

‘பத்துப் போடுதல்’ (பற்று) எனும் மருத்துவ வழக்கு நம்மோடு நெடுங்காலமாகப் புழக்கத்தில் இருக்கிறது. தலைவலிக்கு ‘சுக்குப் பத்து’, மூட்டு வீக்கத்துக்கு ‘மூசாம்பரப் பத்து’, அடிபட்ட வீக்கத்துக்கு ‘மூலிகைக் கலவைப் பத்து’ என மூலிகைகளின் உதவியுடன் பற்றுப்போடும் முறை சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அதிகம் பின்பற்றப்பட்டது. அடிபட்ட காயங்களுக்கு மூலிகைப் பற்றிட்டு காயங்களை விரைந்து குணமாக்கச் செய்யும் மூலிகை அறிவும் நம்மிடையே நிறைந்திருந்தது.
பற்றுப் போட்டு நோய்களைக் குணமாக்கும் வெளிப்புறச் சிகிச்சை நுணுக்கங்கள் சித்த மருத்துவத்தில் ஏராளம்! உடலில் ஏற்படும் வலிக்கும் வீக்கத்துக்கும் உள்மருந்து இல்லாமலேயே பற்றுப் போடுதல் மூலமாகப் பாதிப்புகளை உடனடியாகக் குறைக்கலாம் என்பது பற்றிடுதலின் சிறப்பு. லேசான உடல் சோர்வுக்கும் களைப்பால் ஏற்படும் உடல் வலிக்கும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலே மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடும் நிலை பல மடங்கு அதிகரித்திருக்கும் சூழலில், எளிமையான பற்று மருத்துவம் பக்கவிளைவில்லாமல் பல வேதனைகளைக் குறைப்பதற்குக் கைகொடுக்கும்.
இலைகளை நேரடியாக அரைத்தோ, உலர்ந்த மூலிகைகளை முட்டை வெண்கருவுடன் அல்லது மூலிகைச் சாறுகளுடன் கலந்தோ, மூலிகைகளை எண்ணெய்யில் வதக்கியோ வலி, வீக்கத்தைக் குறைக்கப் பற்றுப் போடலாம். மூட்டுவலி, வீக்கம், தலைபாரம், தலைவலி, சளி போன்றவற்றுக்குப் பற்றுப் போடுதல் சிறந்த பலன் அளிக்கும்.
மாத்திரை பற்று: மாத்திரை என்றாலே நீரில் கலந்து விழுங்கி உள் மருந்தாகப் பயன்படுத்துவதைத்தான் அறிந்திருப்போம். ஆனால், ஒரு மாத்திரையை உள் மருந்தாகப் பயன்படுத்தாமல், வெளி மருந்தாகப் பயன்படுத்தி நோயைக் குணப்படுத்தலாம்! அம்மாத்திரையின் பெயர் ‘நீர்க்கோவை மாத்திரை’.
நீர்க்கோவை மாத்திரை: ‘கப்பு மஞ்சள் கஸ்தூரி மஞ்சள் அப்பு காரம் அரும் சாம்பிராணி’ எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல் நீர்க்கோவை மாத்திரையைத் தயாரிக்கும் முறை, அதன் அளவு, பயன்படுத்தும் முறையோடு தீரும் நோய்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது. கப்பு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், பொரிகாரம், சாம்பிராணி, மிளகு, சுக்கு, சாதிக்காய், ஓமம், லவங்கம், கற்பூரம் போன்றவற்றின் உதவியால் நீர்க்கோவை மாத்திரை தயாரிக்கப்படுகிறது.
மேற்சொன்னவற்றைப் பொடித்து, எலுமிச்சைச் சாற்றில் பல மணி நேரம் அரைக்க வேண்டும். பின் கலவையை இலந்தை விதை அளவுக்கு மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தித் தாய்ப்பாலில் குழைத்துப் பற்றுப்போடச் சொல்கிறது சித்த மருத்துவப் பாடல். ’செம்மஞ்சள் நிறம்... உருண்டை அல்லது வட்ட வடிவம்...’ இது நீர்க்கோவை மாத்திரைக்கான அடையாளம். தயாரிக்கப்படும் வடிவத்தைப் பொறுத்து ‘நீர்க்கோவை உருண்டை’, ‘நீர்க்கோவை வட்டம்’ ஆகிய பெயர்களும் நீர்க்கோவை மாத்திரைக்கு உண்டு. நீர்க்கோவை பற்றுப் பொடியாகவும் வழக்கத்தில் இருக்கிறது.
மருத்துவப் பலன்கள்: நெற்றி வலி, தலைபாரம், தலைவலி, தலையில் நீர்க்கோத்தல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட பீனிச (சைனுசைடிஸ்) நோயின் தன்மையைக் குறைக்க ‘நீர்க்கோவை மாத்திரைப் பற்று’ சிறப்பாகப் பலன் அளிக்கும். மாத்திரையின் பெயரிலேயே அதற்கான பெயர்க்காரணமும் வெளிப்படையாக இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று நீர்க்கோவை மாத்திரைகளைப் பொடித்து, தேவையான அளவு இஞ்சிச் சாறு விட்டுக் குழப்பி நெற்றிப் பகுதி, கன்னப் பகுதி (காற்றறைகள் உள்ள இடம்) ஆகியவற்றில் பற்றுப் போடலாம். ஒரு மணி நேரம் கழித்து, பற்றிட்ட பகுதியைக் குளிர்ந்த நீரில் கழுவிக்கொள்ளலாம்.
