கண் தானம் என்னும் புத்தொளி!

கண் தானம் என்னும் புத்தொளி!
Updated on
3 min read

தன்னுடைய 18 வயது மகனுக்குக் கருவிழி வெள்ளையாக இருப்பதாகக் கூறி பெண் ஒருவர் கண் மருத்துவரை அணுகியுள்ளார். அவரைப் பரிசோதித்த கண் மருத்துவர் அவரது இரண்டு கண்களிலும் கேரட்டோ கோனஸ் என்கிற கருவிழி வளைவு நோய் காரணமாக கருவிழியில் தழும்பு ஏற்பட்டுப் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

நோய் முற்றிய நிலையில் இருப்பதால் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி, தாயின் சம்மதத்துடன் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை நடத்தப்பட்டது. அதன்பின் அந்த இளைஞனுக்குப் பார்வை மீண்டும் கிடைத்தது.

கருவிழிப் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டுக் கண்ணில் வலியுடன் பார்வை இழந்து துடிக்கும் நோயாளிகளுக்கும், கண்புரை அறுவைசிகிச்சை செய்த பிறகு வலியால் துடிக்கும் (Corneal Endothelial damage) முதியவர்களுக்கும் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை மூலம் பார்வையை மீண்டும் கொண்டு வரலாம்.

கண் தான இரு வாரம்: 1970 முதல் 1980ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே மிகக் குறைவாக காணப்பட்டதால், கருவிழி பாதிப்பால் பலரும் பார்வையற்றவர்களாகவே தங்கள் நாள்களைக் கடத்திவந்தார்கள்.

இந்தச் சூழலில்தான் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை செய்ய பலரும் கருவிழி கிடைக்காமல் இருப்பதை உணர்ந்த மத்திய அரசு, தேசிய கண்தான இரு வார விழாவை 1985ஆம் ஆண்டு முதல் தொடங்கியது. ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரையான இரண்டு வாரங்களில் கண் தானம் குறித்தும், கருவிழி மாற்று அறுவைசிகிச்சை மூலம் பார்வையைத் திரும்பப் பெறலாம் என்பது பற்றியும் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்திவருகிறது.

கருவிழியைப் பாதுகாத்தல்: ஒருவர் தன் கண்களைத் தானமாகக் கொடுக்கும்போது அவரது இறப்புக்குப் பிறகு, மருத்துவர்கள் அவரின் கண்களை உடலிலிருந்து அகற்றி கண் தான வங்கிக்கு முறையாக எடுத்துச்சென்று கிருமித் தொற்று இல்லாத அறையில் கருவிழியைத் தனியாகப் பிரித்தெடுத்துப் பாதுகாத்து வைப்பார்கள்.

கருவிழி பாதிப்பினால் பார்வை இழந்த நோயாளிகளுக்குப் பாதிக்கப்பட்ட கருவிழியை அறுவைசிகிச்சை மூலம் அகற்றிவிட்டு, தானமாகப் பெற்ற ஆரோக்கியமான கருவிழியை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ பொருத்தி, பார்வை திரும்பக் கொடுக்கப்படும். இதற்கு ஒருவர் இறந்த பிறகு 6 மணி நேரத்துக்குள் அவரின் கண்களை இறந்தவரின் உடலில் இருந்து எடுத்துப் பாதுகாக்க வேண்டும்.

யாரை அணுகுவது? - தேசிய நலக் குழுமத்தின் இணையதளத்தில் https://hmis.tn.gov.in/eye-donor/ என்கிற இணையதள முகவரியில் பதிவுசெய்து கொண்டால் உடனடியாகக் கண் தானச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவுசெய்த கண் தானச் சான்றிதழைக் குடும்ப உறுப்பினர்களிடம் காண்பித்துத் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். இறப்புக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கண்களைத் தானமாக கொடுக்க அது உதவியாக இருக்கும்.

தானமாகக் கொடுக்க வேண்டிய நேரத்தில் உங்கள் ஊரில் உள்ள கண் மருத்துவரைத் தொடர்புகொள்ள வேண்டும். கண் தானம் எடுக்கும் மருத்துவக் குழு அல்லது கண் தான வங்கியின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவர்கள் வருவதற்கு ஏற்பாடு செய்வார். இல்லையென்றால் 102 என்கிற இலவச தொலைபேசி எண்ணை அழைத்தால் அருகில் உள்ள கண் தான வங்கிக்கு இணைப்பு கொடுப்பார்கள். லயன்ஸ், ரோட்டரி சங்கங்களின் தலைவர்களும் உதவி செய்வார்கள்.

