

ஷவர்மா சாப்பிட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகச் செய்திகள் வருகின்றன. என்ன காரணம்? இதை எப்படித் தடுப்பது? - கோகிலன், திருநெல்வேலி.
நாள்பட்ட இறைச்சியால் ஷவர்மா தயாரிக்கப்படுவது, இறைச்சியைப் பதப்படுத்துவதில் ஏற்படும் குறைபாடு போன்ற காரணங்களால் ஷவர்மா கெட்டுப்போகும். இறைச்சியைச் சரியாக வேகவைக்காவிட்டாலும் இப்படிக் கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. ஹோட்டல்களில் ஷவர்மா போன்ற உணவு வகைகளை தயாரிக்க உதவும் இறைச்சிகள் வெளியில் கம்பிகளில் பல மணி நேரத்துக்குச் சுற்றிவைக்கப்பட்டிருக்கும்.
அப்போது அவற்றில் பாக்டீரியா தொற்றிக்கொள்ளும். நன்றாக வேகவைத்த இறைச்சியில் பாக்டீரியா அழிந்துவிடும். முறையாக வேகவைக்காத அல்லது பதப்படுத்தப்படாத இறைச்சியில் பாக்டீரியா அழியாது. அப்போது அவை உணவை நஞ்சாக்கிவிடும். அவை வெளியிடும் நச்சுகள் காரணமாகப் பயனாளிக்குக் கடுமையாக வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், இந்த அளவோடு பாதிப்புகள் நின்றுவிடும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால், இதன் பாதிப்பு உயிரிழப்பு வரை சென்றுவிடுகிறது.
இறைச்சியை நன்றாக வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைத்ததை 2 மணி நேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். குளிர்சாதனப்பெட்டியில் பாதுகாத்து மறுபடியும் மறுபடியும் வேக வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சரியான வெப்பநிலையில் அவற்றைப் பாதுகாக்காவிட்டால் கிருமிகள் வளர்ந்துவிடும்.
உணவைச் சாப்பிடும்போது மணம், சுவையில் வித்தியாசம் தெரிந்தால் உடனே அதை உண்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தால் சுயமருத்துவம் செய்யாதீர்கள். உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். எவ்வளவு விரைவில் நச்சுணவுக்கு சிகிச்சை கிடைக்கிறதோ அவ்வளவு விரைவில் நிவாரணமும் கிடைக்கும். சிகிச்சை கிடைக்க தாமதிக்கும்போது விளைவுகள் மோசமாகும்.
என் அப்பாவுக்கு வயது 75. இதய பலவீனம் (Heart failure) காரணமாகச் சிகிச்சை எடுத்துவருகிறார். அவருக்குத் தினமும் ஒரு லிட்டருக்கு மேல் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று இதயநல மருத்துவர் சொல்லி யிருக்கிறார். ஆனால், அப்பா அதைக் கேட்பதில்லை. அதிகமாகவே தண்ணீர் அருந்துகிறார். இதனால் ஆபத்து வருமா, டாக்டர்? - முத்தமிழ்ச்செல்வி, ராணிப்பேட்டை.
இதயத்தின் செயல்பாடு குறைவாக இருப்பவர்கள் தண்ணீர், திரவ உணவு வகைகளை எடுத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். தண்ணீரை அதிகமாக அருந்தும்போது, அந்த நபருக்கு ரத்தத்தின் கன அளவு அதிகமாகும். அப்போது இதயம் வழக்கத்துக்கு மாறாக, அதிக விசையுடன் உடல் முழுமைக்கும் உந்தித்தள்ள வேண்டிவரும். உங்கள் அப்பாவுக்கு ஏற்கெனவே இதயம் பலவீனமாக இருக்கிறது.
இந்த நிலைமையில், தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் அருந்தினால், ரத்தத்தை உடலுக்குள் உந்தித்தள்ளுவது இதயத்துக்குச் சிரமத்தைக் கொடுக்கும். இப்படிச் சிரமத்துடன் இதயம் தொடர்ந்து செயல்படும்போது, இதயம் இன்னும் பலவீனம் அடையும். மூச்சுத்திணறல் ஏற்படும். அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். உங்கள் அப்பாவிடம் விவரம் சொல்லி புரியவையுங்கள்.
