Published : 04 Nov 2017 11:29 AM
Last Updated : 04 Nov 2017 11:29 AM

டிஜிட்டல் போதை 07: மூளை எனும் ரசவாதி

 

நீ

ங்கள் பிளாஸ்டிக்கைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதன் முக்கியப் பண்பு என்ன? நெகிழ்தல். ஆம், பிளாஸ்டிக்கை நீங்கள் உங்களுக்கு வேண்டிய வடிவத்துக்கு ‘மோல்ட்’ செய்துவிடலாம்.

மனித மூளையும் இப்படி பிளாஸ்டிக் போன்று நெகிழும் தன்மை கொண்டது என்று நிரூபித்தது ஒரு ஆய்வுக் குழு. மூளையின் வடிவம் பிளாஸ்டிக் போன்றதல்ல. மாறாக மூளை செயல்படும் தன்மை பிளாஸ்டிக் போன்றது. இதை ‘நியூரோபிளாஸ்டிசிட்டி’ என்கிறார்கள் - நரம்பியல் நெகிழ்வு.

நெகிழ்தல் குறித்த ஆய்வு

2011-ம் ஆண்டு சர்வதேச சமகால உயிரியியல் இதழில், எலியனார் மெக்வைர், கேத்தரின் வுல்லட் ஆகியோர் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டார்கள். லண்டன் பல்கலைக்கழகத்தின் ‘நியூரோ இமேஜிங்’ (மூளையை ஸ்கேன் செய்வது என்று வைத்துக்கொள்வோம்) மையத்தில் ஆய்வு செய்துவந்த இவர்கள், லண்டனில் உள்ள 12 வாடகை கார் ஓட்டுநர்களைத் தேர்ந்தெடுத்து பரிசோதனை ஒன்றை மேற்கொண்டார்கள்.

தவிர, லண்டனுக்குப் புதிதாக வந்திருப்பவர்கள் சிலரையும் அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். லண்டன் வீதிகளும் இடங்களும் மிகவும் குழப்பமானவை. சரியான முகவரியைக் கண்டுபிடிக்கத் தேர்ந்த அறிவுத் திறன் வேண்டும். நினைவாற்றல் வேண்டும். இல்லையென்றால் குழம்பம் அதிகரித்துவிடும்.

இந்நிலையில், இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட, லண்டனுக்குப் புதிதாக வந்தவர்கள் யாருக்கும் லண்டன் வழித்தடங்கள் பெரிதாகத் தெரியாது. அவர்கள் அனைவரின் மூளையும் முதலில் ஸ்கேன் செய்யப்பட்டது.

அதிகரித்த தொடர்புகள்

ஓட்டுநர்களுக்குத் தினமும் லண்டன் வழித்தடங்கள் பற்றிய தகவல்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. நினைவில் கொள்ளுங்கள், இவர்கள் யாரிடமும் ஜி.பி.எஸ். கருவி கிடையாது. அவர்கள் சில வாரங்கள் கார்களை ஓட்டினார்கள். இப்போது அவர்களுக்கு வழித்தடங்கள் பற்றி தேர்வு ஒன்று வைக்கப்பட்டது. இந்தத் தேர்வில் சிலர் தேறிவிட்டார்கள். பலர் தேறவில்லை. சரி அனைவரின் மூளையும் இப்போது மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டது. முடிவு ஆச்சரியமானது!

வழித்தடங்களை நன்றாகக் கற்றுத் தேர்ந்தவர்களின் மூளையில், ‘நியூரான்’ எனும் நரம்பு செல்களின் தொடர்புகள் முன்பைவிட அதிகமாகி இருந்தன. அதாவது, மூளை நடைமுறைக் கற்றலுக்கு ஏற்ப மாறி, நரம்பு செல்கள் தம் தொடர்புகளை மேம்படுத்திக்கொண்டிருந்தன.

தேர்வில் தேறாதவர்களின் மூளை, பரிசோதனைக்கு முன்பு எடுக்கப்பட்ட படத்துடன் பெரும்பாலும் ஒத்துப் போனது. இதன் அடிப்படையில் அந்த ஆய்வாளர்கள் இருவரும் மூளையின் நெகிழ்வுத்தன்மையைப் பற்றி உலகுக்கு அறிவித்தார்கள்.

நரம்பு செல்களின் மாயம்

இதைப் புரிந்துகொள்ள மூளையின் அடிப்படைகளை பற்றிப் பார்ப்போம். நாம் பேசுவது, எழுதுவது, சுவைப்பது, கற்பது, கற்பிப்பது என எல்லாமே மூளையைப் பொறுத்தவரை சில நரம்பு செல்கள் செய்யும் மாயாஜாலங்கள்தான்.

நரம்பு செல்கள் தமக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதை நரம்பு செல்களின் தொடர்பு (நியூரல் நெட்வர்க்) என்கிறோம். இந்த நரம்பு செல்களின் தொடர்புக்குக் காரணம், இவற்றில் பாயும் நரம்புக் கடத்திகள் (நியூரோ டிரான்ஸ்மிட்டர்ஸ்). நரம்புக் கடத்திகள் என்பவை ஒரு வகை ரசாயனம். மனிதனின் செயல்பாடுகள் அனைத்துக்கும் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம்தான் காரணம். ஆம், மூளை மிகப் பெரிய ரசவாதி!

(அடுத்த வாரம்: மாறும் மூளை… மாற்றும் மூளை!)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x