வாழும்போதே கண் தானம் எப்படி? - இந்தியாவில் பார்வை இழப்பை ஏற்படுத்து வதில் இரண்டாவது இடத்தை நிரப்புவது கருவிழிப் பாதிப்பு நோய் உண்டாக்கும் பார்வை இழப்புதான். இதனைத் தடுக்க வேண்டும் என்றால் நம் நண்பர்கள், உறவினர்கள் யாராவது இறந்துவிட்டால், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் பேசி கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி கண்தானம் செய்ய வைக்கலாம். இது பலரின் வாழ்வில் பார்வை ஒளி ஏற்றி வைக்க உதவும்.

வயது தடை இல்லை:

# ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் முதல் யார் வேண்டுமானாலும் கண்களைத் தானமாக கொடுக்கலாம்.

கண் தானம் என்னும் புத்தொளி! சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய் உள்ளவர்கள் தங்களுடைய கண்களைத் தானமாகக் கொடுக்க இயலும்.

# கண்புரை அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், கண் விழித்திரை அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தங்கள் கண்களைத் தானமாகக் கொடுக்கத் தடை இல்லை

யாரெல்லாம் தானம் செய்ய முடியாது: காரணம் தெரியாத இறப்பு, கண்ணில் கிருமி பாதிப்பு உள்ளவர்கள், கருவிழிப் பாதிப்பு உள்ளவர்கள், கருவிழி அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், வெறிநாய்க் கிருமி உள்ளவர்கள், எச்ஐவியால் பாதிக்கப் பட்டவர்கள், சிபிலிஸ் நோய், மஞ்சள் காமாலை கிருமி பாதிப்பு உள்ளவர்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பல்நோக்குக் கிருமி பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோர் கண்களைத் தானமாகக் கொடுக்க இயலாது.

முன் செய்ய வேண்டியது:

# இறந்தவரின் இமைகளை மூடி வைக்க வேண்டும்.

# மூடிய இமையின் மீது ஈரமான பஞ்சைவைக்க வேண்டும். இறந்தவரின் தலைப் பகுதியை 6 அங்குல அளவுக்கு உயர்த்தி வைக்க வேண்டும். இறந்தவரின் உடல் இருக்கும் அறையில் மின்விசிறியைப் பயன்படுத்தக் கூடாது.

# கண்தானம் பெற்ற கருவிழியை ஒரு வருடம் வரை கண்தான வங்கியில் பாது காக்கலாம். இன்றைய சூழ்நிலையில் கருவிழிக்கான தேவை அதிகமாக இருப்பதால், கண் தானம் பெறும் கருவிழி உடனடியாகப் பயன்படுத்தப்படுகிறது. தானமாகப் பெற்ற கண்ணின் கருவிழி, கருவிழி மாற்று அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் Sclera என்கிற வெண் படலப் பகுதி செயற்கைக் கண் பொருத்தும் அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும். சில வேளை ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும்.

கண் தானத்துக்கு முன்வாருங்கள்: கடந்த பத்து வருடங்களில் கருவிழி மாற்று அறுவைசிகிச்சையில் பயிற்சிபெற்ற கண் மருத்துவர்கள் விகிதம் அதிகரித்துவருகிறது. சிறு நகரங்களில்கூடக் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை தற்போது நடைபெற்று வருகிறது. இதற்குத் தேவையான கருவிழியைக் கொடுக்க வேண்டியது நமது முக்கியமான கடமை.

நம் கருவிழித் தேவைகளில் 50 சதவீதக்கருவிழி மட்டுமே தானமாகத் தற்போது பெற்றுவருகிறோம். மீதம் உள்ள கருவிழிகள் மண்ணிலும் தீயிலும் மறைந்து கொண்டிருக் கின்றன. ஆகவே, இறந்த உங்கள் உறவினர்களின் கண்களைத் தானமாகக் கொடுக்க முன்வாருங்கள்.

ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை : கண் தான இரு வாரம்

- கட்டுரையாளர், கண் மருத்துவர்; drranganathansocial@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in