பச்சை வைரம் 01: கீரைகளின் தேசம்

பச்சை வைரம் 01: கீரைகளின் தேசம்
Updated on
3 min read

வீட்டுக்கு அருகிலோ பின்புறத் தோட்டத்திலோ யாருடைய உதவியுமின்றித் கீரைகள் தாமாகவே முளைத்துப் பசுமை பரப்பிய காலம் ஒன்று இருந்தது! அவற்றைப் பறித்து நன்றாக அலசி நளபாகமாகச் சமைத்துச் சுவையுடன் ருசித்து ஆரோக்கியப் பற்றாக்குறை இல்லாமல் வாழ்ந்துவந்தோம். அப்போது ‘ஊட்டச்சத்துப் பற்றாக்குறை காரணமாக நோய்களின் தாக்கம்’ என்கிற பேச்சுக்குப் பெரிதாக இடமிருக்கவில்லை!

ஆனால், இன்று கண்டுகொள்ளப்படாத, உதாசீனப்படுத்தும் பொருளாகக் கீரைகளை மாற்றிவிட்டோம். பிறகென்ன… நுண்சத்துப் பற்றாக்குறையால் அவதிப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும், ரத்தசோகையால் பாதிக்கப்படும் இளம்பெண்கள், கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. வெகு அரிதாகக் கேள்விப்பட்டுவந்த ‘ஊட்டக் குறைபாடு’ எனும் பதம், இப்போது அடிக்கடி செவிகளில் எதிரொலிக்கிறது.

கீரைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை தெரியுமா? கீரைகளில்தாம் எத்தனை ரகங்கள்! பஞ்ச காலங்களின்போது பலரது பசியைத் தீர்த்துப் பஞ்சத்துக்குத் தாக்குப்பிடிக்க உதவியவை கீரைகளே. வறுமை வாட்டியபோது, கீரைகளை முழுமுதற் உணவாக மக்கள் சாப்பிட்டதாகச் சங்க இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.

விட்டமின்கள், தாதுப்பொருள்கள் எனக் கீரைகளில் இல்லாத ஊட்டங்களே இல்லை. மொத்தத்தில் கீரைகளுக்குச் ‘சத்துப் பெட்டகம்’ எனத் தாராளமாகப் பெயர் சூட்டலாம். விட்டமின்களுக்கு எடுத்துக்காட்டாகச் சுட்டப்படும் கீரைகளின் பெயர்கள், சிறு வயது முதல் அடிக்கடி நமது செவிகளில் பதிந்திருக்கின்றன. இருப்பினும் அவற்றைத் தினசரி சாப்பிடும் பழக்கம் மட்டும் வெகுவாகக் குறைந்துகொண்டே வருகிறது. மிகக் குறைந்த விலையில் விலைமதிப்பில்லா ஊட்டங்களை வழங்குபவை கீரைகளே.

கிராமத்துக் கீரை சமையல்: பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் கீரைகளின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. எத்தனையோ வகையான கீரைகள், உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கின்றன. நகரத்துவாசிகளுக்குப் பழக்கமில்லாத பல கீரை ரகங்கள், கிராமத்துவாசிகளுக்கு நெருக்கமாக இருக்கின்றன. ‘கிராமத்துக் கீரை சமையல்’ எனும் கலை, இப்போதும் பல கிராமங்களில் உண்டு.

மழைக் காலங்களில் காடுகளில் முளைக்கும் கீரைகளை மிளகு, திப்பிலி சேர்த்துப் பருவநிலைக்கு ஏற்ப சமைக்கும் நுணுக்கத்தை மேற்கு மலைத்தொடர் மக்களிடம் இன்றும் காணலாம். கீரைச் சமையலுக்கான தனிக்குடுவையில் கீரை, பருப்பு சேர்த்து மத்தால் கடைந்து உலர்ந்த வடகத்தைத் தூவிப் பரிமாறப்படும் காட்டுக் கீரை சமையலை ருசிப்பதற்காகவே மலைவாழ் பகுதிக்கு ‘உணவுச் சுற்றுலா’ செல்லலாம்.

குளிர்காலத்துக்கான கீரைகள் (தூதுவளை), வேனிற்காலத்துக்கான கீரைகள் (பசலை) எனக் காலத்துக்கேற்ப கீரைகளைப் பயன்படுத்தும் உத்தி நமது உணவுக் கலாச்சாரத்தில் சிறப்புமிக்கது. கீரைகளை எவ்வகையில் சமைத்தால் செரிமானத்துக்குச் சிக்கல் ஏற்படுத்தாமல் கீரைகளின் முழுப் பலன்களையும் அடையலாம் என்கிற வகையில் நமது கீரையைச் சமைக்கும் பண்பு அமைந்திருக்கிறது.

