

சிறார் நல்லபடியாக நடந்து கொள்ளும்போது அவர்களைப் பாராட்டுவது நன்னடத்தையை ஊக்குவிக்கும். இதன் நீட்சியாக, சிறார் எப்போதெல்லாம் நல்லபடியாக நடந்து கொள்கிறார்களோ அந்த நேரத்தில் பரிசு அல்லது வெகுமதிகளை வழங்குவது இந்த வகைச் சிறாரின் நடத்தையைப் பெருமளவு மேம்படுத்தும் என்பதை ஆய்வாளர்கள் நிறுவியுள்ளார்கள்.
‘சொல்பேச்சு கேட்காத குழந்தைக்கு லஞ்சம் கொடுக்கச் சொல்கிறீர்களா?’ என்று சிலர் கேள்வி எழுப்பக்கூடும். ஆனால், சற்று எண்ணிப் பார்த்தால் அன்றாட வாழ்வில் பரிசு வழங்கி ஊக்குவிக்கும் பழக்கம், சமூகத்தில் பரவலாக உள்ளது என்பது தெரியவரும். வெற்றி பெற்ற விளையாட்டு அணிக்குப் பரிசளிப்பது, சிறப்பாகப் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (போனஸ்), வகுப்பில் முதலாவதாக வரும் மாணவருக்குக் கொடுக்கப்படும் நற்சான்றிதழ் ஆகிய யாவுமே பரிசுகள்தாம். எனவே, சரியான முறையில் வழங்கப்பட்டால் பரிசுகளும் வெகுமதிகளும் நன்னடத்தைக்கு உரமாக அமையும்.
நன்னடத்தையை ஊக்குவிப்பதே நோக்கம்: இந்த முறையை மேற்கொள்ளும் முன்னர் பெற்றோர் இருவரும் தமக்குள்ளே பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். பின் என்ன மாதிரியான பரிசுகள் கொடுப்பது என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும். அடுத்து எப்போது, எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பரிசுகளும் வெகுமதிகளும் வழங்குவது என்கிற கேள்வி எழுகிறது.
இதில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பது முக்கியம். பெற்றோரின் குறிக்கோள் சிறாரின் நன்னடத்தையை ஊக்குவிப்பதாக அமைய வேண்டும் என்பதால், நீங்கள் எதிர்பார்க்கும் முதல் மூன்று அல்லது நான்கு நன்னடத்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள். ஆரம்பத்தில் இவை பெரும் முயற்சி இல்லாமலே நிறைவேற்றக் கூடியவையாக இருக்க வேண்டும். ஏனென்றால், இதில் வெற்றி பெறும்போது அது குழந்தையை ஊக்குவிக்கும், தோல்வி அடைந்தால் மனம் தளர்ந்துவிடும்.
உதாரணத்துக்கு, அன்று வீட்டுப் பாடங்களைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடிப்பது, தங்கையுடன் சண்டைபோடாமல் இருப்பது அல்லது தாய் தொலைபேசியில் பாட்டியுடன் பேசும்போது குறுக்கீடு செய்யாமல் நடந்துகொள்வது என்பது போன்ற நன்னடத்தைகளைப் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். பின் இந்தத் திட்டத்தை குழந்தையுடன் பேசி நீங்கள் எதிர்பார்க்கும் நன்னடத்தைகள் யாவை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
என்ன பரிசு? - அடுத்து என்ன பரிசு கொடுப்பது என்கிற கேள்வி எழுகிறது. தங்களால் கொடுக்க முடியாத பரிசுகளைத் தருவேன் என்று ஆசை காட்டுவது பெற்றோர் செய்யும் பெரும் தவறுகளில் ஒன்று. உதாரணத்துக்கு, ‘நீ நல்லபடி நடந்துகொண்டால் உனக்கு ஓர் ஆப்பிள் திறன்பேசி வாங்கித் தருகிறேன்’ என்று கூறுவது மாபெரும் தவறு. பரிசுகள் வழங்குவது என்பது ஒரு வகையான ஒப்பந்தம் என்பதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைக்குச் சாத்தியமான பரிசுகளைத் தேர்ந்தெடுங்கள்.
பரிசளிப்பது பற்றிப் பேசும்போது உளவிய லாளர்கள் இரண்டு வகையான பரிசுகளைக் குறிப்பிடுகிறார்கள். ஒன்று, அந்தக் குழந்தை விரும்பும் ஒரு பொருளை வாங்கிக் கொடுப்பது (Material rewar ds). உதாரணத் துக்கு, “நீ நல்லபடி நடந்துகொண்டால் உனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருகி றேன்” என்று கூறுவது. உண்மையில் இது பரிசல்ல, இது ஒருவகை லஞ்சம்!
மற்றது, சமூக வெகுமதிகள் (Social rewards). உதாரணத்துக்கு, குழந்தை அன்று நல்லபடி நடந்து கொண்டால் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை ஓரளவு நீட்டிப்பது. வழக்கமாக அது 20 நிமிடமாக இருந்தால் அன்றிரவு அதை 30 நிமிடமாக்க இணங்குவது; அல்லது அன்றிரவு முழுக் குடும்பமும் 20 நிமிடத்துக்கு பேசுவது என்பது போன்ற வழக்கத்துக்கு மாறான சிறுசிறு நடவடிக்கையும்கூடப் பரிசுதான்.
