

பரபரப்பான வாழ்க்கை நடைமுறைக்குப் பலரும் பழக்கப்பட்டுவிட்டோம். அதன் விளைவு, “என்னடா வாழ்க்கை இது. உடல் வலி கொல்கிறது” என்பது போன்ற துயரக் குரல்கள் இளம் தலைமுறையினர் மத்தியிலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன.
முதுகு வலி, கழுத்து வலிப் பிரச்சினைகள் நடுத்தர வயதுடைய ஆணையோ, பெண்ணையோ பாதிக்கும்போது மன வேதனைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதில், முதுகு வலிக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அனைவராலும் அறியப்படும் பொதுவான காரணம் முதுகு ஜவ்வு விலகல். நமது முதுகில் மொத்தம் 33 எலும்புகள் உள்ளன. இந்த முதுகு எலும்புகளுக்கு இடையே 23 இடங்களில் நீள்வட்ட வடிமான ‘டிஸ்க்’ எனப்படும் வட்டுப் பகுதி உள்ளது.
அதிர்வுத் தாங்கி: நாம் நடக்கும்போதும் வேலை செய்யும்போதும் உடம்பில் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கும் வண்ணம் இந்த வட்டுப் பகுதி உள்ளது. அதேபோல எலும்புகளுக்கு இடையே ஏற்படும் உராய்வைக் குறைக்கும் வண்ணம் இந்தப் பகுதி அதிர்வுத் தாங்கியாகச் செயல்படுகிறது. அதாவது ஸ்பிரிங் போன்று முதுகுத் தண்டுவடத்தைத் தாங்கி, அதன் உள்ளே செல்லும் முக்கிய நரம்புகளை இது பாதுகாக்கிறது.
இந்த வட்டுப் போன்ற பகுதியில் நீர்ச்சத்து சுமார் 80 சதவீதம் உள்ளது. வயது முதிர்ச்சி அடையும்போது உடம்பில் உள்ள நீர்ச்சத்து அளவு குறைந்து வட்டுப் பகுதியில் உள்ள நீரின் அளவும் குறையத் தொடங்குகிறது. இதனால், வட்டு உயரத்தின் அளவு குறைய நேரிடலாம். இதன் காரணமாக எலும்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியும் குறையத் தொடங்கும்போது, முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகளுக்கு இடையே செல்லும் நரம்புகளுக்கான வழித்தடம் குறுக நேரிடலாம். இதனால் நரம்புகளில் அழுத்தம் ஏற்படுகிறது. இதை ஆங்கிலத்தில் ஸ்டெனோசிஸ் (stenosis) என்பார்கள்.
வலியால் வரும் மனச்சோர்வு: பொதுவாக இடுப்பில் வட்டுப் போன்ற பகுதியில் உள்ள நரம்புகள் அழுத்தப்படும்போது வலி கால்களுக்கும் பரவ ஆரம்பிக்கும். அதாவது ரேடியேஷன் வலி முதுகில் இருந்து கால்களுக்குப் பரவி இடுப்பு, பின்பகுதி, பின் தொடை, பின்னங்கால் சில நேரம் கால் பாதம் வரை வலி வரும். சிலருக்குக் கால்களில் மரத்துபோன உணர்வும் எரிச்சல் போன்ற உணர்வும் சிறிது தொலைவு நடந்தாலும் ஏற்படும்.
இதனால், நடப்பதில் சிரமம் ஏற்படலாம். இது போன்ற அறிகுறிகள் ஏற்படும்போது இனி முன்புபோல் இயல்பாக நம்மால் நடக்க முடியுமா என்கிற பயம் ஏற்படலாம். இத்தகைய வலிகள் நமது அன்றாட வேலைகளைப் பாதிக்கும்போது மனச்சோர்வுக்கும் மன அழுத்தத்துக்கும் ஆளாக வேண்டிவரும்.
சிகிச்சை முறைகள்: முதுகு வலி, கழுத்து வலிப் பிரச்சினை களுக்கு நரம்பியல் மருத்துவரின் அறிவுரையைப் பெற்று, அவர் தரும் மருந்துகளை உண்டால் வலியிலிருந்து மீளலாம். அத்துடன் சிறந்த இயன்முறை சிகிச்சை நிபுணரை அடையாளம் கண்டு அவரின் ஆலோசனைப்படி பிசியோதெரபி சிகிச்சையும் பெறுவது வலியிலிருந்து மீள்வதற்கு உதவும். இத்துடன் தினசரி உடற்பயிற்சிகளும் அவசியம். முதுகுத் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள முதுகு, கால் தசைகளை வலுப்பெறச் செய்வதன் மூலம் முதுகு வலி இல்லா சுகமான வாழ்க்கையை வாழ முடியும்.
- கட்டுரையாளர், பிசியோதெரபி மருத்துவர் - விரிவுரையாளர்; senphysio1981@gmail.com