விளையாட்டு சார்ந்த பல் காயங்கள்: தவிர்ப்பது எப்படி?

விளையாட்டு சார்ந்த பல் காயங்கள்: தவிர்ப்பது எப்படி?
Updated on
3 min read

இந்தியர்களின் வாழ்க்கையில் விளையாட்டு ஒரு முக்கியமான அங்கம். இந்தியாவில் பல்வேறு விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. இந்தியாவில் கிரிக்கெட்டே மிகவும் பிரபலமான விளையாட்டாகக் கருதப்படுகிறது என்றாலும், கால்பந்து, ஹாக்கி, கபடி, கோ-கோ, குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளும் பலதரப்பட்ட மக்களால் விளையாடப்படுகின்றன.

விளையாட்டில் ஈடுபடும்போது நமதுஉடல் மட்டுமல்லாமல்; மனதும் வலுவடை கிறது. விளையாட்டினால் நமக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன; இருப்பினும், அதனால் ஏற்படும் காயங்களும் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன.

காயங்களின் வகைகள்: விளையாட்டினால் ஏற்படும் காயங்களைக் கடுமையான காயங்கள், நாள்பட்ட காயங்கள் என இரண்டாக வகைப்படுத்தலாம். விளையாட்டின்போது ஒரு விளையாட்டு வீரர் விழுவதாலோ, அடிபடுவதாலோ ஏற்படுபவை கடுமையான காயங்கள். உடலின் ஒரு பகுதியை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படுபவை நாள்பட்ட காயங்கள். பொதுவாக, 5 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு உடலின் மேற்பகுதிகளில் எலும்பு முறிவு உள்ளிட்ட காயங்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன.

13 முதல் 17 வயதுக்கு உட்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு இடுப்பு, முதுகுத் தண்டு, மார்பில் அதிக அளவில் காயங்கள் ஏற்படுகின்றன. விளையாட்டினால் ஏற்படும்காயங்களில், பல்லில் ஏற்படும் காயங்கள் மிகவும் வலி மிகுந்தவை; ஆபத்தான வையும்கூட. பல் மருத்துவத்தில் ‘விளையாட்டு சார்ந்த பல் மருத்துவம்’ என்று ஒரு புதிய துறை உருவாகும் அளவுக்கு இந்தக் காயங்கள் உலக அளவில் பரவலாக உள்ளன.

விளையாட்டு சார்ந்த பல் மருத்துவம்: விளையாட்டு சார்ந்த பல் மருத்துவம், 1980களிலேயே உருவாகிவிட்டது. இருப்பினும் சமீப ஆண்டுகளில், இது பல் மருத்துவத்தின் முக்கியத்துவம் வாய்ந்த துறையாகக் கருதப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்குக் காயம் ஏற்படக்கூடிய பற்களைக் கண்டறிந்து, பல் காயங்களை உடனடியாக நிர்வகிப்பதே இந்தத் துறையின் அடிப்படை நோக்கம். விளையாட்டின்போது வாய், முகத்தில் ஏற்படும் காயங்கள், அதனுடன் தொடர்புடைய வாய்வழி நோய்கள், அந்த நோய்களைத் தடுக்கும் சிகிச்சைகள், காயங்கள், நோய்களின் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தத் துறை உள்ளது.

விளையாட்டுகளின்போது, முகத்திலும் பற்களிலும் வாயினுள்ளே இருக்கும் மென்மையான, கடினமான திசுக்களுக்கும் காயம் ஏற்படும் சாத்தியம் அதிகம். இத்தகைய காயங்கள் அந்த இடங்களின் கட்டமைப்பு களைச் சேதப்படுத்துவது மட்டுமல்லாமல்; காயமடைந்த வீரரை உணர்வுரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் மோசமாகப் பாதிக்கும். நவீன பல் மருத்துவம், இத்தகைய காயங்களிலிருந்து விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் ஏராளமான நுட்பங்களையும் கருவிகளையும் கொண்டுள்ளது.

விளையாட்டு சார்ந்த பல் காயங்கள்: உடல் தொடர்புடைய குழு விளை யாட்டுகள், உடல் தொடர்பற்ற தனி விளை யாட்டுகள், பொழுதுபோக்கு நடவடிக் கைகள் போன்றவற்றின் காரணமாகப் பல் காயங்கள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கும் இளம் பருவத்தினருக்கும் இத்தகைய காயங்கள் ஏற்படும் ஆபத்து அதிகம். விளையாட்டு சார்ந்த பல் காயங்கள் பல வகை உள்ளன.

பல் கிரீடத்தில் ஏற்படும் முறிவு

விளையாட்டு சார்ந்த பல் காயங்களில் அதிகம் ஏற்படும் ஒன்றாக இது உள்ளது. இது பொதுவாக முன் பற்களில் ஏற்படும். பற்சிப்பி (enamel), பற்கூழ் (pulp), பல்திசு (dentin) ஆகியவை இதனால் பாதிக்கப்படும்.

