குழந்தைகளைப் புரிந்துகொள்வோம் 10 | குற்றமும் தண்டனையும்

குழந்தைகளைப் புரிந்துகொள்வோம் 10 | குற்றமும் தண்டனையும்
Updated on
3 min read

சொல்பேச்சு கேட்காத சிறாரை எவ்வாறு கையாள்வது என்பது பல பெற்றோர்களுக்குக் காலங்காலமாக பெரும் சவாலாகவே இருந்துவந்துள்ளது. இந்த இறுதிக் கட்டுரையில் சொல்பேச்சு கேட்காத சிறாரை எவ்வாறு சரிவர கையாள்வது என்பது குறித்து இதுவரை கூறப்பட்ட உத்திகளை நினைவு படுத்திக் கொள்வோம்.

சிறார் தனியாக, மகிழ்ச்சியாக விளையாட குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்கிவைப்பது. அவர்களின் அன்றாட நன்னடத்தையை உற்றுக் கவனித்து அவர்களைப் பாராட்டுவது, அதற்குச் சிறு வெகுமதிகள் வழங்குவது, சிறுசிறு நடத்தைக் குறைபாடுகளைப் பொருட்படுத்தாது கண்டும் காணாததுபோலக் கடந்துபோவது, நன்னடத்தையை ஊக்குவிக்க ஒரு ‘டோக்கன் முறை’யை முன்னெடுப்பது போன்ற உத்திகளை பெற்றோர்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் போது சிறாரின் நடத்தையில் முன்னேற்றம் காண முடிகிறது என்பதை ஆய்வுகள் ஐயத்துக்கு இடமின்றி நிறுவியுள்ளன.

இவ்வாறான உத்திகள் உடனடியாக பலனளிப்ப தில்லை என்பதையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். இவற்றின் நல்விளைவுகளைக் காண இரண்டு முதல் மூன்று வாரங்களாகும். அது மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் குழந்தையின் நடத்தை முன்னைவிட மோசமடையலாம்.

ஏனென்றால், உங்களின் இந்த அணுகுமுறை சிறார்களுக்குப் புதிதாக இருப்பதால் உங்களால் இந்தப் புதிய முறையை எவ்வளவு காலம் நடைமுறைப்படுத்த முடியும் என்று அவர்கள் உங்களைச் சோதித்துப் பார்ப்பார்கள். நாம் அவர்களின் புத்திக்கூர்மையை குறைத்து மதிப்பிடக் கூடாது.

சொல்பேச்சு கேட்காத சிறார் வளர்ந்து குமரப் பருவத்தை அடையும்போது அவர்கள் நடத்தை மேலும் மோச மடைகிறது என்பது ஆய்வுகள் கூறும் மற்றொரு செய்தி. இன்னும் சொல்லப்போனால் வளர வளர வீட்டில் மட்டுமல்லாமல் வெளியிடங் களிலும் இவர்களின் நடத்தை மாற்றம் தாறுமாறாகவும் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலும் அமைந்துவிடுகிறது. குறிப்பாக, பதின்ம வயதை அடையும்போது இவர்களின் நடத்தை மாற்றம் கட்டுக்கடங்காமல் போகலாம். ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ என்ற பழமொழி இவர்களுக்குப் பெருமளவு பொருந்தும் என்றே கூற வேண்டும். எனவே, இவர்களின் தீய நவடிக்கைகள் ஆரம்ப நிலையில் இருக்கும்போதே பெற்றோர் திறம்படச் சரியான முறையில் கையாள வேண்டும்.

தண்டனைகள்: இந்தக் கட்டுரைகளில் குறிப்பிடப்படாத ஒரு சிறார் வளர்ப்பு உத்தி தவறான நடத்தைகளுக்குத் தண்டனைகள் வழங்குவது பற்றியது.

சிறார்களின் விரும்பத்தகாத நடவடிக்கை களுக்கு எப்போது, எந்த மாதிரியான தண்டனை கள் வழங்குவது என்கிற பொருள் பற்றி உளவிய லாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் வெகு காலமாகவே விவாதித்து வந்துள்ளார்கள்.

உளவியலாளர்கள் இரண்டு வகையான தண்டனைகள் பற்றி விரிவாக ஆராய்ந்து வந்துள்ளார்கள். ஒன்று இவர்களின் நன்நடத்தைக்காக வழங்கப்படும் புள்ளிகளை அல்லது டோக்கன்களை - அதாவது பரிசுகள்/வெகுமதிகள் ஆகியவற்றைத் திரும்பப்பெறுவது. இது ஒரு சிறந்த முறை என்பதில் ஐயமில்லை. ஆனாலும் ஆரம்பத்தில் கற்றுக்கொண்ட இந்த உத்தியைப் பல பெற்றோர்கள் தொடர்ச்சியாகவும் முறைப்படியாகவும் கடைபிடிப்பதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தனிமைப்படுத்துதல்: மற்றது, ‘டைம் அவுட்’ (Time out) என்று அழைக்கப்படும் தண்டிக்கும் உத்தி. குறிப்பிட்ட அளவு நேரம் தனிமைப்படுத்தி வைப்பதே இந்த முறையின் குறிக்கோள். இது மிகச்சிறந்த முறையாகக் கருதப்படுகிறது. ஆனால், முதலில் இதை முழுமையாகக் கற்று உள்வாங்கிக்கொண்டு பின் அதைச் சரிவர நடைமுறைப்படுத்த வேண்டும்.

