Last Updated : 30 Dec, 2017 12:05 PM

 

Published : 30 Dec 2017 12:05 PM
Last Updated : 30 Dec 2017 12:05 PM

விடைபெறும் 2017: உலுக்கியெடுத்த உடல்நலப் பிரச்சினைகள்

ந்த ஆண்டு மருத்துவத் துறையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த ஒரு மீள் பார்வை...

தடுப்பூசி சர்ச்சை

ரூபெல்லா அம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்கு குழந்தைகள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியது. ஆனால், இந்தத் தடுப்பூசி போடுவதற்குப் பின்னணியில் சில நிறுவனங்கள் இருப்பதாகவும், தடுப்பூசி தேவையற்ற பின்விளைவுகளை உருவாக்கும் என்கிற பிரசாரமும் சமூக வலைத்தளத் தகவல்களும் பரவலாகின. தடுப்பூசி விவகாரத்தை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும், மோசமான ஒரு நோயைக் கட்டுப்படுத்த அரசு இலவசமாகப் போடும் தடுப்பூசியை தவிர்க்க வேண்டாமென்ற வாதமும் தீவிரமாக இருந்தது.

shutterstock_369189926ஆட்டிப்படைத்த டெங்கு

சமீப ஆண்டுகளாகவே தமிழகத்தில் சுகாதார நிலைமை மோசமாக இருப்பதற்கான சாட்சியாக இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் விஸ்வரூபமெடுத்தது. அதைக் கட்டுப்படுத்தத் திணறிய அரசு, பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக ‘மர்மக் காய்ச்சல்’ என்று திசைதிருப்பிக் கொண்டிருந்தது. கடைசியில் நூற்றுக்கணக்கானோர் டெங்குவுக்குப் பலியாயினர்.

கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி மாநிலம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குக் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றனர். சுகாதார நிலைமையை மேம்படுத்தாமல், டெங்கு கொசு பரவ பொதுமக்களே காரணம் எனக் குற்றஞ்சாட்டி அபராதம் விதிப்பது, நோட்டீஸ் கொடுப்பது போன்ற செயல்பாடுகளில் தமிழக அரசு தீவிரம் காட்டியது.

கஷாயக் குற்றச்சாட்டு

டெங்குக் காய்ச்சல் தீவிரமடைந்ததை ஒட்டி சித்த மருந்தான நிலவேம்புக் கஷாயத்தால் டெங்கு பாதிப்பைக் குறைக்கலாம், டெங்கு வராமல் முன்கூட்டியே தடுத்துக்கொள்ளலாம் என்று அரசு மேற்கொண்ட பிரசாரம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்தப் பிரச்சினையைக் கையாளுவதில் செய்த தவறுகளை மறைக்கவே நிலவேம்புக் கஷாயத்தை அரசு முன்னிறுத்துகிறது என்பதே இந்த வாதத்தின் அடிப்படை. உண்மையில் நிலவேம்புக் கஷாயம் பலன் அளித்தாலும், அறிவியல்பூர்வமான பார்வை என்கிற பெயரில் சித்த மருத்துவத்துக்கு எதிரான கருத்துகள் தீவிரமாக முன்வைக்கப்பட்டன.

shutterstock_642839332right

அதேநேரம், சித்த மருத்துவத்தையும் ஆராய்ச்சியையும் மேம்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை.

தற்கொலை விளையாட்டு

சிறு ஆபத்துகளில் ஆரம்பித்து படிப்படியாக தற்கொலைக்குத் தூண்டும் இணையதள விளையாட்டு ‘புளூவேல்’, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் பரவி பெரும் பதற்றத்தை உருவாக்கியது. ரஷ்யாவை மையமாகக் கொண்ட இந்த விளையாட்டில் 50 சவால்கள் இருக்கும். கடைசி சவால் தற்கொலை செய்துகொள்வது. இதை விளையாடியதால் மதுரை அருகேயுள்ள விளாச்சேரியைச் சேர்ந்த விக்னேஷ் (19) தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்தது. தொடர்ந்து புதுச்சேரியைச் சேர்ந்த எம்.பி.ஏ. மாணவர் தற்கொலைக்கும் இந்த விளையாட்டு காரணமாகச் சந்தேகிக்கப்பட்டது.

இந்த விளையாட்டின் உள்ளே சென்றுவிட்டால் தப்பிக்க முடியவில்லை, எப்படி வெளியேறுவது என்று தெரியவில்லை என்று சில மாணவர்கள் அவசர அழைப்பு மைய எண்களில் தெரிவித்துள்ளனர். அதேநேரம் புளூவேல் விளையாட்டுக்கும் தற்கொலைகளுக்கும் நேரடித் தொடர்பில்லை. இணையதள தற்கொலைக் குழுக்களையும் இதையும் குழப்பிக் கொள்ளக்கூடாது என்கிற வாதத்தையும் சில உளவியல் நிபுணர்கள் முன்வைத்தனர்.

shutterstock_253118032 (1)நோய் இறப்பில் முதலிடம்!