பற்சிப்பி முறிவு

பற்சிப்பி முறிவு, விளையாட்டு சார்ந்த பல் காயங்களில் அவசரநிலையாகக் கருதப்படுவதில்லை. இவை பெரும்பாலும் விளையாட்டு வீரர்களால் கவனிக்கப்படாமல் விடப்படுகின்றன. இந்த முறிவுகள் அல்லது காயங்கள் அறிகுறியற்றவை; வழக்கமான பல் பரிசோதனையின்போதே இவை கண்டறியப்படுகின்றன.

வேர் முறிவு: பல் கிரீடத்தில் ஏற்படும் முறிவுகளைவிடப் பற்களின் வேர்களில் ஏற்படும் முறிவுகள் குறைவாகவே நிகழ் கின்றன. ஆனால், வேர் முறிவின் இடத்தைப் பொறுத்து இதன் பாதிப்பின் தீவிரம் இருக்கும்.

பல் இடப்பெயர்ச்சி: ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் இது அதிக அளவில் ஏற்படுகிறது. இத்தகைய காயத்தின்போது, பற்கள் அவற்றின் இடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு இடம்பெயர்ந்துவிடும்.

பல் விழுதல்: இத்தகைய காயத்தின்போது, பல்லானது முற்றிலும் விழுந்துவிடும். காயமடைந்த 15 நிமிடத்துக்குள் சிகிச்சை அளிக்கப்பட்டால், விழுந்த பல்லை மீண்டும் வாயினுள் பொருத்திவிடும் வாய்ப்பு உண்டு.

எவ்வாறு தடுப்பது? - தலைக்கவசம், முகக்கவசம், வாய்க்காப்பு போன்ற பாதுகாப்புக் கருவிகளைச் சரியான முறையில் பயன்படுத்துவது முகம், பற்கள் உள்ளிட்ட வாய்வழி காயங்களைத் தடுக்க உதவும்.

தலைக்கவசம் - உச்சந்தலை, காதுகளைப் பாதுகாக்க இது உதவுகிறது. காயத்தின்போது தலை எலும்புகளையும், நரம்பு மண்டலத்தையும் இவை பாதுகாப்பதோடு, உயிரிழப்பையும் தவிர்க்க உதவும்.

முகக்கவசம் - இது கண்கள், முகம், மூக்கு, தாடை எலும்பு, வாய், கீழ்த் தாடை ஆகியவற்றைப் பாதுகாக்கிறது. முகக்கவசத்தின் முக்கிய குறைபாடுகளில் ஒன்று, அதை எதிராளி வீரரால் எளிதில் பற்றிவிட முடியும் அல்லது இழுக்க முடியும். இந்தக் குறைபாட்டின் காரணமாக, கடுமையான கழுத்து காயங்கள் அல்லது முதுகெலும்பு காயங்கள் ஏற்படலாம்.

வாய்க்காப்பு - இதன் விலை குறைவு, எளிதிலும் வாங்க முடியும். இவை பொதுவாக ஒரே அளவில் கிடைக்கும்; அனைத்து விளையாட்டு வீரர்களும் இதை எளிதாக அணியலாம். இவை உறுதியானவை; இதனை அதன் இடத்தில் தக்கவைக்க முடியும்; எளிதில் கழன்று விழாது. பற்களை ஒன்றாகக் கடிப்பதன் மூலம் இதை நாம் ஒரே இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

விழிப்புணர்வு அவசியம்: விளையாட்டு தொடர்பான பல் காயங்கள் பொதுவானவை என்றாலும், அவற்றுக்கு உடனடி கவனமும் சிகிச்சையும் தேவை. ஆசிரியர்களும் பயிற்சியாளர்களும் விளையாட்டு வீரர்களும், முக்கியமாகப் பெற்றோர்களும் பல் மருத்துவ நிபுணர்களுடன்தொடர்பில் இருப்பது நல்லது. அது அவர்களுக்கு பற்களின் பாதுகாப்பு, முக பராமரிப்பு, காயத்தைத் தடுக்கும் வழிமுறைகள், அதன் மேலாண்மை குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை அளிக்கும். விளையாட்டு சார்ந்த பல் காயங்கள் குறித்த போதுமான விழிப்புணர்வே, உடல்ரீதியிலான ஆபத்திலிருந்தும், உளவியல்ரீதியிலான பாதிப்பிலிருந்தும் விளையாட்டு வீரர்களைக் காக்கும்.

ஆபத்து காரணிகள்: ஆபத்து காரணிகளை வெளிப்புற ஆபத்து காரணிகள், உள்ளார்ந்த ஆபத்து காரணிகள் என இரண்டாக வகைப் படுத்தலாம்.

வெளிப்புற ஆபத்து காரணிகள்:

# தவறாக விளையாடும் முறை

# விளையாட்டில் தேர்ச்சியின்மை அல்லது திறன் போதாமை

# விளையாட்டு மைதானத்தின் தரம்.

# பயன்படுத்தப்படும் கருவிகளின் தரம்

# மழை, பனி போன்ற தட்பவெப்பநிலை

# மேற்பார்வையாளரின் கவனக்குறைவு

உள்ளார்ந்த காரணிகள்:

# உடலியல் அல்லது உளவியல் காரணிகள்

# வயது தொடர்பான காரணிகள்.

# பாலினம்

# உடல் அளவு

- கட்டுரையாளர், வாய்வழி நோயியல் நிபுணர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in