குழந்தைகளைப் புரிந்துகொள்வோம் 07: பொறுப்புகளும் குடும்ப விதிமுறைகளும்

குழந்தைகளைப் புரிந்துகொள்வோம் 07: பொறுப்புகளும் குடும்ப விதிமுறைகளும்
Updated on
3 min read

அன்றாட வாழ்க்கையில் நாம் நம்மை அறியாமலேயே பல விதிமுறைகளைக் கடைப் பிடிக்கிறோம். உதாரணத்துக்கு, சாலை விதிமுறைகள், பணியிடத்து விதிமுறைகள், பள்ளிக்கூடத்து விதிமுறைகள் எனப் பல வகையான ஒழுங்குமுறைகளை நாம் பின்பற்றுகிறோம்.

ஏன், எல்லா விளையாட்டுகளிலும்கூட விதிமுறைகள் உள்ளன. இதேபோல ஒவ்வொரு குடும்பத்திலும் சில விதிமுறைகள் உள்ளன. எத்தனை மணிக்குக் காலையில் எழ வேண்டும் என்பது முதல் அவரவர் கடமைகள் என்ன என்பது குறித்துப் பல எழுதப்படாத விதிகள் உண்டு. வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல இவை குடும்பத்துக்குக் குடும்பம் மாறுபடும். இந்த முறைசாரா விதிமுறைகளைச் சிறார்கள் பெரிய வர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள்.

குடும்பக் கடமைகள்: குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஒவ்வொரு வருக்கும் சில கடமைகள் உள்ளன. சமையல் செய்வது யார், குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துக்கொண்டு போவது யார் என்பது போன்ற அன்றாடக் கடமைகளில் குடும்பத்தவரிடையே ஒரு வகையான வேலைப் பிரிவு காணப்படும். பொதுவாகச் சிறார்களுக்கு, குறிப்பாக ஆண் பிள்ளைகளுக்கு இவ்வாறான ‘குடும்பக் கடமைகள்’ கொடுக்கப்படுவதில்லை.

ஆனால், பத்து வயது சிறார்களுக்குக் கூடச் சில வீட்டுக் கடமைகள் கொடுக்கப் பட வேண்டும் என்று குழந்தை வளர்ப்பு வல்லுநர்கள் நெடுங்காலமாகக் கூறி வந்துள்ளார்கள். உதாரணத்துக்கு, ஒவ்வொரு நாளும் சமையலறைக் குப்பை களைக் குப்பைத் தொட்டியில் போடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, சமையல் பாத்திரங்களைக் கழுவுவது போன்ற தினசரி வேலைகள் சிறார்களின் அன்றாடக் கடமைகளாக வரையறுக்கப்படும்போது அவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளக் கற்றுக்கொள்கிறார்கள்.

சொல்பேச்சு கேட்காத சிறார்களுக்குப் பொறுப்புணர்ச்சியையும் நன்னடத்தையையும் கற்றுக்கொடுக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது. ஆனால், இதை நேரடியாகச் சொன்னால் அவர்கள் அதைச் செய்யப்போவதில்லை. எனவே, அவர்களை ஊக்குவிக்கச் சில உளவியல் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உளவியலாளர்கள் கருதுகிறார்கள்.

ஓர் ஒப்பந்தம்: வெகுமதிகளும் சலுகைகளும் வழங்குவதன் மூலம் வீட்டுக் கடமைகளைச் செய்வதை ஊக்குவிக்க முடியும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதைத் திட்டமிட்டுக் கறாராக நடைமுறைப்படுத்தும் போதே அது நல்ல பலனளிக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் சிறார்களின் நல்ல நடத்தைகளை அதிகரிக்கவும் பிரச்சினைக்குரிய நடத்தைகளை மட்டுப்படுத்தவும் இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகக் கருதப்படுகிறது. இந்த வழிமுறை பதின்ம வயதினருக்கு மிகவும் ஏற்றதாகக் கருதப்படுகிறது.

எனவே, இது பற்றி சற்று விரிவாகப் பேசு வோம். அடிப்படையில் இந்த வழிமுறை உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் இடையே செய்துகொள்ளப்படும் ஓர் ஒப்பந்தம் ஆகும். பெற்றோர் குறிப்பிடும் ஒரு நன்னடத்தை யின்படி அவன் நடந்து கொண்டால் அவனுக்கு ஒரு வெகுமதி அல்லது சலுகை அளிக்கப்படும் என்பதே இதன் சாராம்சம். மேலோட்டமாகப் பார்க்கும்போது இது எளியதொரு செயலாகத் தோன்றலாம். ஆனால், இதை முறைப்படியாக, ஓர் ஒழுங்கின்படி தினசரி கடைப்பிடிப்பது பல பெற்றோர்களுக்கு எளிதாக இருக்கப்போவதில்லை.

எவ்வாறு நடைமுறைப் படுத்துவது? - முதலில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றுகூடி இது பற்றிப் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். இதில் சிறார்கள் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும். அவர்களின் குரலைப் பெற்றோர்கள் மதித்து நடக்க வேண்டும். சிறார்கள் வீட்டில் செய்ய வேண்டிய ‘வீட்டுக் கடமைகள்’ என்னென்ன என்பது குறித்துத் திறந்த மனதோடு பேசக்கூடிய சூழ்நிலையைப் பெற்றோர்கள் உருவாக்க வேண்டும். எல்லா ஒப்பந்தங்கள் போலவே இதில் இரு கட்சியினரும் பங்கெடுக்க வேண்டும்.

