குழந்தைகளைப் புரிந்துகொள்வோம் 05: கட்டளை நல்லது

குழந்தைகளைப் புரிந்துகொள்வோம் 05: கட்டளை நல்லது
Updated on
3 min read

மணி ஏழரையாகிறது. மோகன் இன்னும் பள்ளிக்கூடத்துக்குப் போகத் தயாராகவில்லை. அவன் தன்னை மறந்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பள்ளிச் சீருடைகளைத் தாய் எடுத்துக்கொடுத்தும் அவன் திரும்பிப் பார்த்ததாகத் தெரியவில்லை. ‘பள்ளிக்கூடம் போக நேரமாகிறது’ என்று பலமுறை சொல்லியும் அவன் அசையக்கூட இல்லை.

அவனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைத்த பின் அவர் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும்; மருத்துவமனையில் உள்ள தன் தாயைப் போய் பார்க்க வேண்டும்; அதன்பின் கடைக்குச் சென்று காய்கறி வாங்கிவர வேண்டும் என அவருக்குப் பல நெருக்கடிகள்.

ஆனால், மோகன் அவர் கூறியதைக் காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. ‘இன்னும் ஒரு நிமிஷம், அம்மா’ என்று சொல்லிவிட்டுத் தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடக்கிறான். ‘கத்தி கத்தி என் தொண்டத் தண்ணி வத்தியாச்சு, இவன் தயாராகிற மாதிரி தெரியல’ என்று தாய் அலுத்துக்கொள்கிறார்.

இந்த மாதிரியான காட்சிகளைப் பல குடும்பங்களில் அன்றாடம் காணலாம். ஒரு சாதாரணமான வேண்டுகோளுக்குக்கூடச் சிறார்கள் கீழ்ப்படிவதில்லை என்பது பல பெற்றோர் அடிக்கடி கூறும் குறையாக உள்ளது. பெற்றோர் சொல்வதைச் சிறார்கள் செய்ய மறுப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், தாங்கள் சொல்வதைச் சரியான முறையில் பெற்றோர் எடுத்துச்சொல்லத் தவறுவதே அதற்கான முக்கிய காரணம் என்று துறைசார் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

இதனால்தான், பெற்றோர் சொல்வதைச் சிறார்கள் பொருள்படுத்துவதில்லை. சிலர் கேட்டும் கேட்காத மாதிரி நடந்துகொள்கிறார்கள். தான் கூறுவதைத் தொடர்ந்து உதாசீனம் செய்துவந்த ஒன்பது வயதுப் பையன் ஒருவனின் தாய் அவனுக்குக் காது கேட்கவில்லை என்று எண்ணி அவனை ஒரு பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் காட்டியதாக ’பெற்றோர் ஆதரவு’க் கூட்டத்தில் ஒருவர் கூறினார். பெற்றோருக்குப் பயன்தரும் வகையில் எவ்வாறு சிறார்களுக்கு ஒரு செயலைச் செய்யச் சொல்வது என்பதைக் காண்போம்.

கட்டளையும் வேண்டுகோளும் ஒன்றல்ல: ஒரு செயலை (சுமார் பத்து வயதான) ஒரு சிறுவனுக்குச் சொல்லிக் கட்டளையிடும்போது சில விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியம். முதன்முதலாகக் கட்டளை, ஒரு வேண்டுகோளாக அமையக் கூடாது. ‘இதைச் செய்கிறாயா?’ என்பது கட்டளை அல்ல, ஒரு வேண்டுகோள். அதன் மறைபொருள், ‘வேண்டுமானால் நீ அதைச் செய்யலாம்’ என்பதே.

அவன் இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அந்த வேண்டுகோளைப் புறக்கணிக்க நீங்களே ஒரு வழிவகுத்துக்கொடுக்கிறீர்கள். எனவே, எந்த ஒரு கட்டளையையும் அரைகுறை மனதோடு கூறுவது தவறு. சொல்வதைத் தெளிவாக ‘இதை நீ தட்டாமல் செய்ய வேண்டும்’ என்றவாறு கண்டிப்பான தொனியில் கூறுவது அவசியம்.

ஒரு நேரத்தில் ஒரு கட்டளை: அடுத்து, கட்டளையிடும்போது பலகாரியங்களைச் செய்யச் சொல்ல வேண்டாம். ஒரு நேரத்தில் ஒரு கட்டளை மட்டுமே இடவேண்டும். ‘மேசையில் உள்ள பாத்திரங்களைச் சமையலறைக்குக் கொண்டு போய் வைத்துவிட்டு உன் அறையைச் சுத்தம் பண்ணு. ஓ! சொல்ல மறந்துவிட்டேன் உன் நண்பன் உன்னோடு ஏதோ முக்கியமான பள்ளிக்கூட விஷயம் பற்றிப் பேச வேண்டும் என்று தொலைபேசியில் கூறினான்’ என்று இம்மாதிரி அடுக்கடுக்காகச் சொல்லும்போது, சிறார்களுக்கு (மற்றவர்களுக்கும்தான்) குழப்பம் ஏற்படுமே தவிர, என்ன செய்யச் சொன்னீர்கள் என்பது புரியாது. எனவே, ‘ஒரு நேரத்தில் ஒரு கட்டளை’ என்கிற விதியைக் கடைப்பிடிக்கப் பழகிக்கொள்ளுங்கள்.