அதாவது, இந்த வெகுமதிகள் விலை உயர்ந்த பரிசுகளாக இருக்கத் தேவையில்லை. மிகச் சாதாரணமான வெகுமதிகள்கூட இவர்களின் நடத்தையில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நன்னடத்தைக்காகச் சிறு பரிசு கொடுப்பது பெற்றோருக்குப் பெரும் முயற்சியாக இருக்கப்போவதில்லை.
இம்மாதிரியான நேரத்தில் பெற்றோரின் முழுக் கவனமும் சிறார் பக்கம் திரும்புகிறது; தன்னைப் பெற்றோர் பாராட்டு கிறார்கள் என்பதை சிறார் உணர்கிறார்கள். இதனால், சிறாரின் தன்மதிப்பு ஏற்றம் பெறுகிறது. பெற்றோரின் அன்புக்கும் பாசத்துக்கும் தான் தகுதிஉடையவர் என்கிற எண்ணம் அவர்கள் மனதில் விதைக்கப் படுகிறது. இதனால் அச்செயலை மீண்டும் மீண்டும் செய்ய அவர்கள் மனம் விழைகிறது.
சில விதிகள்: வெகுமதிகள் வழங்கி நன்னடத்தையை ஊக்குவிக்கும்போது பெற்றோர் சில விதிகளைக் கடைப்பிடித்தாக வேண்டும். பல பெற்றோர் சில நேரம் தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிடுவது உண்டு. இதனால், குழந்தைகள் பெற்றோர் கூறும் வாக்குறுதிகளை நம்புவதில்லை. எனவே, பெற்றோர் தாம் அளித்த வாக்குறுதியை எப்போதும் காப்பாற்ற வேண்டும்.
அதாவது, முன்னர் செய்த ஏற்பாட்டின்படி குறிப்பிட்ட நன்னடத்தைக்கு அந்த வெகுமதியைக் கட்டாயம் கொடுத் தாக வேண்டும். இதில் பெற்றோர்கள் கவனக் குறைவின்றியும் நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும். அதேபோல, பரிசை உடனுக்குடன் கொடுத்துவிட வேண்டும், தள்ளிப்போடக் கூடாது. இது ஒரு முக்கியமான நிபந்தனை. அதாவது, தான் நன்னடத்தைக்காகக் கவனம்பெறுகிறோம், மதிக்கப்படுகிறோம் என்கிற எண்ணம் சிறாருக்கு ஏற்படும் வகையில் பெற்றோர் நடந்துகொள்ள வேண்டும்.
மற்றது, சொல்லப்பட்ட நன்னடத்தையை சிறார் நிறைவேற்றிய பின்னரே வெகுமதிகள் வழங்கப்பட வேண்டும். அதை முன்கூட்டியே கொடுப்பது லஞ்சம் கொடுப்பது போல அமைந்து விடும். சில நேரம் கொடுத்த செயலை சிறார் செய்து முடிக்கும் முன்னரே வெகுமதியைத் தருமாறு கேட்டு அடம்பிடிப்பது உண்டு. உதாரணத்துக்கு, “இதோ நான் வீட்டுப்பாடங்களைச் செய்யப் போகிறேன்.
எங்கே என் பரிசு?” என்று சில சிறார் விதண்டாவாதம் செய்வது உண்டு. இம்மாதிரியான கோரிக்கைகளுக்கு விட்டுக்கொடுத்தால் சிறார் கற்றுக்கொள்ளும் பாடம், ‘பெற்றோரைத் தன் மனம் போனபடி ஆட்டிவைக்கலாம் என்பதே’. எனவே, சொன்னதைச் செய்து முடித்த பின்னரே பரிசைக் கொடுக்க வேண்டும்.
சில நேரம் ஒரு முறை பரிசைப் பெற்ற பின் அவர்களின் நடத்தை முற்றுமுழுதாக மாறாமல் இருப்பதைக் கண்டு கொடுத்த பரிசைத் திருப்பிப் பெற வேண்டும் என்று பெற்றோர் எண்ணுவது உண்டு. இதுவும் தவறான அணுகுமுறை. அந்தப் பரிசு ஒரு குறிப்பிட்ட நன்னடத்தைக்காக வழங்கப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். அந்த ஒப்பந்தத்தை மீறுவது தவறு. இம்மாதிரியான சிறார் ஒரே நாளில் மாறப்போவதில்லை என்பதை மனதில் கொண்டு, பெற்றோர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். இதில் நீங்கள் சிறந்ததொரு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.
இங்கே கூறப்படும் உத்திகள் யாவும் பெற்றோரின் சிறார் வளர்ப்புத் திறமைகளை (Parenting skills) மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆய்வுகள் கூறும் முடிவுகளின் அடிப்படையில் எடுத்துரைக்கப்படுகின்றன. ஒவ்வொரு திறனையும் உள்வாங்கி ஒரு வாரம் அல்லது பத்து நாள்கள் என முனைப்புடன் அதை நிறைவேற்றுங்கள்.
பின் இங்கே கூறப்படும் அடுத்த திறனைச் செயல்படுத்திப் பாருங்கள். அப்போதுதான் இந்த வழிமுறையின் முழுப் பயனையும் பெற முடியும். மாடிப் படிக்கட்டில் ஏறும்போது ஒவ்வொரு படியாகத்தானே ஏறுவோம்!
(தொடரும்)
- கட்டுரையாளர், மனநல மருத்துவர், முன்னாள் பேராசிரியர்; ibmaht@hotmail.com