

படுத்துக்கொண்டே செல்போன் பார்த்தால் எனக்குத் தலைவலி வருகிறது. இது பார்வைக் கோளாறுக்கு அறிகுறியா?
- பிரமிளா சேகர், சென்னை-4.
தொடர்ந்து பல மணி நேரம் திறன்பேசியைப் பார்த்தால், கண்கள் சோர்வடையும்; வறண்டுவிடும்; தலைவலி வரும். அதைத் தொடர்ந்து பார்வை குறையும். அதனால், அரை மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து திறன்பேசியைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். படுத்துக்கொண்டே திறன்பேசியைப் பார்ப்பதும் இருட்டில் திறன்பேசியைப் பார்ப்பதும் தவறு. தொடர்ந்து திறன்பேசியைப் பார்க்க வேண்டியது அவசியமென்றால், அடிக்கடி கண்களைச் சிமிட்ட வேண்டும்.
இதனால், கண்களில் ஈரம் படியும். இது கண் எரிச்சலைத் தடுக்கும். அடுத்து, திறன்பேசித் திரையில் வெளிச்சம் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். திரை சுத்தமாகவும் இருக்க வேண்டும். கண்ணுக்கு மிக அருகில் திறன்பேசியை வைத்துப் பார்க்கக் கூடாது; கண்ணுக்கும் திறன்பேசிக்கும் இடையே 40 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும்.
ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு முறை கண்களை விலக்கி, 20 அடி தூரத்திலுள்ள ஒரு பொருளை 20 விநாடிகளுக்குப் பார்த்தால் கண் பாதிப்பு அடைவதைத் தடுக்கலாம். இந்த வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகும் உங்களுக்குத் தலைவலி நீடித்தால், கண்நல மருத்துவரைப் பாருங்கள்.
எனக்கு 55 வயது. சர்க்கரை நோய் இருக்கிறது. மாத்திரை சாப்பிட்டுவருகிறேன். காலையில் எழுந்ததும் குதிகாலில் வலி ஏற்படுகிறது. நடக்க ஆரம்பித்த பிறகு வலி குறைகிறது. என்ன காரணம்? இதற்கு என்ன சிகிச்சை?
- க. வைத்தியநாதன், காஞ்சிபுரம்.
காலையில் எழுந்ததும் ஏற்படுகிற குதிகால் வலிக்கு நவீன மருத்துவம் ‘குதிநாண் உறையழற்சி’ (Plantar Fasciitis) என்று பெயர் சூட்டியிருக்கிறது. குதிகால் எலும்பிலிருந்து ‘குதிநாண் தட்டைச்சதை’ (Plantar Aponeurosis) எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்தத் திசுக்கொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால், குதிகால் வலி ஏற்படுகிறது. குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுக்க ஒரு ‘திரவப் பை’ (Bursa) உள்ளது.
இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்குக் குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு ‘கால்கேனியல் ஸ்பர்’ (Calcaneal Spur) என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவது வழக்கம். ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தாலும் குதிகால் வலி வரலாம். முடக்குவாதம், தன்தடுப்பாற்றல் நோய், நீரிழிவு நோய், கோணலாக வளர்ந்த பாதம், தட்டைப் பாதம், எலும்பு வலுவிழப்பு நோய் போன்ற பல காரணங்களாலும் இது வரலாம்.
கால் பாதத்தை எக்ஸ்-ரே அல்லது சி.டி.ஸ்கேன் எடுத்துப் பார்த்தும் சில ரத்தப் பரிசோதனைகள் செய்தும் நோயை உறுதிப்படுத்தலாம். வலி ஆரம்பநிலையில் இருக்குமானால், சில வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம். பிசியோதெரபி செய்யலாம். பலன் கிடைக்கும்.
முக்கியமாக, வெறும் காலில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். கால்களுக்குப் பொருத்தமில்லாத காலணிகளையோ ஷூக்களையோ அணியக் கூடாது. மருத்துவர் ஆலோசனைப்படி இதற்கென்றே உள்ள MCP ( Multicellular polyurethane) காலணிகளை அணிந்துகொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும்போதும் இந்தக் காலணிகளை அணிய வேண்டியது அவசியம்.
எனக்கு வயது 47. பிபி அதிகமாக உள்ளது. 20 வருடங்களாகச் சர்க்கரை நோயும் உண்டு. என் அப்பாவுக்கு 60 வயதில் பக்கவாதம் வந்தது. எனக்கும் பக்கவாதம் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. பக்கவாதம் வராமல் தடுக்க நான் என்ன செய்ய வேண்டும், டாக்டர்?
- செண்பகராமன், சென்னை-24
உங்கள் அப்பாவுக்குப் பக்கவாதம் வந்திருப்பதாலும், உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாலும், ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாலும் மற்றவர்களைவிட உங்களுக்குப் பக்கவாதம் வருவதற்கு 30 % சாத்தியம் அதிகம். அதற்காகப் பதற்றப்பட வேண்டியதில்லை. எச்சரிக்கையாக இருந்தால் போதும். பக்கவாதம் வருவதைத் தூண்டும் காரணிகளான உயர் ரத்த அழுத்தத்தையும் ரத்தச் சர்க்கரையையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.
உடல் எடையைப் பேணுங் கள். ரத்த கொலஸ்ட்ரால் அளவும் கட்டுக்குள் இருக்கட்டும். உணவில் உப்பைக் குறையுங்கள். துரித உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். புகை பிடிக்காதீர்கள். மது அருந்தாதீர்கள். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். யோகாவும் உதவும். மன அழுத்தம் ஏற்பட வழி தராதீர்கள். தியானம் செய்யுங்கள். நல்ல உறக்கமும் போதிய ஓய்வும் முக்கியம்.
நான் ஆறுமாதக் கர்ப்பிணி. எனக்கு ஆஸ்துமா ‘வீசிங்’ இருக்கிறது. வழக்கமாக நான் பயன்படுத்தும் இன்ஹேலர்களைப் பயன்படுத்தலாமா? ‘வீசிங்’ மிக அதிகமாக இருந்தால் நரம்பில் ஊசி செலுத்துவார்கள். இப்படி நரம்பில் ஊசி செலுத்திக்கொண்டால் அது குழந்தையைப் பாதிக்குமா?
- காவ்யா, திருநெல்வேலி.
ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் கர்ப்ப காலத்தில் இன்ஹேலர்களைப் பயன்படுத்தினால் எந்தப் பாதிப்பும் வராது. இன்ஹேலரில் இருக்கும் மருந்துகள் நுரையீரல்களில் மட்டும்தான் செயல்படும். ரத்தத்தில் கலந்து உடலுக்குள் அவை நுழைவதில்லை. ஆகவே, அச்சம் வேண்டாம். குழந்தைக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. இன்ஹேலர், ஆக்ஸிஜன் செலுத்திய பிறகும் ‘வீசிங்’ குறையவில்லை என்றால் சில மருந்துகளைச் சிரை ரத்தக்குழாயில் செலுத்துவார்கள்.
இதற்கு மருத்துவரின் ஆலோசனை அவசியம். இயன்ற அளவுக்கு இன்ஹேலரைப் பயன்படுத்திச் சமாளிப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் ஆஸ்துமா பிரச்சினையைச் சமாளிக்க, தகுந்த வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதுதான் சிறந்தது. வீட்டை சுத்தமாகப் பராமரிப்பது, தூசு இல்லாத இடங்களுக்கு மட்டுமே செல்வது, பனியில் உலவுவதைத் தவிர்ப்பது, பூக்கள் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது, மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்வது போன்ற வழிகளைப் பின்பற்றலாம்.
- gganesan95@gmail.com