குழந்தைகளைப் புரிந்துகொள்வோம் 08 | டோக்கன் முறை: புள்ளிகளும் வெகுமதிகளும்

குழந்தைகளைப் புரிந்துகொள்வோம் 08 | டோக்கன் முறை: புள்ளிகளும் வெகுமதிகளும்
Updated on
2 min read

“அரிசி அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு, ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது. இதையொட்டி இன்று டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.” - இந்தச் செய்திக் குறிப்புக்கும் சொல்பேச்சு கேட்காத சிறாருக்கும் என்ன சம்பந்தம்? டோக்கன் என்கிற சொல்தான்!

கொடுக்கல்-வாங்கலின்போது ஒரு பொருளைப் பெற வழங்கப்படும் சீட்டுத் துண்டுதான் டோக்கன். இது மாதிரியான ஒரு டோக்கன் முறையைப் பயன்படுத்தி, சொல்பேச்சு கேட்காத சிறார்களின் நடத்தையைச் சீராக்க முடியும் என்பதை ஆய்வுகள் தீர்க்கமாக எடுத்துக் கூறுகின்றன. இன்னும் சொல்லப்போனால், இதுவரை கூறப்பட்ட வழிமுறைகளைவிட இந்த டோக்கன் முறை திறன் மிகுந்தது, சிறார் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தவல்லது.

டோக்கன் முறை - சொல்பேச்சு கேட்காத சிறாருக்கு வெகுமதிகள் கொடுத்து நன்னடத்தையை ஊக்குவிக்கும் ஒரு வழிமுறைதான் இந்தப் புள்ளி முறைமை. இதில் சிறாரின் நன்னடத்தைக்காகப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட அளவு புள்ளிகளைப் பெற்றால் அதற்குத் தக்க சலுகைகளை அல்லது வெகுமதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, 100 புள்ளிகள் பெற்றால் அன்று தனக்கு விருப்பமான திரைப்படத்தைப் பார்க்கலாம் என்று உறுதியளிக்கப்படுகிறது. அதேபோல, குறிப்பிடப்பட்ட அந்த நன்னடத்தையை அவன் கடைப்பிடிக்கத் தவறினால் புள்ளிகள் வழங்கப்படுவதில்லை.

அதாவது, அவனுக்கு அந்த வெகுமதி (திரைப்படம் பார்த்தல்) மறுக்கப்படுகிறது. எனவே, நன்னடத்தையை ஊக்குவிப்பதும், அதே நேரத்தில் விரும்பத்தகாத நடத்தைகளை (மறைமுகமாக) தண்டிப்பதும் இந்த அணுகுமுறையின் அடிப்படைத் தத்துவமாக அமைந்துள்ளது. ஒரு பக்கத்தில் வெகுமதி, மறு பக்கத்தில் தண்டனை என்கிற இரண்டுமே கொண்ட ‘கொடுக்கல் - வாங்கல்’ முறைதான் இந்த டோக்கன் முறை. இது எட்டு வயது முதல் பதின்ம வயது சிறார் களுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.

எப்படி நடைமுறைப்படுத்துவது? - முதல் கட்டமாக எந்த நன்னடத்தை களை ஊக்குவிக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். இதைத் தானாக முடிவு செய்யாமல், அவனுடன் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். ஆரம்பத்தில் மூன்று நடத்தைகளைத் தேர்ந்தெடுங்கள். இந்தக் கட்டத்தில் பெருமுயற்சி இல்லாமலே வெற்றி பெறக்கூடிய நடத்தைகளை ஊக்குவிப்பதே உங்கள் குறிக்கோளாக அமைய வேண்டும். ஏனென்றால், ஆரம்பத்தில் ஓரளவு வெற்றி பெற்றோம் என்கிற உணர்வு அவனுக்கு ஏற்பட வேண்டும்.

