உணவு மூடநம்பிக்கைகள்:கற்பிதமும் உண்மையும்

உணவு மூடநம்பிக்கைகள்:கற்பிதமும் உண்மையும்
Updated on
4 min read

1 கிரீன் டீ அருந்துவதால் உடல் எடை குறையுமா? - கிரீன் டீயில் உள்ள கேடச்சின் - பிளேவனாய்ட்ஸ் கொழுப்புகளைக் குறைக்க உதவுகின்றன. ஆனால், கிரீன் டீ ஒரு 'மேஜிக் டீ' அல்ல. வழக்கமான காபி, டீயுடன் ஒப்பிடும்போது கிரீன் டீ பால் சேர்க்கப்படாத ஒன்றாக இருப்பதால், அது குறைவான கலோரி ஆற்றல் கொண்டதாக உள்ளது. இப்படிக் குறைவான கலோரிகளைக் கொண்டதாக இருப்பதால் ஒப்பீட்டளவில் மற்ற பானங்களைவிட உடல் எடையைக் குறைக்க இது உதவலாம்.

கிரீன் டீ அருந்திவிட்டு உடலின் தேவைக்குப் பொறுத்த மற்ற மற்ற உணவு வகைகளை எடுத்துகொள்வது உடல் எடையைக் குறைக்காது. கிரீன் டீயுடன் அதிக நார்ச்சத்து, புரதச்சத்து உள்ள உணவு வகைகளை உட்கொள்ளும் போதும், உடலின் தேவைக்கு அதிகமான உணவைத் தவிர்ப்பதன் மூலமும் குறிப்பிடத்தக்க அளவு எடையைக் குறைக்கலாம்.

2 வெந்நீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? - இதற்கு அறிவியல் ஆதாரம் ஏதும் இல்லை. மேலும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கரைந்து, அதன் பலன்கள் குறைவதற்கான வாய்ப்புகளே உள்ளன. வெந்நீரில் எலுமிச்சை, தேன் கலந்து சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்பதும், அது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்பதும் உண்மையல்ல. மாறாக சரிவிகித உணவுப் பழக்கம், முறையான உடற்பயிற்சிகள் ஆகியவையே உடல் எடையைக் குறைக்கும்.

3 ஆரோக்கியமாக வாழ்வதற்கு மாவுச் சத்தை (கார்போ ஹைட்ரேட்) முற்றிலும் தவிர்க்க வேண்டுமா? - எடை குறைப்புக் குழுக்களிடம் மாவுசத்து எனப்படும் கார்போ ஹைட்ரேட் குறித்து கடும் எதிர்ப்பு மனநிலை நிலவுகிறது. ஆனால், மாவுச்சத்தை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டியதில்லை. உண்ணத்தகுந்த உணவு வகைகள் பெரும்பாலானவற்றில் மாவுச்சத்து வெவ்வேறு விகிதங்களில் கலந்தே உள்ளது.

ஒரு சரிவிகித உணவு என்பது கார்போஹைட்ரேட் கலந்த ஒன்றாகவே இருக்க இயலும். குறிப்பாக, நமது மூளை கார்போஹைட்ரேட்டை முதன்மையான ஆற்றலாகப் பயன்படுத்துகிறது. அதேபோல நார்ச்சத்து சரியாக உடலில் செரிமானம் ஆகவும் கார்போஹைட்ரேட் தேவைப்படுகிறது.

நமது உணவுப் பாதையில் இயல்பாக இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரிய வகைகளைத் தக்கவைக்கவும் கார்போஹைட்ரேட் தேவைப்படுகிறது. ஆகவே, முழுமையாக மாவுசத்தைத் தவிர்ப்பது ஏற்புடையதல்ல. சரியான அளவில் அதை எடுத்துக்கொண்டாக வேண்டும்.

செரிமானத்துக்குக் கடினமான கார்போஹைட்ரேட் (complex carb) எனப்படும் மாவுச்சத்து சிறுதானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், காய்கறிகள் ஆகியவற்றில் உள்ளது. ஆனால், செரிமானத்துக்கு எளிமையான கார்போஹைட்ரேட்டுகள் (simple carb) சர்க்கரை, அரிசி, கோதுமை முதலியவற்றில் உள்ளன. எளிமையான மாவுச்சத்து வகைகளைக் குறைத்துவிட்டு சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளைச் சரியான அளவில் எடுத்துகொள்வது நல்லது.

4 சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானதா? - வெல்லத்தில் சில வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால், உண்மையில் நாட்டுச் சர்க்கரையும் ஒரு சர்க்கரையே. இது வெள்ளை சர்க்கரையைவிட ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானது. எனினும், சர்க்கரையின் அனைத்து நேரடிப் பண்பு களும் நாட்டுச் சர்க்கரைக்கும் உண்டு.

நடைமுறையில் நாட்டு சர்க்கரை நல்லது என்கிற நம்பிகையினால் மக்கள் அதிக அளவு அதை எடுத்துக்கொள்கின்றனர். ஒருவர் சாதாரணமாக ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரையை எடுத்துகொள்கிறார் எனில், அதே நபர் நாட்டுச் சர்க்கரை நல்லது என்கிற கருத்தின் அடிப்படையில் மூன்று தேக்கரண்டி எடுத்துகொள்கிறார்.