அடுத்து சில வீட்டுக் கடமை களைப் பட்டியலிட வேண்டும். இவை சிறார்களின் வயதுக்கு ஏற்றவை யாகவும் நடைமுறைச் சாத்தியம் கொண்டவையாகவும் அமைய வேண்டும். காலையில் எழுந்தவுடன் படுக்கையை ஒழுங்குபடுத்துவது, மாலையில் பள்ளிப் படிப்புக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிவைப்பது, குறிப்பிட்ட நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்துவது போன்ற அன்றாட நடவடிக்கையில் முதலில் கவனம் செலுத்தவும்.

பின், இந்த வீட்டு விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் அதற்கு என்ன பரிசு வழங்கப்படும் என்பதை ஒரு பட்டியலாக எழுதி அதை அனைவரும் காணக்கூடிய ஓர் இடத்தில் ஒட்டி வைக்கவும் அல்லது ஓர் அறிவிப்புப் பலகையில் இட்டு வைக்கவும். இந்தக் கட்டத்தில் தண்டனை அளிப்பதைத் தவிர்க்கவும்.

முந்தைய கட்டுரையில் கூறியபடி கொடுக்கப் படும் ‘பரிசுகள்’ பணமாகவோ விலை உயர்ந்த பொருள்களாகவோ இருக்கக் கூடாது. சாதாரணச் சலுகைகளாகவும் சிறுவர்கள் விரும்பும் பொழுது போக்குகளாகவும் இருக்கலாம். சிறார்களுக்கு என்னென்ன பிடிக்கும் என்பதைப் பெற்றோர்கள் அறிவார்கள். இவற்றை நன்னடத்தையை ஊக்கு விக்கும் உந்துகோல்களாகப் பயன்படுத்தலாம்.

குடும்ப விதிமுறைகள்: இதே முறையைக் குடும்பக் கடமைகளுக்கு மட்டுமின்றி ‘குடும்ப விதிமுறைகளை’ கடைப்பிடிக்கவும் பயன்படுத்தலாம். எல்லாக் குடும்பங்களிலும் சிறார்களுக்குச் சில கடமைகள் கொடுக்கப்படுவதுபோல ஒவ்வொரு குடும்பத்திலும் சிறார்கள் சில விதிமுறைகளின் படி ஒழுக வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள். பொய் பேசக் கூடாது, புகை பிடிக்கக் கூடாது, ஒளிவு மறைவு இன்றி நடந்துகொள்ள வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்த வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்ல வேண்டும் என்பன போன்ற சில ‘குடும்ப நியதிகள்’ உள்ளன. பல குடும்பங்களில் சிறார்கள் யார், யாருடன் சேரக் கூடாது, என்னென்ன சாப்பிடக் கூடாது, வெளியில் போனால் எத்தனை மணிக்குமுன் வீட்டுக்கு வர வேண்டும் எனப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்த மேலே கூறப்பட்ட ஒப்பந்த முறையைப் பெற்றோர்கள் கடைப்பிடிக்கலாம்.

இந்த ஒப்பந்தம் சிறார்களின் வயதுக்குப் பொருத்தமானவையாக இருத்தல் அவசியம். பத்து வயதுச் சிறுவனுக்கும் பதினாறு வயது இளைஞனுக்கும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. கூடவே, கட்டுப்பாடுகள் கூடியவரை நேர்மறையாகவும் ஆக்கபூர்வ மாகவும் வடிவமைக்கப்பட வேண்டும். கட்டளைகளைப் பட்டியலிடும்போது “புத்தகங் களைக் கண்டபடி போட வேண் டாம்” என்று எதிர்மறைத் தொனியில் கூறுவதைவிட “புத்தகங்களை அடுக்கி வை” என்று நேர்மறையாகக் கூற வேண்டும்.

சில நேரத்தில் கடமைகளையும் கட்டுப் பாடுகளையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இதேபோல கொடுக்கப் படும் பரிசுகளும் வழங்கப்படும் சலுகைகளும் சில நேரம் பலனளிக்காமல் போகும்போது அவற்றை மாற்றியமைக்கவும் பெற்றோர்கள் தயாராக இருக்க வேண்டும். சிறார்களுக்கு வயது போகப்போக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்க வேண்டும்.

இதில் முக்கியமான ஒரு நிபந்தனை என்னவென்றால், இந்தக் கட்டுப் பாடுகளை நீங்களும் மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதே. “சத்தம்போட்டுப் பேசாதே’’ என்று அவனுக்கு உபதேசம் செய்துவிட்டு நீங்கள் உங்கள் மனைவியுடன் சத்தம் போட்டு சண்டை பிடித்தால் தனக்கு ஒரு சட்டம் உங்களுக்கு இன்னொரு சட்டம் என்றாகி விடும். பதின்ம வயதை எட்டிக்கொண்டிருக்கும் சிறார்கள் எது தவறு, எது சரி என்பது குறித்து கறுப்பு/வெள்ளையாக இருமையில் சிந்திக்கும் மனப்பான்மை கொண்டவர்கள். எனவே உங்களுக்குள்ள கடமைகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது. இதில் பெற்றோர்கள் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

(தொடரும்)

- கட்டுரையாளர், மனநல மருத்துவர், முன்னாள் பேராசிரியர்; ibmaht@hotmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in