இது இந்த முறையைப் பின்பற்ற அவனுக்கு ஊக்கமளிக்கும். உதாரணத்துக்கு, காலையில் பள்ளிக்குத் தயாராகும்போது நேரத்தை வீணடிக்கும் சிறுவன் ஒருவனுக்கு அவன் பதினைந்து நிமிடங்களில் தயாராக இருக்க வேண்டும் என்பதை ஒரு குறிக்கோளாக அமைத்துக்கொள்ளலாம்.

அடுத்துக் கொடுக்கப்படும் டோக்கன்கள் சிறாருக்குப் புரியும்படி அமைய வேண்டும். தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு முகவடிவம் கொண்ட ஒட்டுப் படங்களை (Smily faces) டோக்கன்களாகப் பயன்படுத்துவது வழக்கம். பாடங்களுக்குப் பள்ளியில் புள்ளிகள் பெற்றுப் பழக்கப்பட்டச் சிறார் களுக்கு டோக்கன்களுக்குப் பதிலாகப் புள்ளிகள் வழங்குவதே சிறந்தது.

அட்டவணை: அடுத்து, ஒவ்வொரு நன்னடத்தைக்கும் எத்தனை புள்ளிகள் வழங்குவது, அதை எவ்வாறு சித்தரிப்பது என்று முடிவு செய்யவேண்டும். இதை ஒரு நோட்டுப் புத்தகத்தில் அட்டவணை வடிவில் பதிவுசெய்யுங்கள். முதல் அணிவரிசையில் ஞாயிறு, திங்கள் என்றபடி அன்றைய நாளைக் குறித்துக்கொள்ளுங்கள். அடுத்த அணிவரிசையில் அவன் அன்று எத்தனை டோக்கன்கள் பெற்றான் என்பதைப் பதிவுசெய்யுங்கள். குழந் தைகளுக்கு முகவடிவம் கொண்ட ஒட்டுப் படங்களை டோக்கன்களாகப் பயன்படுத்தலாம். பாடங்களுக்கு ஆசிரியர் வழங்கும் புள்ளிகள் போன்ற ஒரு முறையையும் சிறார் களுக்குத் தேர்ந்தெடுத்து அளிக்கலாம்.

என்ன வெகுமதி? - இத்தனை ஒட்டுப் படங்கள் அல்லது புள்ளிகள் பெற்றால் என்ன வெகுமதி அளிக்கப்படும் என்பதை அந்த அட்டவணையில் தெளிவாகக் குறிப்பிடுங்கள். இந்த அட்டவணையை எல்லா ரும் காணக்கூடிய ஓர் இடத்தில் மாட்டுங்கள். முன்னர் கூறியதுபோல இந்த வெகுமதிகள் சமூக வெகுமதிகளாக அமைவது முக்கியம்.

உதாரணத்துக்கு, ஒரு நாளில் பத்து ஒட்டுப்படங்கள் அல்லது புள்ளிகள் பெற்றால் அன்று அவன் தந்தையுடன் இருசக்கர வாகன சவாரி போகலாம் என்று ஓர் ‘ஒப்பந்தம்’ செய்துகொள்ளலாம். கூடவே, உச்சபட்ச புள்ளிகள் பெற்றால் ஒரு ‘சிறப்புப் பரிசு’ காத்திருக்கிறது என்று தெரிவிக்க வேண்டும்.

இந்த வழிமுறையைச் சிறாரின் நன்னடத்தையை ஊக்குவிப்பதற்கு மட்டுமின்றி வீட்டுக் கடமை களைச் செய்யவும் குடும்ப விதி முறைகளைக் கடைப்பிடிக்க ஊக்குவிக்கும் ஒரு கருவியாகவும் பயன்படுத்தலாம். பெற்றோருக்குச் சொல்லிக்கொடுக்கப்படும் திறன்களில் இந்த வழிமுறை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சிறார் இல்லங்களிலும் குழந்தை மருத்துவமனைகளிலும் இந்த டோக்கன் முறையே பயன்படுத்தப்பட்டுவருகிறது.



(தொடரும்)

- கட்டுரையாளர், மனநல மருத்துவர், முன்னாள் பேராசிரியர்; ibmaht@hotmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in