மாதவிடாய்க் கோளாறும் ரத்த சோகையும்: தவிர்க்க உதவும் சித்த மருத்துவம்

மாதவிடாய்க் கோளாறும் ரத்த சோகையும்: தவிர்க்க உதவும் சித்த மருத்துவம்
Updated on
4 min read

பொதுவாகப் பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளாக மாதவிடாய்க் கோளாறுகளும் ரத்த சோகையும் உள்ளன. இவை அன்றாட வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை; அவர்களின் சுற்றத்தாரின் வாழ்க்கையையும் சேர்த்தே பாதிக்கின்றன.

பெண்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு உணவைவிட வேறு சிறந்த மருந்து இருக்க முடியாது. உணவு, மருந்து, துணை மருந்து, பத்தியம் ஆகியவை சரியாக இருந்தால், பெண்களுக்கு இத்தகைய பாதிப்புகள் ஏற்படும் சாத்தியம் குறைவு. சரியான உணவு, சீரான உடல் உழைப்பு, உடற்பயிற்சி, நல்ல பழக்கவழக்கம், போதுமான ஓய்வு உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கைமுறை இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுபட பெண்களுக்கு உதவுகின்றன; சித்த மருத்துவமும் சில வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறது.

மாதவிடாய்க் கோளாறுகள்: பெண்களுக்கு மாதவிடாய் சரியான முறையில் நிகழ வேண்டும். ஒவ்வொரு மாதமும் 28 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படும் மாதவிடாயே சரியானது. இதைப் பூப்பு சுழற்சி என்பார்கள். பூப்படைந்த பிறகு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு 14 நாள்களும் அதைத் தொடர்ந்து புரொஜெஸ்டீரோன் சுரப்பு 14 நாள்களும் பெண்களுக்கு இருக்கும்.

இச்சுரப்பு ஆளாளுக்கு மாறுபடும். இது சரியாக இல்லாமல் இருந்தால் சினைப்பை நீர்க்கட்டி, கருப்பைக் கட்டி, புற்றுநோய், குழந்தையின்மை போன்றவை ஏற்படும் ஆபத்து உண்டு.

உடல் உழைப்பின்மை, தைராய்டு பிரச்சினை, உடல் பருமன், ரத்தக் கொழுப்பு, மன அழுத்தம், உணவு முறை மாற்றம், நேரம் தவறிச் சாப்பிடுவது போன்றவை மாதவிடாய்க் கோளாறுகளுக்கான முதன்மைக் காரணங்கள். பூப்பு சுழற்சி மாதம்தோறும் தவறாமல் நல்ல நிலையில் நிகழ சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

மாதவிடாய்க் காலத்தில் சத்தான உணவைச் சாப்பிடுவது நல்லது. தண்ணீரை அதிகமாக அருந்த வேண்டும். ரத்தப்போக்கு இருக்கும் என்பதால், ரத்தத்தைப் பெருக்கக்கூடிய உணவு வகைகளையும் மருந்துகளையும் சாப்பிடலாம்.

என்ன செய்ய வேண்டும்? - மாதவிடாய் சரியாக ஏற்பட நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். மலம், சிறுநீரை ஒருபோதும் அடக்கக் கூடாது. பப்பாளிப் பழம், அன்னாசிப் பழம், வெள்ளரிப் பழம், பூசணிக்காய், எள்ளு, முருங்கைக் கீரை, மாதுளம் பழம், உளுந்து, வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை, நெல்லிக்காய், பன்னீர் திராட்சை, நாவல் பழம் ஆகியவற்றைச் சாப்பிடுவது மாதவிடாய் சரியாக நிகழ உதவும். நாள்தோறும் காய், கீரை, பயறு வகைகள், பழங்கள், சிறுதானிய உணவு போன்றவற்றை முறையாகவும் அளவாகவும் சாப்பிட வேண்டும்.

சீரான மாதவிடாய்க்கு அசோகப்பட்டை சூரணம், குமரி லேகியம், கழற்சி சூரணம், வெண்பூசணி லேகியம், அமுக்கரா சூரணம், சோம்புக் குடிநீர், அசோக அரிஷ்டம், மலைவேம்பாதித் தைலம், சதாவாரி லேகியம் ஆகிய சித்த மருந்துகள் நல்ல பலன் அளிக்கும்.

ரத்த சோகை அறிகுறி: ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபினின் அளவு குறைவதால் ஏற்படுவதே ரத்த சோகை. இது பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பாதிப்பாக உள்ளது. தளர்ச்சி, பலவீனம், உடல் சோர்வு, கவனக்குறைவு, அதிகமான இதயத் துடிப்பு, அடிக்கடி தலைவலி, தோல், நகங்கள், கண்ணின் உள்புறம், நாக்கு போன்ற பகுதிகள் வெளிறிப் போதல் போன்றவை இதன் அறிகுறிகள்.

