

செல்விக்கு இப்போது பத்து வயது. அன்று அம்மா கடைக்குப் போகும்போது அவளையும் அழைத்துக்கொண்டு போகிறார். அது ஒரு சிறப்பு அங்காடி. வீட்டுக்கு வேண்டிய சமையல் பொருள்கள் வாங்க வேண்டும் என்பதே அவள் அம்மாவின் நோக்கம். ஆனால், அங்கே விதவிதமான நாவூறும் தின்பண்டங்களும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் விலையைப் பார்த் தால் மயக்கம் வருகிறது. இது ஒரு வணிக உத்தி என்பதை செல்வி அறிவாளா?
“அம்மா அதை வாங்கித் தா” என்று முதலில் ஆசையுடன் கேட்கிறாள். பின் குரலை உயர்த்தி “வாங்கித் தா” என்று கட்டளையிடுகிறாள். தாய் மசியவில்லை. அடுத்து செல்வி அழுதுபுரண்டு அடம்பிடிக்கிறாள். சுற்றி இருப்பவர்களின் கண்கள் யாவும் இவர்களின் பக்கம் திரும்புகின்றன.
தாய்க்கு இது ஒரு மானக்கேடாகப் படுகிறது. ஆனால், எவ்வளவு சொல்லியும் செல்வி விடுவதாக இல்லை. அழுகையும் ஆர்ப்பாட்டமும் கூடிக்கொண்டே போகின்றன. கடையே வேடிக்கை பார்க்கிறது. இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது?
சொல்பேச்சு கேட்காத சிறார்கள் சிலர் வீட்டில் மட்டுமன்றி வெளியிடங்களிலும் பெற்றோரின் சொல்பேச்சுக்கு மட்டுப்படாமல் தாறுமாறாக நடந்துகொள்வார்கள். கடைகள், பேருந்துகள், வெளியிடங்கள் என்று பார்க்காமல் இவர்கள் பெற்றோரை நச்சரிப்பதும், ஒரு பொருளை வாங்கிக் கொடுக்காவிட்டால் அழுதுபுரண்டு ஆர்ப்பாட்டம் செய்வதும் உண்டு.
பெரும்பாலான பெற்றோர் தொல்லை தாங்க முடியாமல் அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். பொதுவெளியில் ஆர்ப்பாட்டம் செய்தால் ஒரு கட்டத்தில் மற்றவர்கள் பார்க்கிறார்களே என்கிற பயத்தில் பெற்றோர் விட்டுக்கொடுப்பார்கள் என்பதை உணர்ந்து இவர்கள் தங்கள் பெற்றோரைப் பணயக் கைதிகளாக்கித் தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்வார்கள்.
பெற்றோர் செய்யும் தவறுகள்: வெளியிடங்களில் இவர்களைச் சமாளிப்பது எப்படி என்பதை எடுத்துக் கூறும்முன் வயதுவந்தவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் முக்கியம். சில பெற்றோர் சிறார்களை வெளியே கூட்டிக்கொண்டு போகும்போது வந்த காரியத்தை மறந்து வெவ்வேறு வேலைகளில் ஈடுபடுவதுண்டு.
தம் நண்பர்களைக் கண்டால் அவர்களுடன் அரட்டை அடிப்பது, தம்மை ஈர்க்கும் விஷயங்களில் தன்னை மறந்து கவனம் செலுத்துவது போன்ற காரியங்களில் பெற்றோர் ஈடுபடும்போது தன் பக்கம் அவர்கள் கவனத்தை ஈர்க்கச் சிறார்கள் குறும்புத்தனம் பண்ணுவதிலும் கண்டபடி நடந்துகொள்வதிலும் வியப்பில்லைதான்.
என்ன செய்ய வேண்டும்? - சிறார்களை வெளியே அழைத்துக்கொண்டு போகும்போது இரண்டு இன்றியமையாத விதிமுறைகளைப் பெற்றோர் கடைப்பிடிப்பது அவசியம். முதலாவதாக, அவன் தவறாக நடந்துகொள்வான் என்பதை எதிர்பார்க்க வேண்டும். இரண்டாவதாக, வெளியே கூட்டிக்கொண்டு போவதற்கு முன்னரே என்ன செய்யப் போகிறீர்கள், அதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதை முறையாகத் திட்டமிட வேண்டும். குறைந்தபட்சம் அதைச் சிறாருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
ஒரு கடைக்கோ நண்பரின் வீட் டுக்கோ பையனை அழைத்துக்கொண்டு போகும் முன்னர் அது எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை விளக்கிக் கூற வேண்டும். சிறுவனின் வயதைக் கணக்கில் கொண்டு பத்து அல்லது இருபது நிமிடங்கள் ஆகும் என்று ஆரம்பத்திலேயே எடுத்துச் சொல்வது நல்லது. அத்துடன் அந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
வெளியே அழைத்துச் செல்லும்போது அவனுக்கு ஏதாவது ஒரு கடமையை அல்லது காரியத்தைச் செய்யும்படி கூறுவது நல்லது. உதாரணத்துக்கு, கடையில் பொருள்கள் வாங்கும்போது உங்களுக்கு உதவி செய்யும்படி கேட்டுக்கொள்ளலாம். அது என்ன மாதிரியான உதவி என்பதையும் குறிப்பிட்டுக் கூறத் தவற வேண்டாம். அதேபோல, காரிலோ பேருந்திலோ நீண்ட பயணங்கள் போகும்போது அவனுக்கு விருப்பமான ஏதாவது ஒரு செயலில் அவனை ஈடுபடுத்தலாம்.
