ஆன்மிகமும் மனநலமும்: நன்மையா? தீமையா?

ஆன்மிகமும் மனநலமும்: நன்மையா? தீமையா?
Updated on
3 min read

உலகில் இருக்கும் பெரும்பாலான மக்கள் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுகிறார் கள். இவர்களின் ஆன்மிக நம்பிக்கை வெவ்வேறாக இருந்தாலும், அதன் மூலம் மன அமைதியை நாட முயல்வது அனைத்து மதங்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது. மனப்பதற்றம், மன அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரை நாடுவதைவிடக் கடவுளை நாடுவதே அதிகம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

‘மனச்சிதைவு நோய் என்பது ஒரு தனி மனிதனின் மனப்பிறழ்வு; மதம் என்பது ஒரு கூட்டத்தின் மனப்பிறழ்வு நிலை’ என்று ஒரு சாரார் மதத்துக்கும் மனநோய்களுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள். இருப்பினும், ஆன்மிகம் இல்லாமல் மனநலம் இல்லை என்பதே பெரும்பான்மையானோரின் கருத்தாக உள்ளது.

மனநலச் சிகிச்சையில் ஜார்ஜ் எங்கல் வரையறுத்த ‘பயோ-சைக்கோ-சோஷியல் மாதிரி’ (Bio-Psycho-Social model) என்கிற அணுகுமுறையில் தற்போது ஆன்மிகமும் (Spiritual) ஒரு சிகிச்சை முறையாகவே சேர்க்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், ஆன்மிகம்-மனநலப் பிரச்சினைகளைப் பிரித்துப் பார்க்காமல் இருப்பது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.

'நோய்க்கும் பாரு பேய்க்கும் பாரு' - இந்தப் பழமொழி எந்த மதத்துக்கும் விதிவிலக்கல்ல. உடல் நோய்களைவிட மனநோய்களுக்கு ஆன்மிகத்தை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். இதனால், சிகிச்சை எடுத்துக்கொண்டால் முற்றிலும் கட்டுப்படுத்தக்கூடிய மனநோய்களுக்கு ஆன்மிக முறைகளை மட்டும் நாடி கடைசிக் கட்டத்தில் மனநல மருத்துவரிடம் அழைத்து வருவதும் கணிசமான எண்ணிக்கையில் நடந்துவருகிறது.

அதிலும் குறிப்பாக மனநோய்களின் அறிகுறி களில் கடவுள், ஆன்மிகம், தீயசக்திகள் போன்ற வார்த்தைகள் தலையிடும்போது அவை ஆன்மிக வழிகளில் மட்டுமே அணுகப்படுகின்றன; அதனால், சிகிச்சையும் தாமதமாகிறது. மன நோயின் இத்தகைய அறிகுறிகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம். மதநம்பிக்கைகளுக்குச் சவால் விடுப்பதாக இவற்றைக் கருத வேண் டாம்; மனநோயின் அறிகுறிகள் இப்படியும் வெளிப்படலாம் என்பதைப் புரியவைப்பதே இதன் நோக்கம்.

நான் கடவுள்: இந்த வகையில், பாதிப்புக்கு முந்தைய நாள் வரை சாதாரண மனிதனாக உலாவரும் ஒரு நபர், திடீரென்று தான் கடவுளின் அவதாரம் என்றும், உலகின் தீயசக்திகளை ஒழிக்கவே உலகிற்கு வந்துள்ளதாகவும் உறுதியாக நம்பத் தொடங்குவார். அவரது நடவடிக்கைகளும் அதற்கு ஏற்ப மாறும். இது ஒரு வகை மனப்பிறழ்வே (Grandiose Delusion). சில நேரம் குடும்ப நபர்கள் இதை உண்மை என்று நம்பி அவரை வழிபட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

இப்படித் தமக்கு அருகில் உள்ள மற்றவர்கள் பாதிக்கப்படுவதும் ஒரு மனநோயாகவே (Shared delusion) வரையறுக்கப்படுகிறது. தான் நினைத்தால் மழை பெய்யவைக்க முடியும், சூரியனை இரவிலும் வரவழைக்க முடியும் என்று இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்ட கடவுளாகத் தங்களை நம்பிக்கொள்வார்கள். சில நேரம் கடவுள் பேசுவதைப் போல மாயக்குரல்களும் (Auditory Hallucination) அவர்களுக்குக் கேட்கும்; இது அவர்களது நம்பிக்கையை வலுப்பெறவைக்கும். இது மன எழுச்சி அல்லது மனச்சிதைவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். தலைக்காயம் ஏற்பட்டவர்கள், கஞ்சாவுக்கு அடிமையானவர்களுக்கு இத்தகைய மனப்பிறழ்வு ஏற்படலாம்.

தெய்வக்குத்தம்: வழிபாட்டுத்தலங்கள் அல்லது கடவுளுக்கு எதிராக ஒரு சிறு தவறு செய்துவிட்டாலே ‘தெய்வக் குத்தம் ஆகிவிடும்’ என்கிற நம்பிக்கை நம் சமூகத்தில் எல்லா மதங்களிலும் உண்டு. இப்படியிருக்க சிலருக்குத் திடீரென்று, கடவுளைப் பற்றி ஆபாசமான வார்த்தைகளைப் பேசிவிடுவோமோ (Blasphemous obsession) என்கிற நியாயமில்லாத சிந்தனை அடிக்கடி தோன்ற ஆரம்பித்துவிடும்.