தேநீர், காபி மட்டுமல்லாது தற்போது நாட்டுச் சர்க்கரையில் செய்யப்பட்ட இனிப்புப் பண்டங்கள், ஐஸ்கிரீம் என பல வகையிலும் இவை சந்தைக்கு வந்துவிட்டதால் மக்கள் அதிக அளவு தேவையற்ற சர்க்கரையை எடுத்துகொள்கின்றனர் என்பதே உண்மை.

5 மஞ்சள் காமாலை உள்ளவர்கள் பத்தியச் சாப்பாடு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமா? - மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல, அது கல்லீரலில் ஏற்பட்டுள்ள பிரச்சினையின் வெளிப்புற அறிகுறி. மஞ்சள் காமாலை ஒருவருக்குத் தோன்றும் போது, அது எதன் காரணமாகத் தோன்றியுள்ளது என்பதை உரிய மருத்துவரை அணுகி அறிவதும் அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துகொள்வதும் மிக அவசியம்.

மஞ்சள் காமாலை இருக்கும்போது அதிக காரம், எண்ணெய், கொழுப்புச் சத்து உள்ள உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும் புரதம் நிறைந்த முட்டையின் வெள்ளைக் கரு, தோல் இல்லாத கோழி இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவு வகைகள் பருப்பு, முளைகட்டிய பயிர் வகைகள், தயிர் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

6 உணவுக்கு இடையில் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை பாதிக்குமா? - சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடிப்பது, உடல் ஊட்டச் சத்துகளை சரியாக உறிஞ்சுவதைத் தடுக்கிறது என்றும், வயிறு உப்புசம் உண்டாகும் என்றும் நம்பப்படுகின்றது. ஆனால், அது உண்மையல்ல.

தண்ணீர் என்பது உணவைச் சிதைக்க உதவுகிறது, இதனால் உங்கள் உடல் ஊட்டச்சத்துகளை எளிதில் உறிஞ்சிவிடும். இது மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. தேவையான அளவு தண்ணீர் அருந்துவது வயிறு உப்புசத்தைத் தடுப்பதுடன் செரிமானத் திற்கும் உதவும்.

7 முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் போன்ற உணவு வகைகளில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா? - முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிட்டால் உடம்பில் கொழுப்பு சத்து அதிகரிக்கும் என்று நினைத்துக்கொண்டு, பலரும் அதை முற்றிலும் தவிர்க்கிறார்கள். ஆனால், மஞ்சள் கருவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், புரதச்சத்து, வைட்டமின் பி-12, வைட்டமின் டி ஆகியவை அதிகம் உள்ளன. எனவே, முட்டையின் மஞ்சள் கருவை அளவோடு சாப்பிடுவதால், அது நம் உடல் வலுவை அதிகரிக்கவே செய்யும்.

அதேபோல தேங்காயில் ஏராளமான ஊட்டச் சத்துகளும் கொழுப்புச் சத்தும் நிறைந்திருக்கின்றன. தேங்காயில் புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம் அதிகம் உள்ளன. ஆன்ட்டி-மைக்ரோபியல் பண்புகளும் இருக்கின்றன. எண்ணெய் அதிகம் உள்ள தின்பண்டங்களுக்கு பதிலாக தேங்காயை எடுத்துகொள்வது நன்மை தரும்.

8 பப்பாளி, அன்னாசி, பலாப் பழம் போன்ற பழங்கள் கருச்சிதைவை ஏற்படுத்துமா? - இல்லை. இந்தப் பழங்களை காயாக எடுத்துகொள்ளாமல் நன்கு பழுக்க வைத்து அளவோடு சாப்பிடலாம். இவற்றால் எந்தப் பாதிப்பும் இல்லை.

9 கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ, பால், தேங்காய், வெண்ணெய் போன்ற பொருள்களை உட்கொண்டால் குழந்தை வெளிர் நிறமாகப் பிறக்குமா? - இல்லை. குழந்தையின் நிறம் மரபணுரீதியாகத் தீர்மானிக்கப் படுகிறது. எந்த ஓர் உணவுப் பொருளும் குழந்தையின் நிறத்தை அதிகரிக் கவோ குறைக்கவோ செய்யாது. மேலும், குழந்தை வெளிர் நிறமாகப் பிறப்பதைவிட ஆரோக்கியமான உடல், மூளை வளர்ச்சியுடன் பிறப்பதே முக்கியமானது.

10 சிறிய அளவு மது அருந்துவது உடலுக்கு கேடு விளைவிக்காதா? - மது உடலைப் பாதிக்கும். சிறிய அளவி லான மதுகூட கல்லீரலை, இதயத்தைப் பாதிக்கக் கூடியதே. அதேபோல சிறிய அளவில் தொடங்கும் மதுப்பழக்கம் நாளடை வில் அதிகரித்து மதுவுக்கு அடிமையாகும் சாத்தியம் உள்ளது. மதுப் பழக்கத்துக்கு பாதுகாப்பான அளவு என்று எதுவும் இல்லை.

- கட்டுரையாளர், ஊட்டச்சத்து நிபுணர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in