சிறுவர் இல்லங்களிலும், சீர்திருத்தப் பள்ளிகளிலும் ஏன், சிறைச்சாலைகளிலும் கூட இந்த நடைமுறைப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பயிற்சிபெறுவது மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், சிறார் நடத்தையைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் அவர்கள் துன்புறுத்தப்படலாம். ‘டைம் அவுட்’ என்கிற முறைக்கும் சிறார் துன்புறுத்தலுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை, சிறாரின் நடத்தை சார்ந்த பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது பெற்றோரின் பார்வையில் இருந்தே கூறப்பட்டது. ஆனால், இதில் சிறாரின் குரல்களைச் செவிமடுப்பதும் முக்கியம். குறிப்பாக அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பின் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது இந்தப் பிரச்சினையை வேறொரு கோணத்தில் பார்த்து ஆராய வழிவகுக்கும். பின்வரும் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கவனியுங்கள்.

“குழந்தைப் பருவத்தின்போது பெற்றோரிடம் பலமுறை அடி வாங்குவது, முட்டி போடுவது, தோப்புக்கரணம் போடுவது போன்ற தண்டனைகளைப் பெற்றுள்ளேன். அதில் பெரும்பாலான சூழ்நிலைகளில் பொய் சொல்வதே அத்தகைய தண்டனைகளைப் பெறுவதற்குக் காரணமாக இருந்துள்ளது.

அப்படி ஒவ்வொரு முறை பொய் சொன்னதற் காகத் தண்டனை பெற்ற பிறகும், அடுத்த முறை மீண்டும் ஏதேனும் அவர்கள் கண்டிக்கும் வகையிலான தவறைச் செய்யும்போது அதிலிருந்து தப்பிக்க இன்னும் சாமர்த்தியமாக, அவர்களால் கண்டுபிடிக்க முடியாத வகையில் எப்படிப் பொய் சொல்லலாம் என்பதைத் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளேன்… அந்தப் பொய்களால் தண்டனைகளில் இருந்து தப்பிப்பதில் வெற்றியும் கண்டேன்.”

இது ஒரு தொழில்முறை எழுத்தாளரின் சுயவிமர்சனம். எண்ணிப் பார்க்கும்போது பெரும்பாலானோரின் அனுபவமும் இதுவாகத்தான் இருக்கும். சிறாருக்குக் கொடுக்கப்படும் உடல் ரீதியான தண்டனைகளில் எது பொருத்தமானது என்கிற பொருள் பற்றி நடைபெற்ற ஓரு தொலைக்காட்சி உரையாட லின்போது புகழ்பெற்ற ஓர் உளவியலாளர் பின்வருமாறு கூறினார்: “அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனான பின் தனக்கு வழங்கப்பட்ட அந்தத் தண்டனை நியாயமானது என்று கருதுவான் என்றால், அந்தத் தண்டனை ஏற்றுக்கொள்ளக் கூடியதே”. அதாவது தண்டனைக்குப் பின் வரும் இந்த ஞானோதயத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?

பெரும்பாலான பெற்றோர்கள் சிறாரின் தீய நடத்தையக் கண்டு கோபமடைந்து அந்த ஆத்திரத்தில் தண்டித்துவிடுகிறார்கள். என்ன தண்டனை அளிப்பது என்பது பற்றி ஆழமாக என்ணிப் பார்ப்பதில்லை. இந்தக் குணம் பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு உண்டு. இங்கே கவனம் பெற வேண்டியது என்னவென்றால் தண்டனை, அவரது கோபத்தின் வெளிப்பாடே தவிர, அவனைத் திருத்த வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படுத்தப்படவில்லை.

அவரது கோபம் அப்போதைக்குத் தணியலாம். ஆனால், அதை அந்தச் சிறுவன் எவ்வாறு உணர்கிறான்? இதனால் அவன் நடத்தை சீராகுமா? தண்டனை உடல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்போது, அதிலிருந்து அவன் கற்றுக்கொள்ளும் படிப்பினை தான் என்ன? குடும்ப வன்முறை நியாயமானதா? இது போன்ற அறம் சார்ந்த வினாக்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாயா ஏஞ்சலோ என்கிற நோபல் பரிசு பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளர் தன் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை பற்றி மனம் திறந்து பேசும்போது கூறியதை எண்ணிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்:

“உங்களுக்கு மற்றவர்கள் என்ன சொன்னார்கள், அவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடும். ஆனால், அது எந்த விதமான உணர்ச்சிகளை உங்கள் மனதில் தோற்றுவித்தது என்பதை நீங்கள் ஒருபோதும் மறக்க மாட்டீர்கள்”. சிறாருக்கு அளிக்கப்படும் தண்டனைகளுக்கும் இது பொருந்தும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

(நிறைவடைந்தது)

- கட்டுரையாளர், மனநல மருத்துவர், முன்னாள் பேராசிரியர்; ibmaht@hotmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in