சில சிறார்களுக்கு ஊர் சுற்றிப் பார்க்கவும் அது குறித்துப் பேசவும் விருப்பமாக இருக்கும்; வேறு சிலருக்கு விடுகதைகள், மனக்கணக்கு போன்ற விளையாட்டுகள் பொருத்தமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், இந்த ‘விளையாட்டுகள்’ அந்தச் சிறாரின் வயதுக்கும் ஆர்வத்துக்கும் ஏற்றபடியாக அமைய வேண்டும். இதை வெளியே போகும் முன்னரே அவனுடன் பேசித் தீர்மானிப்பது நல்லது.
முந்தைய கட்டுரைகளில் கூறியபடி அவன் நல்லபடி நடந்துகொண்டால் ஒரு சிறு வெகுமதி அளிக்கவும் ஒப்புக்கொள்ளலாம். அதேபோல சிறு சிறு நடத்தை சார்ந்த பிரச்சினைகளைப் பொருள்படுத்த வேண்டாம்.
விட்டுக்கொடுக்க வேண்டாம்: வெளியிடமாக இருப்பதால் மற்றவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணத்தில் அவன் செய்யும் தவறான நடத்தைகளை நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது மிகப்பெரிய பிழையாகும். இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இதனால் அவன் நடத்தை மேலும் மோசமாகுமே தவிர குறையப்போவதில்லை.
நிலைமை கட்டுக்கு அடங்காவிட்டால், அதாவது அவன் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தால், அவனை அங்கிருந்து அகற்றி அமைதியான ஓர் இடத்துக்குக் கொண்டுபோய் அவன் சீற்றம் அடங்கும்வரை காத்திருப்பதே சிறந்த உத்தி. ஆனால், எந்தக் காரணம் கொண்டும் விட்டுக்கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும்.
படிப்படியாகத் திருத்துங்கள்: இந்த மாதிரியான நடத்தைப் பிரச்சினைகள் உள்ள சிறார்களைப் படிப்படியாகத் திருத்த முதலில் ஒரு பத்து நிமிடங்கள் ஒரு கடைக்கு அழைத்துக்கொண்டு போங்கள். கடைக்குள் அடியெடுத்து வைக்கும் முன் அவன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை ஒரு முறை விளக்கிக் கூறுங்கள். அவனை உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அவன் செய்யக்கூடிய ஒரு செயலைக் குறிப்பிட்டுக் கூறி உங்களுக்கு ‘உதவி செய்யச்’ சொல்லுங்கள். பின், பதினைந்து நிமிடம், இருபது நிமிடம் என்று நேரத்தைக் கூட்டலாம்.
நிலையான அணுகுமுறை: எல்லாக் குழந்தைகளும் ஒரு மனவளர்ச்சிக் கட்டத்தில் பெற்றோர் எந்த அளவுக்குத் தம் விருப்பங்களுக்கு விட்டுக்கொடுப்பார்கள் என்று ‘பதம் பார்ப்பது’ உண்டு. எதைச் செய்யலாம், அதை எந்த அளவுக்குச் செய்யலாம் என்பதை அறிந்துகொள்வதற்காக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள்.
தமது நடத்தையில் எது ஏற்றது, எதைப் பெற்றோர் ஏற்பதில்லை என்பதைச் சோதித்துப் பார்ப்பார்கள். இது எல்லாக் குழந்தைகளிலும் பொதுவாகக் காணப்படும் ஒரு வளர்ச்சிப் போக்கு. சில குழந்தைகளும் சிறார்களும் சில தவறான நடத்தை முறைகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.
இதற்குக் குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் ஒன்றுக்கொன்று மாறான அணுகுமுறை ஒரு காரணமாக அமைகிறது. சில நேரம் மறுத்தும் சில நேரம் விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டால் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? கொஞ்சம் அழுது அடம்பிடித்தால் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்பதே.
சரி, செல்விக்கு என்ன நடந்தது? அவளுடைய அம்மா இறுதிவரை விட்டுக்கொடுக்கவில்லை. “வீட்டுக்கு வா, என்ன செய்கிறேன் பார்” என்று பயமுறுத்தவில்லை. செல்வியின் கையை இறுக்கமாகப் பற்றி, “முடியாது என்றால் முடியாதுதான்” என்று கறாராகச் சத்தம் போட்டுக் கூறினார்.
ஆனால், செல்வி படியவில்லை. கடையில் இருந்த மற்றவர்களைத் தாய் சட்டை செய்யவில்லை. தான் வாங்கியதை மட்டும் பெற்றுக்கொண்டு மகளின் கையை அழுத்தமாகப் பிடித்தபடி அவளை அழைத்துக்கொண்டு கடையை விட்டு வெளியேறினார். நான் அவர்களைப் பின்தொடர்ந்து போய் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தாயின் உறுதியைப் பாராட்டினேன்!
(தொடரும்)
- கட்டுரையாளர், மனநல மருத்துவர், முன்னாள் பேராசிரியர்; ibmaht@hotmail.com