முதன்முறைப் பற்று போட்ட அனுபவத்திலேயே அறிகுறிகள் குறைந்திருப்பதை நன்றாக உணர முடியும். இஞ்சிச் சாறு சேர்த்துப் பற்றுப் போடுவதால் லேசான எரிச்சல் ஏற்படுவதைப் போல உணர்ந்தால் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு அதன் மீது பற்றுப் போடலாம்.
இஞ்சிச் சாற்றுக்குப் பதில் இளம் வெந்நீரிலும் கலந்து பற்றிடலாம். வாய்ப்பிருப்பின் தாய்ப்பால் அல்லது பசும்பாலில் உரைத்தும் நீர்க்கோவை மாத்திரையைப் பயன்படுத்தலாம். அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைக்க நீர்க்கோவை மாத்திரையால் பற்றிட்ட பிறகு சாம்பிராணிப் புகை அல்லது அகில் கட்டைப் புகையைப் பயன்படுத்தும் வழக்கமும் பாரம்பரியமாகப் பின்பற்றப்படுகிறது.
வேது (ஆவி) பிடிக்கும்போது வெந்நீரில் நீர்க்கோவை மாத்திரைகளைப் பொடித்துப் போட்டு ஆவியைச் சுவாசிக்க நல்ல நிவாரணம் கிடைக்கும். மூட்டுகளில் ஏற்படும் வீக்கங்களுக்கு நீர்க்கோவை மாத்திரைகளைப் பொடித்துக் கேழ்வரகு மாவோடு சேர்த்து, குழைந்த கஞ்சித் தண்ணீரில் கலந்து பற்றுப் போட வீக்கம் விரைவாக வடியும். Lateral epicondylitis (Tennis elbow) பிரச்சினைக்கு இந்தப் பற்று சிறப்பான வலி நிவாரணியாக அமையும்.
தனித்துவச் சிறப்புகள்: நீர்க்கோவை மாத்திரையில் உள்ள மூலிகைகள், எலுமிச்சை சாற்றுடன் கலந்து அரைக்கப்படும்போது வினைபுரிந்து தங்களது மருத்துவக் குணத்தை வெளிப்படுத்தும். ஓமத்தின் இசிவு அகற்றும் செய்கையும் லவங்கத்தின் உணர்ச்சிபோக்கி இசிவு அகற்றும் குணமும் மிளகு, மஞ்சளின் வீக்கமுறுக்கிச் செய்கையும் சுக்கு, கற்பூரத்தின் விறுவிறுப்புத் தன்மையும் சாதிக்காயின் இறுக்கிப் பிடிக்கும் துவர்ப்புத் தன்மையும் நீர்க்கோவை மாத்திரையின் தனித்துவத்துக்குக் காரணமாகின்றன.
மாத்திரையில் உள்ள சுக்கு, சாதிக்காய், மஞ்சள், ஓமம், லவங்கம் எனத் தனித்தனி மூலிகைகளும் பற்றுப் பொருளாகப் பயன்பட்டு வலியையும் வேதனையையும் நிவர்த்திசெய்கின்றன. லவங்கத்தைத் தனியாக அரைத்து நெற்றியில் பற்றுப் போடலாம். சுக்கைக் களி போலச் செய்தும் பற்றிடலாம். ஓமம் – மஞ்சள் பசையைப் பற்றாகப் பயன்படுத்தலாம்.
அளவுகோல்: அடிபட்ட வீக்கங்களுக்கு உடனடியாக வீக்கமுறுக்கி மருந்துகளைத் தேடாமல், நீர்க்கோவை மாத்திரையின் உதவியால் வெளிப்பற்றுப் போட வீக்கம் படிப்படியாகக் குறையும். அதே வேளையில் பற்றுப் போடுவதன் எல்லையை அறிந்திருப்பதும் அவசியம். தலைவலிக்கான அடிப்படைக் காரணத்தை மருத்துவரிடம் அறிந்துகொண்ட பிறகு பற்று சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
எலும்பு முறிவால் ஏற்பட்ட வீக்கங்களுக்கு எலும்புகளை இணைக்கும் மருத்துவ முறையை மேற்கொள்ளாமல், நீர்க்கோவை மாத்திரையை மட்டும் பற்றுப் போடுவதால் பலன் இருக்காது. வீக்கங்களின் தன்மையை அறிந்து பற்றுப் போடுவது அவசியம். வெளி மருந்தோ உள்மருந்தோ மருத்துவரின் ஆலோசனை அடிப்படையானது. நீர்க்கோவை மாத்திரை, பக்கவிளைவில்லாத புற மருந்து.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com