எனக்கு மூன்று மாதங்களாக அடிக்கடி மலம் கழிக்கும் வழக்கம் இருக்கிறது. தற்போது எட்டு கிலோவரை எடை குறைந்துள்ளது. அதிகப்படியான வாயு பிரச்சினையால் சில வேளைகளில் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. தயிர், மோர் சாப்பிடும்பொழுது சற்று குறைகிறது. தற்போது ரத்தம், மலம், ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் செய்து பார்த்ததில் எவ்விதத் தொந்தரவும் இல்லை என்று சொல்கிறார்கள். மருத்துவர் Rifagut 400, bifilac மாத்திரை 15 நாள்களுக்கு உட்கொள்ளச் சொல்லியிருக்கிறார். ஆனாலும், சில நேரம் எதனால் இப்பிரச்சினை தொடர்கிறது என்று தெரியவில்லை. மிகுந்த மன அழுத்தம் ஏற்படுகிறது. தயவு செய்து விளக்கவும். - எம். ராஜீவ் காந்தி, மின்னஞ்சலில்.
உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு ‘குடல் அழற்சி நோய்’ (Inflammatory Bowel Disease – IBD) என்று பெயர். இந்த நோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்பட வில்லை. சில காரணிகள் இது ஏற்படுவதைத் தூண்டலாம் என்று மட்டும் தெரியவந்துள்ளது. அவற்றில் முக்கியமானவை, மரபுவழியில் மரபணுவில் ஏற்படும் பிழைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, மன அழுத்தம் போன்ற புறச்சூழல் பிரச்சினைகள் போன்றவற்றைச் சொல்லலாம். உங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாகச் சொல்லி யிருக்கிறீர்கள்.
அதைத் தவிர்க்க வழி தேடுங்கள். தினமும் முறையான உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். தியானம், யோகா உதவலாம். எந்த நேரமும் மனதை இறுக்கமாக வைத்துக்கொள்வதை நிறுத்திவிட்டு, நண்பர்களுடன் கலகலப்பாகப் பேசிப் பழகுங்கள். மனநல ஆலோசனை கேட்டுக்கொள்வதும் நல்லது. உங்கள் பிரச்சினை முடிவுக்கு வரும், பயப்பட வேண்டாம்.
சிசேரியன் மூலம் நான் குழந்தை பெற்றுக் கொண்டேன். பத்து மாதங்கள் ஆகின்றன. இன்னமும் என் வயிற்றின் அளவு குறையவில்லை. என்ன செய்யலாம், டாக்டர்? - வான்மதி, சென்னை-3.
சிசேரியன் சிகிச்சையில் குழந்தை பெற்றுக்கொண்டவர்கள் சிகிச்சைக்குப் பிறகு ஆறு வாரங்கள் முதல் மூன்று மாதங்களுக்குள் வயிற்றுத் தசைகளுக்கான உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். உங்களுக்கு உடற்பயிற்சி இல்லாத காரணத்தால்தான் வயிற்றுத் தசை பெருகியுள்ளது. பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் வயிற்றுத் தசைகளுக்கான பயிற்சிகளைத் தொடங்குங்கள். உங்கள் வயிற்றுப் பகுதியிலுள்ள தசைகள் குறைய ஆரம்பிக்கும்.
எனக்கு ‘peripheral neuropathy’-யும் ‘varicose veins’-ம் இருக்கின்றன. நான் உண்ணும் உணவு மூலமாகவே இவற்றைக் குணப்படுத்த முடியுமா? இல்லை, ஏதாவது தைலம் தடவ வேண்டுமா? - சுப்பையா அருணாசலம், சென்னை.
தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் புறநரம்புகள், ரத்தநாளங்கள் சார்ந்து ஏற்பட்டுள்ளன. இவற்றுக்குக் காரணம் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால்தான் பிரச்சினைகள் சரியாகும். உணவு மூலம் மட்டும் இவற்றைக் குணப்படுத்திவிட முடியாது. ‘புற நரம்பு வலுவிழப்பு’க்கு (Peripheral neuropathy) வேண்டுமானால் சில களிம்புகள் இருக் கின்றன. தேய்த்துக்கொள்ளலாம். ஆனால், அவை தற்காலிகத் தீர்வைத்தான் தரும்.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com