என்ன செய்ய வேண்டும்? - இரும்புச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிடுவது பாதிப்பிலிருந்து மீள்வதற்கான முதல் வழி. வெல்லம், உலர் பழங்கள், கீரைகள், மாமிசம், மீன், மாதுளை, பாகற்காய் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது. மாதுளை மணப்பாகு, கறிவேப்பிலைப் பொடி, அன்னபேதி செந்தூர மாத்திரை, கரிசாலைக் கற்பம் ஆகிய சித்த மருந்துகள் ரத்த சோகையைப் போக்க உதவும்.

இலவசமாகக் கிடைக்கும் ஆரோக்கியம்: அனைத்துக் கருப்பை சார்ந்த நோய்களையும் குணப்படுத்தும் திறன் சித்த மருந்துகளுக்கு உண்டு. மாதுளை மணப்பாகு, வெண்பூசணி லேகியம், அன்னபேதி செந்தூர மாத்திரை, சதாவேரி லேகியம், ஃபெமி க்யூர் சிரப் (Femicure ), கழற்சி சூரணம் ஆகியவையும் மகப்பேறு சஞ்சீவி பெட்டகமும் தமிழ்நாட்டின் அனைத்து அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

நமது வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படும்போது ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. பெண்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கக் கூடாது. மாவுப் பொருள்கள், இனிப்பு, கோதுமை, நொறுக்குத் தீனி, எண்ணெய்ப் பலகாரம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது. முக்கியமாக, முறையான உணவு முறைகளோடு தியானம், யோகா முதலியவற்றையும் பின்பற்றினால் உடல்நலமும் மனநலமும் செழிப்படையும்.

மாதவிடாய்க்கு உதவும் விதை சுழற்சி முறை

# 1 - 15 நாள்களில் வெள்ளரி விதை, பரங்கி விதை, சூரியகாந்தி விதை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் ஒரு தேக்கரண்டி அளவுக்கு இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.


# 16 - 19 நாள்களில் கறுப்பு உளுந்தை ஒரு தேக்கரண்டி இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.
# 20ஆம் நாள் முதல் மறு பூப்பு சுழற்சியின் முதல் நாள் வரை ஆளி விதை, எள்ளு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 1 தேக்கரண்டி அளவில் தினமும் இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.

பெண்களுக்கான உணவு முறை

# 1 - 5 நாள்கள்: 1 கப் வெள்ளை எள்ளைப் பழுப்பு நிறம் வரும் வரை வறுத்து, அரைத்து சர்க்கரையுடன் கலந்து ஏலக்காய் பொடி சேர்த்துப் பிசைந்து உருண்டையாகச் சாப்பிடலாம். இதன் காரணமாகப் பூப்பு சுழற்சி நன்றாக ஏற்படும்.

# 6 - 14 நாள்கள்: கருப்பட்டி வெல்லத்தில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து. அதில் சம்பா பச்சரிசியையும் உளுந்தையும் வறுத்துப் பொடியாக்கிச் சேர்த்து, அத்துடன் ஏலப்பொடி, நல்லெண்ணெய் சேர்த்து களிப் பதம் வரும் வரை கிண்டி இறக்கிச் சாப்பிடலாம். இது இடுப்பு வலி, உடல் வலி ஏற்படுவதைத் தடுக்கும்.

# 15 - 28 நாள்கள்: சம்பா அரிசி, வெந்தயத்தை வறுத்து, அவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து, கஞ்சியாகக் காய்ச்சி இறக்கிக் குடிக்க வேண்டும். பூப்பு நிகழ்வதற்கும் கருப்பையில் கட்டி வராமல் தடுப்பதற்கும் இது உதவும்.

நலம் தரும் முறைகள்:

# தினமும் இரு முறை: காலை, மாலை எனத் தினமும் இருமுறை கண்டிப்பாக மலம் கழிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இரவில் வெந்நீர் குடிக்க வேண்டும். ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். காய்கறிகள், பழங்களை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. திரிபலா சூரணம் 1 மாத்திரை சாப்பிடுவதும் பலன் தரும்.

# வாரம் இரண்டு முறை: வாரத்துக்கு இரண்டு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். மூட்டுவலி, கழுத்துவலி, தோள்பட்டை வலி, கண்பார்வை குறைபாடு, கண் சூடு, முகப்பரு, தலைமுடி நரைப்பது, நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல் ஆகியன ஏற்படுவதைத் தவிர்க்க இது உதவும்.

காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு இருக்கும்போது எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாள்களில் தயிர், மோர், குளிர்பானங்களை அருந்தக் கூடாது. முக்கியமாக, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது பகலில் தூங்கக் கூடாது.

# ஆண்டுக்கு இருமுறை: நோயின்றி வாழப் பேதி மருந்தை 6 மாதத்துக்கு ஒரு முறை உண்ண வேண்டும்.

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in