கவனத்தை ஈர்க்க வேண்டும்: கட்டளையிடும்போது முதலில் அவன் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும். தொலைக்காட்சி, கைபேசி ஆகியவற்றில் அவன் கவனம் குவிந்திருக்கும்போது நீங்கள் கூறுவதை அவன் கவனிக்கப் போவதில்லை. எனவே, அவன் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பிய பின் உங்கள் கட்டளையைக் கூறுங்கள். ‘இதோ பார், நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள்’, ‘தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு’ என்கிற முன்னுரையுடன் ஆரம்பிக்கலாம்.

அடுத்து, கட்டளையைத் திட்டவட்ட மாகவும் தெளிவானதாகவும் கூறிய பின்னர், அவன் அதைக் காதுகொடுத்துக் கேட்டுக் கொள்கிறானா என்பதை உற்றுக் கவனியுங்கள். அது அவனுக்குப் புரிந்ததா என்பதை அவன் முகத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அல்லது, ‘நான் சொன்னது புரிந்ததா?’ என்று கேளுங்கள். தேவையானால், இன்னும் ஒரு முறை திருப்பிச் சொல்லுங்கள். திரும்பத் திரும்பச் சொல்வதில் பயனில்லை. கீறல் விழுந்த இசைத்தட்டு மாதிரி உங்கள் ஆணைகள் அமைந்துவிடும்.

தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள்: இம்மாதிரியான சிறார் கேட்டும் கேட்காததுபோல நடந்துகொள்வார்கள். அல்லது அவர்களின் கவனம் வேறு திசையில் இருக்கும். சில வேளையில், ’நீ இந்தச் சட்டையை உடுத்திக்கொள்’ என்று கூறுவதைவிட ’நீ நீலநிறச் சட்டையைப் போட்டுக்கொள்கிறாயா அல்லது வெள்ளைச் சட்டை வேண்டுமா?’ என்று தேர்ந்தெடுக்கச் சொல்வதன் மூலம், உங்கள் கட்டளையைச் சாதுரியமாகக் கூறலாம். ஏனென்றால், இம்மாதிரியான சிறார்கள் நீங்கள் கூறுவதைச் செய்ய மறுப்பதை ஒரு கொள்கையாகக் கொண்டவர்கள்போல நடந்துகொள்வார்கள். எனவே, அவர்களுக்கு ‘இதா?, அதா?’, என்று தேர்ந்தெடுக்கச் சொன்னால் அது புதிதாக இருக்கும். ஏதாவது ஒன்றை அவர்கள் அறியாமலேயே தேர்ந்தெடுக்க இணங்கிவிடுவார்கள்.

காலக்கெடு: அடுத்து, நீங்கள் செய்யச் சொல்லும் செயலை ஒரு காலக்கெடுவுக்குள் செய்ய வேண்டும் என்பதை வற்புறுத்திக் கூறுங்கள். உதாரணத்துக்கு, சாப்பிடும்போது நேரத்தை வீணடிக்கும் சிறார்களிடம், ‘இன்னும் ஐந்து நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும்’ என்று ஒரு காலக்கெடு விதிக்கலாம். அதன்படி செய்யத் தவறினால் அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும் (தண்டிப்பது எப்படி என்பது பற்றிப் பின்னர் பார்க்கலாம்).

திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்: கட்டளையிடும் பழக்கம் தானாக வருவதில்லை. மேலே கூறப்பட்ட விதிகளுக்கு இணங்கக் கட்டளையிடும் திறனைப் பெற்றோர் வளர்த்துக்கொள்ள வேண்டும். பின்வரும் ‘பரிசோதனை’யைச்செய்துபார்க்கலாம்: முன்னர் கூறப்பட்ட விதிகளின்படி ஒரு கட்டளையிடுங்கள்.

அதுவும் இயல்பாகச் செய்யக்கூடிய ஒரு கட்டளையாக, ஓர் எளிய கட்டளையாக அமைய வேண்டும். உதாரணத்துக்கு, ‘சாப்பிடும்முன் கையைக் கழுவு’, ‘உன் அருகில் உள்ள அந்தப் புத்தகத்தை எடுத்துத் தா’ என்பது போன்ற கட்டளைகள் பெரும் முயற்சியின்றிச் செய்யக்கூடிவை. அடுத்த நாள் இதேபோல இரண்டு கட்டளைகளை வெவ்வேறு நேரத்தில் கூறிப் பாருங்கள். பின், படிப்படியாகக் கட்டளைகளைத் தேவையான அளவுக்கு அதிகரியுங்கள்.

மேலே கூறப்பட்ட உத்திகள் அனைத்தும் நீங்கள் ஏற்கெனவே அறிந்தவைதான். ஆனாலும், பலர் இவற்றை முறைப்படியாகக் கடைப்பிடிப்பதில்லை. அல்லது ஒரு முறையோ இரண்டு முறையோ செய்து பார்த்துவிட்டுப் பின் கைவிட்டுவிடுகிறார்கள். இந்த உத்திகளைக் குறைந்தபட்சம் ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்துங்கள். அப்போது இவை எவ்வளவு பயனுள்ளவை என்பது தெரியவரும்.

(தொடரும்)

- கட்டுரையாளர், மனநல மருத்துவர், முன்னாள் பேராசிரியர்; ibmaht@hotmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in