‘தி லான்செட்’ எனும் பிரபல மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை தரும் தகவலின்படி, காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு உள்ளிட்டவற்றால் பரவும் நோய்களால் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தப் பின்னணியில் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான சுகாதாரம், ஆரோக்கியத்துக்கு மத்திய அரசு தரும் முக்கியத்துவம் என்ன என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பணம் பறித்த உயிர்கள்

உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூர் அரசுப் பொது மருத்துவமனையில் 3 நாட்களில் 61 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து பலியானது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் உருவாக்கியது. குழந்தைகள் இறப்புக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதில் மருத்துவமனை நிர்வாகம் காட்டிய அலட்சியமே காரணம் என்பதும், அது நிர்வாகத்தின் மேல்மட்டத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது என்பதுமே அதிர்ச்சிக்கு முக்கியக் காரணம்.

shutterstock_664201063right

இந்தப் பிரச்சினையைச் சீரமைக்காமல் மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறந்தனர் என்றும், இதுபோன்ற இறப்பு எண்ணிக்கை ஒன்றும் அதிகமில்லை என்றும் ஆளும் பா.ஜ.க அரசு பேசிக்கொண்டிருந்தது. இந்தப் பின்னணியில் தனது சொந்தச் செலவில் குழந்தைகளைக் காப்பாற்றிக்கொண்டிருந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த தற்காலிக மருத்துவர் கஃபீல் கானை பணி இடைநீக்கம் செய்ததுடன் கைதும் செய்ததால் உத்தரபிரதேச அரசு, பல விமர்சனங்களை எதிர்கொண்டது.

உயிர் காக்கத் தவறிய வரி

பண மதிப்பிழப்புப் பிரச்சினையும், ஜி.எஸ்.டியும் மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் சிக்கல்களை உருவாக்கியிருக்கின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.யின் கீழ் 12 சதவீத வரி விதிக்கப்படுவது இந்த மருத்துவ முறைகளுக்கு எதிரானதாக அமைந்திருக்கிறது.

மற்றொருபுறம் புற்றுநோய், எச்.ஐ.வி., நீரிழிவு, ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட 761 மருந்துகளின் விலையை ஜி.எஸ்.டி.க்கு முன்னதாக மருந்து விலைக் கட்டுப்பாட்டு அமைப்பான என்.பி.பி.ஏ. குறைப்பதாக அறிவித்தது. இருந்தாலும் மாநிலங்களின் நிலையைப் பொறுத்து 2-3 சதவீதம் மட்டுமே விலை கூடவோ குறையவோ செய்யும் என்பதையும் அந்த அமைப்பு தெரிவித்தது. அந்த வகையில் ஆங்கில மருந்துகளின் விலையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

shutterstock_366083738மாறாத ஸ்டென்ட் விலை

இதய நோய்க்கு ரத்தக் குழாய் அடைப்பு காரணமாகிறது. இந்த அடைப்பைப் போக்கும் சிகிச்சையான ஸ்டென்ட் பொருத்துதலில் பயன்படுத்தப்படும் ஸ்டென்ட்களுக்கு அரசு மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு விலையைக் குறைத்தாலும், அது எந்த வகையிலும் நோயாளிகளுக்குப் பயனளிப்பதாக அமையவில்லை. ஸ்டென்ட் விற்பனையில் தனியார் நிறுவனங்கள் 400 சதவீத லாபம் பெறுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு, ஸ்டென்ட்களின் விலையை 50 சதவீதம் குறைக்க உத்தரவிட்டது. ஆனால், இந்த நடைமுறை வந்த பிறகும் சிகிச்சைக்கான செலவுக் கட்டமைப்பை மருத்துவமனைகள் மாற்றியமைத்து பழைய கட்டணம் தொடரும்படி செய்வது நோயாளிகளை கடுமையாக பாதிக்கிறது.

ரத்த அழுத்த சர்ச்சை

அமெரிக்க இதயநல மருத்துவர்கள் சங்கம் உயர் ரத்த அழுத்தத்துக்கான உச்சவரம்பை 140/90 மி.மீ.லிருந்து 130/80 மி.மீ.க்குக் சமீபத்தில் குறைத்து அறிவித்தது. பழைய உயர் ரத்த அழுத்த உச்சவரம்புப்படி இந்தியாவில் 33 கோடிப் பேர் ரத்த அழுத்த நோயாளிகளாக (2014-ல் புள்ளிவிவரம்) இருந்தனர். புதிய அறிவிப்பின்படி அத்துடன் புதிதாக 7 கோடிப் பேர் சேர்க்கப்பட்டுவிட்டனர். மருந்து நிறுவனங்களின் மறைமுக நெருக்கடியால் இதுபோன்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக விமர்சிக்கப்படுகிறது.

shutterstock_261082472right

நீரிழிவு நோய், இதயநோய் போன்ற தொற்றாத நோய்கள் சார்ந்த வரையறைகள் திடீர் திடீரென மாற்றியமைக்கப்படுவது மருந்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன்தான் என்கிற விமர்சனம் ஏற்கெனவே இருக்கும் நிலையில் இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் பதவி

மருத்துவ உலகம் சார்ந்த பல செய்திகள் இந்த ஆண்டில் அயர்ச்சி அளித்தாலும், ஒரு செய்தி மகிழ்ச்சியைத் தரக்கூடியது. அது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் பொது இயக்குநராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சௌம்யா சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவனத்தின் துணைப் பொது இயக்குநராக அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டதுதான். உலக சுகாதார நிறுவனத்தில் ஒரு இந்தியர் வகிக்கும் மிகப் பெரிய பதவி இது. குழந்தை நல மருத்துவத்தில் 30 ஆண்டு அனுபவம் கொண்ட சௌம்யா, காசநோய், எச்.ஐ.வி., உள்ளிட்ட நோய்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக உல அளவில் அறியப்பட்டவர். மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x