இது ‘மலேரியா’ ஆப்!

இது ‘மலேரியா’ ஆப்!
Updated on
1 min read

கவல் தொழி்ல்நுட்பத்துறையின் அசுர வளர்ச்சியால் செல்போன் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்துவருகிறது. அரசு நலத்திட்டங்களுக்கான சேவைகள், வங்கிச் சேவைகள், பொழுதுபோக்கு விளையாட்டுகள் என பலரதப்பட்ட விஷயங்கள் சார்ந்த புதுப்புது செல்போன் செயலிகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், பல வேலைகளைச் சில நொடிகளில் செல்போனிலேயே முடித்துவிட முடிகிறது.

இத்தகைய சூழலில், சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் தங்கள் ‘புராஜெக்ட்’ ஆக சமுதாயத்துக்குப் பயனுள்ள வகையில் புதிதாக ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர். அது, மலேரியாவைக் கண்டறியும் ‘ஆப்’. பி.சூர்யா மேகனா, சி.கண்ணன், கே.லிங்கேஸ்வரன், வி.ராகவேந்திரன் ஆகிய நான்கு பேரின் முயற்சியால் இது சாத்தியமாகியிருக்கிறது.

கிராமப்புறங்களில் நோய்களைக் கண்டறியும் வசதியை அனைவருக்கும் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பது இந்த மாணவர்களின் விருப்பமாம்.

“செல்போன் கேமராவின் பின்னே இணைக்கக்கூடிய சிறிய மைக்ரோஸ்கோப் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதைப் பயன்படுத்தி நோயாளியின் ரத்த மாதிரிகளைப் படம் எடுக்க முடியும். பிறகு, மொபைலில் இணைக்கப்பட்டுள்ள மைக்ராஸ்கோப் மூலம் நோயாளிகளின் ரத்த மாதிரிகளில் மலேரிய நோய்க் கிருமிகள் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கலாம். அவ்வாறு கிருமிகள் இருந்தால் உடனே அவற்றைக் கண்டுபிடித்துவிடலாம்.

பிறகு, இந்த மருத்துவ அறிக்கையை அருகே இருக்கும் ஒரு டாக்டரின் செல்போனுக்கு அனுப்ப முடியும். இதன்மூலம், மருத்துவ வசதி பெற முடியாத இடத்தில் இருக்கும் ஒரு நோயாளி, இந்த எளிய கையடக்க மருத்துவச் சாதனம் மற்றும் மொபைல் செயலி உதவியுடன் தனது மருத்துவ விவரங்களை வேறொரு இடத்தில் இருக்கும் டாக்டருக்கு அனுப்பி மருத்துவ ஆலோசனை பெறலாம். இதைச் செய்ய ‘இமேஜ் புராசஸிங் டெக்னிக்’ என்ற தொழி்ல்நுட்பம் பயன்படுகிறது” என்கிறார்கள் இந்த மாணவர்கள்.

தேசிய அளவில் பொறியியல் மாணவர்களின் சிறந்த புராஜெக்ட்டுகளை அடையாளம் காணும் வகையில் ‘குவெஸ்ட் குளோபல்’ என்ற அமைப்பு கடந்த செப்டம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் ஒரு போட்டியை நடத்தியது. அதில், இந்தியாவின் 990 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் கலந்துகொண்டனர். கடுமையான அந்தப் போட்டியில், மலேரியாவைக் கண்டறிவது தொடர்பாக சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய இந்தத் திட்டம், இறுதிப் போட்டியில் ‘புகழ்பெற்ற புராஜெக்ட்’ என்ற விருதைப் பெற்றுள்ளது.

மலேரியாவைத் தொடர்ந்து இதர நோய்களையும் இதேபோன்று எளிய முறையில் குறைந்த செலவில் கண்டறிய உதவும் மருத்துவச் சாதனைத்தையும், அதற்கான புதிய செயலியையும் உருவாக்க வேண்டும் என்பது இவர்களுடைய அடுத்த திட்டம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in