்சாய்க் கறுவுமோ வாயுவினங் காமமிக வுண்டாம்’ எனும் அறைக்கீரைக்கான அகத்தியர் குணவாகடப் பாடல் மூலம் அறிந்துகொள்ளலாம். இனிப்புச் சுவையுடன் சிறிது வெப்பத்தையும் கொடுக்கும் கீரையெனப் பதிவுசெய்கிறது சித்த மருத்துவம்.
ஆய்வுகளில்: வயிறு, குடற்பகுதியில் உள்ள மென்படலங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் ‘Gastro protector’ தன்மை இக்கீரைக்கு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. வயிற்றுப் புண் இருப்பவர்கள் காரம் சேர்க்காமல் அறைக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். பாக்டீரியாவுக்கு எதிராகச் செயல்படும் வன்மையும் அறைக்கீரைக்கு உண்டு. இரும்புச் சத்தும் இதில் குறைவில்லாமல் இருப்பதால் ரத்த சோகையைப் போக்கும் உணவாகப் பயன்படுத்தலாம்.
உணவில்: அறைக்கீரையைத் தனித்தும் பயன்படுத்தலாம். அதேவேளை சேர்க்கப்படுகிற கூட்டுப் பொருளுக்கு ஏற்ப செயல்திறனும் அதிகரிக்கும். அறைக்கீரையோடு பூண்டு, பெருங்காயம் சேர்த்துக் கடைந்து சாப்பிட வாயுத் தொல்லை வெகு விரைவில் விலகும்.
அறைக்கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து மசித்து சாப்பிட்டுவர உடல் வலிமை அதிகரிக்கும். அறைக்கீரையுடன் பருப்பு வகைகளைச் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட, உடனடி ஆற்றல் கிடைக்கும். துவரம் பருப்பு சேர்த்து மசித்து, நெய் சேர்த்த மசியலாகச் சுவையாகவும் சாப்பிடலாம்.
பிரசவித்த பெண்களுக்குத் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க, வேகவைத்துக் கடைந்த அறைக்கீரையோடு நெய் சேர்த்துச் சாப்பிடக் கொடுக்கலாம். குழந்தையை ஈன்ற தாய்மார்களுக்கான பத்திய உணவுப் பட்டியலில் அறைக்கீரைக்கு முக்கிய இடமுண்டு. பேதி, ரத்தக் கழிச்சல் போன்றவற்றைத் தடுக்க உடனடி மருந்தாகத் துவர்ப்பிச் செய்கையுடைய அறைக்கீரையைப் பயன்படுத்தும் வழக்கம் கிராமங்களில் தொடர்கிறது. அறைக்கீரையுடன் முருங்கைப்பூ சேர்த்து வேகவைத்து உண்ண பார்வைத்திறன் அதிகரிக்கும்.
அறைக்கீரை விதைகளைத் தேங்காய்க்குள் போட்டு, நல்லெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் தலைமுழுகும் எண்ணெய், தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவக்கூடியது. அறைக்கீரை விதைகள் சிறந்த எதிர்-ஆக்ஸிகரணி தன்மை கொண்டவை எனக் குறிப்பிடுகிறது ஆய்வு.
அறைக்கீரை வாங்கும்போது, லேசான வாட்டத்தில் பசுமை வண்ணம் ஓரளவுக்கு இருக்கும்படி பார்த்து வாங்குவது நல்லது. அதீத பசுமையோ, ‘பளிச்’ என இருப்பதோ பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட கீரைக்கான அடையாளம். அறைக்கீரை விதைகளைத் தொட்டிகளில் அல்லது தோட்டங்களில் தூவி நாமே வளர்க்கலாம்.
அறைக்கீரை… முழு ஆரோக்கியத்தையும் தடையின்றி வழங்கும்!
பெயர்க் காரணம்: அறுகீரை, அறைக்கீரை போன்ற பெயர்கள் மருவி இப்போது பொது வழக்கில் அரைக்கீரை, அரக்கீர போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. தாவரத்தை வேரோடு பிடுங்காமல், தண்டிலிருந்து இலைகளை மட்டும் கிள்ளி பயன்படுத்தலாம். அதன் காரணமாகவே ‘அறுகீரை’ என்கிற பெயர் உருவாகி இருக்கிறது. அறைக்கீரையின் தாவரவியல் பெயர் Amaranthus tristis. இதன் குடும்பம் Amaranthaceae. Isoamarantin, Betaine, Amaranthoside, Amaricin, Amarantin போன்ற தாவர வேதிப்பொருள்கள் அறைக்கீரையின் மருத்துவக் குணத்துக்குக் காரணமாகின்றன.
சமையல் நுணுக்கங்கள்:
# அறைக்கீரைத் தண்டுகளைக் குப்பையில் தூக்கிப் போடாமல் சிறு சிறு துண்டுகளாக வெட்டி புளித்தண்ணீரில் போட்டு, வெங்காயம், உப்பு சேர்த்து வேகவைத்துச் சாப்பிட உடல் வலுப்பெறும்.
# அறைக்கீரையின் இலைகளை அதன் தண்டிலிருந்து கிள்ளி தனியே எடுக்க வேண்டும். சமைப்பதற்கு முன் மூன்று, நான்கு முறையாவது நல்ல தண்ணீரில் கழுவுவது நல்லது. கீரையின் தண்டுகளைவிட, அதன் இலைகளில்தாம் அதிக அளவிலான ஃபிளாவனாய்டுகளும் பீனாலிக் பொருள்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தண்டுகளைப் பயன்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை.
# அறைக்கீரையைச் சமைப்பதற்கு மண் சட்டி உகந்தது. இரும்பு வாணலியும் ஏற்றது. குக்கரில் சமைக்கும்போது, சத்துகள் இழப்பு ஏற்படலாம். வெந்த அறைக்கீரையை மிக்ஸியில் கடைவதற்குப் பதிலாக மண்சட்டிகளில் மரமத்து கொண்டு கடையலாம்.
# அறைக்கீரையை வேகவைப்பதற்கு முன், எண்ணெய்யில் வெங்காய வடகத்தை வதக்கிச் சேர்த்தால் நல்ல சுவை, வாசனையைத் தரும்.
- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com