கீரைகளை வைத்துச் சமையலில் பெரிய மாயாஜாலமே நிகழ்த்தலாம். மசியல், துவையல், கடையல், சட்னி, பொரியல், ரசம், குழம்பு என வெவ்வேறு வகைகளில் கீரைகளைச் சமைத்துச் சுவைத்து மகிழலாம். உணவாகப் பயன்படும் கீரைகள், மருந்தாகவும் செயல்பட்டு பல நோய்களைத் தடுக்கின்றன; பல நோய்களை நீக்குகின்றன. உணவில் கீரைகளின் சேர்மானம் இருக்கும்போது சுவைக்கும் பஞ்சம் இருக்காது! ஒரு உணவைச் சுவைமிக்க உணவாக மாற்றுவது கீரைகளின் சேர்மானம் என்றால் மிகையாகாது.

ஆவி பறக்கும் கேப்பைக் களிக்கு, சூடான முருங்கைக் கீரை பருப்புக் குழம்பைத் தொட்டு ருசிப்பதில்தான் எவ்வளவு ஆனந்தம்! சுவையோடு சேர்த்து ஊட்டங்களையும் வாரி வழங்கும் கீரைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

ஏழைகளின் உணவா? - கீரைகளின் பயன்பாடு குறித்து நினைக்கும்போது, ‘மரத்திலிருக்கும் பலாக்காயைவிட, கையிலிருக்கும் களாக்காயே மேல்’ எனும் பழமொழி நினைவுக்கு வருகிறது. அதாவது நம் கையிலிருக்கும் இயற்கையான கீரை ரகங்களைத் தவிர்த்துவிட்டு, ஊட்டப் பற்றாக்குறையால் நோய் ஏற்பட்ட பிறகு, செயற்கை சத்து மாத்திரைகளையும் ஊட்ட டானிக்குகளையும் எடுத்துக்கொள்வது முறையா என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். மறுபுறம் கீரைகளின் உலர்ந்த பொடிகளை வணிகப் பொருளாக்கி, பல நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யும் இணையவழி வியாபாரமும் இப்போது கொடிகட்டிப் பறக்கிறது.

களைக்கொல்லிகளால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட அடிப்படை உணவுப் பொருள் கீரைகளே. வயல் வரப்புகளில், மற்ற தானியங்களுக்கு அருகில், விவசாய நிலங்களில் எனச் சாதாரணமாக முளைத்துக் கிடந்த கீரை ரகங்களின் எண்ணிக்கை, களைக்கொல்லிகளின் வருகைக்குப் பிறகு பெருமளவில் குறைந்துவிட்டது. களைக்கொல்லிகளிடமிருந்து தப்பிப் பிழைக்கும் கீரை ரகங்கள், பூச்சிக்கொல்லிகளின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன.

கீரை தேசம்: கீரைகளை நீரில் நன்றாக அலசிய பிறகு சமையலுக்குப் பயன்படுத்துவதே சிறந்தது. நம்பகமான உள்ளூர் விவசாயிகளைக் கண்டறிந்து, பூச்சிக்கொல்லி அடிக்கப்படாத கீரைகளை வாங்கிப் பயன்படுத்தலாம். வாய்ப்பிருந்தால் உங்கள் வீட்டுத் தோட்டத்திலோ, மாடித் தோட்டத்திலோ தேவைப்படும் கீரைகளை வளர்த்துப் பயன்படுத்திக்கொள்வது கூடுதல் சிறப்பு.

நம்மோடு அன்றாடம் புழங்கிய கீரைகளை அடையாளம் காணச் சிரமப்படும் இன்றைய தலைமுறையினரிடம் கீரைகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ‘கீரைகளை மறந்த தலைமுறை’ எனும் அவப்பெயர் ஏற்படுவதற்கு முன்னர், கீரைகள் சார்ந்த தெளிவு அனைவருக்குள்ளும் பிறப்பது அத்தியாவசியம்.

தரைபடர் தாவரமாக, குறுஞ்செடியாக, கொடியாக, மரமாக எனப் பல்வேறு பரிமாணங்களில் கீரைகள் நமக்காகக் காத்திருக்கின்றன. நமக்கு அருகிலேயே இருக்கும் கீரைகள் என்னென்ன, அவற்றின் பயன்பாடு, வேறு பெயர்கள், கீரைப் பழமொழிகள், கீரைகளை அடையாளம் காணும் முறை, மருத்துவப் பயன்கள், ஆய்வுசார் கருத்துகள் எனப் பலவற்றைப் பேசப்போகிறது இந்தத் தொடர்.

வாருங்கள் பசுமையான கீரைகளின் தேசத்துக்குள் பயணத்தைத் தொடங்குவோம்!

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.co

டாக்டர் வி.விக்ரம்குமார்

சித்த மருத்துவ எழுத்து சார்ந்து இயங்கிவரும் இளைஞர். அரசு சித்த மருத்துவர். கரோனா தொற்றுக் காலத்தில் நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளித்ததற்காக தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்றவர். பல்வேறு இதழ்களிலும் நூல்கள் வழியாகவும் தொடர்ச்சியாக எழுதிவருபவர். 'இந்து தமிழ் திசை' வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான எழுத்தாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in