

‘நதியானது பாறையையே அரித்துவிடுவது வலிமையால் அல்ல. விடாமுயற்சியால்’
- ஜிம் வாட்கின்ஸ்
மாற்றம் என்பதும் புதுமை விரும்புதலும் தேவையான ஒன்றுதான். ஆனால் அளவுக்கு அதிகமாக மாறிக்கொண்டே இருப்பதும் சமநிலைச் சீர்குலைவாகிவிடும். மனிதனின் முக்கியமான குணங்களில் ஒன்று விடாப்பிடியாக ஒன்றைச் செய்வது. அதற்கு மாறாக ஆரம்பகட்டத் தோல்விகளைக் கண்டு உடனேயே செயல்களை நிறுத்திவிட்டு, வேறு ஒரு செயலில் ஈடுபடுவது எந்தப் பலனையும் தராது.
நாம் பலரைப் பார்த்திருப்போம். ஏதேனும் ஒரு தொழிலைத் தொடங்குவார்கள். கொஞ்ச நாட்களிலேயே இது சரிப்பட்டு வராது என அடுத்த ஒன்றை ஆரம்பிப்பார்கள். பெட்டிக் கடை, எஸ்.டி.டி. பூத், ரியல் எஸ்டேட், காப்பீட்டு முகவர் எனப் பல அவதாரம் எடுத்துக்கொண்டே இருப்பார்கள். ஒன்றிலும் நிலையாக இருக்க மாட்டார்கள்.
இதுபோன்று மாறிக்கொண்டே இருப்பதன் பின்னால் சில உளவியல் காரணங்கள் உள்ளன. முதலாவதாக, உடனடிப் பலனை எதிர்பார்ப்பது. அரச மரத்தைச் சுற்றி வந்த உடனேயே, அடிவயிற்றைத் தொட்டுப் பார்ப்பது போன்ற கதை இது.
வயலின் கலைஞர் ஒருவரிடம் சென்ற ஒருவர் ‘ஐயா! எனக்கு வயலின் கற்றுக்கொண்டு கச்சேரி செய்ய வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. நீங்கள்தான் கற்றுக் கொடுக்க வேண்டும்’ என்று சொன்னார். வயலின் கலைஞரும் ‘கொஞ்சம் பொறுமையாக இருந்தால் நிச்சயம் கற்றுக்கொள்ளலாம்’ எனப் பதிலளித்தாராம். அதற்குக் கற்றுக்கொள்ள வந்தவரோ ‘அவசரமேயில்லை ஐயா! அடுத்த மாதம்தான் அரங்கேற்றக் கச்சேரி வைத்திருக்கிறேன்’ என்று பதிலளித்தாராம். இதுபோல் ‘ஐம்பது நாட்களில் அம்பானி ஆவது எப்படி?’ என்பது போன்ற புத்தகங்களைப் படித்துவிட்டு, தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே விளைவுகளை எதிர்பார்த்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சும்.
இது போன்று அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதற்கு இன்னொரு காரணம், ஒரு விஷயம் அல்லது பொருள் நமக்குக் கிடைத்தவுடன், அதன் மீதுள்ள ஆர்வம் கொஞ்ச நாட்களில் வடிந்துவிடுவது. காதல் என்பது கல்யாணம் ஆகும்வரை எனச் சொல்வதுபோல், ஒரு செயலை ஆர்வமாக செய்யத் தொடங்கியதும் சில நாட்களில் ஆர்வம் வடிந்து போரடிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஆசையோடு வாங்கிய டிரெட்மில்லைத் துணிகாயப் போடப் பயன்படுத்தத் தொடங்குகிறோம். வாசிக்க வேண்டும் என வாங்கிய கிதாரை ‘பயணங்கள் முடிவதில்லை’ மோகன்போல் ஆயுதபூஜைக்கு எடுக்கத் தோதாகப் பரணில் வைத்துவிடுகிறோம்.
இவை இரண்டையும்விட முக்கியாமான காரணம், நமக்கு என்ன தேவை என நமக்கே தெரியாமல் இருப்பது. கல்வி, தொழில், கலை என எல்லாவற்றிலுமே அடுத்தவரைப் பார்த்துச் செய்யும்போது, அதில் முழு ஈடுபாடு இல்லாமல் மனம் மாறிக்கொண்டேதான் இருக்கும். நமக்குத் தாகமே இல்லாதபோது அடுத்தவனும் குடிக்கிறானே எனத் தண்ணீர் குடித்தால் திருப்தி வருமா?
இது இல்லாமல் நமது வாழ்க்கையே அர்த்தமற்றது என ஒரு விஷயத்தில் தீவிரமாக ஈடுபடும்போதுதான் விடாமுயற்சி சாத்தியமாகிறது. உருண்டுகொண்டே இருக்கும் கல்லில் பாசிகூட ஒட்டாது என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. காலத்துக்கும் அசையாமல் இருக்கும் பெரும்பாறையே மலையாகிறது. ‘தோற்பன தொடரேல்’ என்பது ஔவையின் வாக்கு.
காலத்துக்கு ஒவ்வாத விஷயங்களை விலக்கி வைக்கவும் விலகியிருக்கவும் புதுமையை விரும்ப வேண்டும். அதேநேரம் சில குறிப்பிட்ட முயற்சிகளில் மாறிக்கொண்டே இருக்காமல் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். இந்த இரண்டுக்கும் இடையேயுள்ள சமநிலையே நலம்தரும் நான்கெழுத்து.
கட்டுரையாளர்,மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com