‘சாமி நான் நல்லா இருக்கணும்’ என்று வழிபடுவதற்குப் பதிலாக, மனதில் ‘பாவி நீ நாசமாகப் போகணும்’ என்று தானாகவே சிந்தனையில் திரும்பத் திரும்பத் தோன்றும். இந்த எண்ணச் சுழற்சி அறிகுறியால் (Obsessive Contrast thinking) பயத்திலும் குற்றவுணர்விலும் தற்கொலை செய்யும் அளவுக்குப் போய்விடுவார்கள். இந்தச் சிந்தனையானது அவர்கள் மனதில் தோன்றினாலும், அவர்களால் அதைக் கொஞ்சம்கூடக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இது அவர்களை நிலைகுலையச் செய்துவிடும்.

சிலருக்குக் கடவுளை மனதில் நினைக்கும் போதோ அல்லது கடவுளின் உருவங்களை வணங்கும்போதோ கற்பனை செய்துகூடப் பார்க்க இயலாத ஆபாசமான உருவத்தில் கடவுள் தெரிவதைப்போன்ற காட்சிகள் (Religious Obsessive images) மனக்கண்களுக்கு முன்பாக அடிக்கடி வந்துபோகும். இதில் சொல்லப்பட்ட எதுவுமே அந்த நபரின் கற்பனையோ, விருப்பமோ அல்ல. இவை எண்ணச் சுழற்சி நோயின் அறிகுறிகளே.

இந்த மனநோயில் அடிக்கடி கைகழுவுதல், திரும்பத் திரும்ப பரிசோதித்தல் போன்ற மற்ற பல அறிகுறிகள் இருந்தாலும், அவர்களது ஆன்மிக வாழ்க்கைக்குச் சவாலாக இருக்கும் இந்த அறிகுறிகளை வெளியே சொன்னால் தங்களைத் தவறான நபராக எண்ணிவிடுவார்கள் என்று சில நேரம் மருத்துவர்களிடம்கூட இந்த அறிகுறிகளை மறைத்துவிடுவார்கள்.

ஆன்மிக அனுபவமா, அலைக்கழிக்கும் பாதிப்பா? - கோயில்களில் சாமியாடுவதும், தேவாலயங் களில் தலைமேல் கைவைத்து ஜெபிக்கும்போது துள்ளிக் குதித்துத் தரையில் விழுவதும், தர்காக்களில் தாயத்து கட்டும்போது அலறியடித்து ஓடுவதும் நம் ஊர்களில் சகஜம். ஆரோக்கியமான மனநிலையில் உள்ளவர்களுக்குக்கூட ஆழமான ஆன்மிக அனுபவங்களின்போது இப்படி நேரிடலாம். இவற்றைச் சமூகம்-ஆன்மிகம் சார்ந்த அனுபவங்களாகவே மனநல மருத்துவமும் அங்கீகரிக்கிறது. ஆனால், எல்லா நபர்களுக்கும் இது ஆரோக்கியமானதாக இருப்பதில்லை.

சிலருக்கு இவை ஆழ்மனதின் தொந்தரவுகளினால் ஏற்படும் மனநலப் பாதிப்புகளின் அறிகுறிகளாகவும் (Dissociative Possession) இருக்கலாம். சிலர் தங்கள் அடையாளத்தை மறந்து வேறு ஒரு நபரின் அல்லது கடவுளின் ஆவி தங்களுக்குள் புகுந்துவிட்டதாகவும் சொல்வார்கள். இந்த அனுபவங்கள் கட்டுக்கடங்காததாகவும், அந்த நபரின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதாகவும், வேறு மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவும் இருந்தால் மனநல மருத்துவரிடம் ஆலோசிப்பது அவசியம். மனநல மருத்துவரைச் சந்திக்கவரும் நோயாளிகளில் சுமார் 10 சதவீதத்தினர் இந்த ‘டிசோசியேசன்’ பாதிப்புக்கு உள்ளானவர்களே.

குறுகவைக்கும் குற்றவுணர்வு: சிலர் காரணமே இல்லாமல் தாங்கள் சிறுவயதில் கடவுளுக்கு விரோதமான பாவம் செய்துவிட்டதாகவும், அதற்கான தண்டனை தற்போது கிடைத்திருப்பதாகவும் குற்றவுணர்வில் ஆழ்ந்துபோய் தீவிர மன அழுத்தத்திற்குள் போய்விடுவார்கள்.

அவர்கள் கூறும் காரணத்துக்கும் அவர்கள் அடைந்திருக்கும் குற்றவுணர்வுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இருக்காது அல்லது அப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது. இந்தக் குற்றவுணர்வு மனப்பிறழ்வு (Delusional Guilt) பெரும்பாலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களிடம் ஏற்படும் மன அழுத்த நோயின் (Depression) அறிகுறியாக இருக்கும். சில நேரம் ஞாபகமறதி நோய், பார்க்கின்சன் சின்ட்ரோம், மூளையில் ஏற்படும் ரத்த உறைவு அல்லது கட்டிகளின் அறிகுறியாகவும் இது வெளிப்படலாம்.

மேற்குறிப்பிட்ட எல்லாப் பாதிப்புகளும் மனநலச் சிகிச்சையினால் சரிசெய்யக் கூடியவையே. சாதாரண ஆன்மிக அனுபவங்களை மனநோயின் அறிகுறியாகவும், மனநோயின் அறிகுறிகளை ஆன்மிகத்தின் வெளிப்பாடாகவும் குழப்பிக்கொள்ளாமல் சரியான முடிவுகளை எடுப்பது நம் வாழ்வை மேம்படுத்தி மகிழ்ச்சியைப் பெருக்கும்; மனதையும் அமைதிப்படுத்தும்.

- கட்டுரையாளர், மனநல மருத்துவர் - உதவிப்பேராசிரியர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in