டிஜிட்டல் போதை 09: அடிமையாக்கும் மனக் கிளர்ச்சி
ந
ம் குறிக்கோளை நோக்கிச் செல்லும்போது, அந்தக் குறிகோளுக்காகப் பல விஷயங்களை இழக்க வேண்டி வரும். அந்த நேரத்தில் நமக்கு மனக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். நம் மனது எவ்வளவு கட்டுப்பாட்டோடு இருக்கிறது? நாம் எப்போது மனக் கிளர்ச்சிக்குப் பலியாகிறோம்? அப்படி மனக் கிளர்ச்சிக்குப் பலியாவதால் நாம் எவ்வாறு பல சிக்கல்களுக்கு உள்ளாகிறோம்? இந்த விஷயங்கள் குறித்தெல்லாம் உளவியல் ஆராய்ச்சியில் தொடர்ந்து நடந்தபடி உள்ளன.
நாம் உடலைக் குறைக்க நினைக்கிறோம். ஆனால், அதிக கலோரி தரும் உணவை உண்ண வேண்டும் என மனது விரும்புகிறது. எனினும், அந்த மனக் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, நாம் வெற்றி கொள்கிறோம். மனக் கிளர்ச்சியை எவ்வளவு கட்டுப்படுத்துகிறோமோ அவ்வளவு வேகமாக நாம் குறிக்கோளை நோக்கி நகர்வோம்.
இந்த மனக் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது மூளையின் முன் பகுதியில் உள்ள ‘ப்ரீ ஃப்ராண்டல் கார்டெக்ஸ்’. மூளையின் இந்தப் பகுதியை மேலாளர் என அழைக்கிறார்கள். அறிவாற்றல் மிகுந்த செயல்களுக்குக் காரணம் இந்த மேலாளர்தான். நாம் சிந்திப்பது, முடிவெடுப்பது, உணர்ச்சிவசப்படுவது, மனக் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது, திட்டமிடுவது என சகல செயல்களுக்கும் காரணம் இந்த ப்ரீ ஃப்ராண்டல் கார்டெக்ஸ்தான்.
இதில் பாதிப்புகள் ஏற்பட்டால் நாம் மேலே பார்த்த பல செயல்களைச் செய்வதிலும் சிக்கல் உண்டாகும். ‘அடிக்டிவ் பிஹேவியர்’, அதாவது குறிப்பிட்ட சில பழக்க வழக்கங்களுக்கு நாம் அடிமையாக மாறுவதற்கு, இந்த ப்ரீ ஃப்ராண்டல் கார்டெக்ஸ் பல வகைகளில் காரணமாகிறது.
நீங்கள் இதை நடைமுறையில் குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களிடம் நேரடியாகக் காணலாம். அவர்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தச் சிரமப்படுவார்கள். போதையை நோக்கி நகர்வதிலிருந்து தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளவும் போராடுவார்கள். பல நேரம் போதைதான் வெல்லும்.
மிக அதிகமாக வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கும் இதே சிக்கல்தான். வீடியோ கேம் விளையாடுவது, நேரடியாக ப்ரீ ஃப்ராண்டல் கார்டெக்ஸைத் தாக்குவதாகக் கூறுகின்றன பல ஆய்வுகள். முதலில் தாக்குதலுக்கு உள்ளாவது, உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் தன்மைதான். இதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் வீடியோ கேமை நோக்கி நகர்வார்கள். உணர்வு நிலையில், தாங்கள் வீடியோ கேம் விளையாடக் கூடாது என உணர்ந்திருந்தாலும், சிறு தூண்டுதலுக்குக்கூட அவர்கள் மனக் கிளர்ச்சி அடைந்து, தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் வீடியோ கேம் ஆட ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்படித்தான் அவர்கள் வீடியோ கேமுக்கு அடிமையாகவும் மாறுகிறார்கள்.
மருத்துவர்களின் ஆய்வு முடிவுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. தொடர்ந்து வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கு, போதை அடிமைகளைப் போல உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் கோளாறுகள் வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
(அடுத்த வாரம்: பாதிக்கப்படும் ‘வெள்ளைப் பொருள்!’)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com
