

சமீபத்தில் என்னைச் சந்திக்க முதியவர் ஒருவர் மருத்துவ மனைக்கு வந்திருந்தார். அவருக்கு வயது சுமார் 70 இருக்கக்கூடும். வந்தவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. ஒருவித குழப்பநிலையில் என்னை வெறித்துப் பார்த்தபடி இருந்தார்.
“ஐயா சொல்லுங்க, உங்களுக்கு என்ன பண்ணுது?” என்று கேட்டேன். தீவிரமாக யோசித்த அவரால் எந்தப் பதிலையும் கூற முடியவில்லை. சொல்லப்போனால், பதிலைக் கூற யத்தனிக்கும் முயற்சியில் அவர் மீண்டும் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்து கொண்டே இருந்தார்.
அவருக்கு இருமலும் மூக்கடைப்பும் இருந்ததைக் கவனித்து, “சளி பிடித்திருக்கிறதா?” என்று கேட்டேன். “ஆமாம், சளி பிடிச்சிருக்கு” என்றார். “எத்தனை நாளா இருக்கு” என்று கேட்டேன். “என்னது?” என்று கேட்டார். அதாவது, தனக்குச் சளி பிடித்திருக்கிறது என்று என்னிடம் தெரிவித்ததை, அதற்குள் அவர் மறந்திருந்தார். அவர் ‘டிமென்ஷியா’ பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன்.
உலக அளவில் தொற்றாநோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் 70 சதவீதத்துக்கு டிமென்ஷியாவே காரணமாக உள்ளது. டிமென்ஷியா என்பது முதுமையில் ஏற்படும் ஒரு மறதி நோய். பொதுவாக 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கே இந்தப் பாதிப்பு ஏற்படக்கூடும். இருப்பினும், அரிதாகச் சிலருக்கு மட்டும் 40 அல்லது 45 வயதில் இந்த நோய் வருவதற்குச் சாத்தியமுள்ளது.
இன்னல் மிகு மறதி: ஆரோக்கியமான மனிதர்களுக்கு ஏற்படும் பொதுவான மறதி, அவர்களுக்குக் கிடைத்த வரம். பகைமை, தீமை, கெடுதல், இன்னல் போன்றவற்றை மறப்பதற்கும், மனத்தை லேசாக்கிக்கொள்வதற்கும், நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கும் மறதியே மனிதர் களுக்கு உதவுகிறது. ஆனால், டிமென்ஷியாவால் ஏற்படும் ‘மறதி’யோ இன்னல் மிகுந்தது. இது நோயாளியின் சிந்தனைத் திறனைக் குறைக்கும்; நினைவாற்றலையும் பாதிக்கும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் தெளிவாகச் சிந்திக்க முடியாது. சரியாகப் பேச முடியாது. குளிப்பது, பல் துலக்குவது போன்ற அன்றாடப் பணிகளைக்கூடச் செய்ய முடியாது. பெயர்கள் மறந்துபோகும். நெருக்கமானவர்களின் முகம் மறந்துபோகும். சொந்த வீடு மறந்துபோகும். பாதை மறந்துபோகும். மொத்தத்தில், அவர்களால் சுயமாகச் செயல்பட முடியாது. இந்தப் பாதிப்பு நோயாளியை மட்டுமல்லாமல், உடனிருப்பவர்களையும் உடல்ரீதியாக, உளவியல்ரீதியாக, சமூகரீதியாகப் பாதிக்கும்.
அல்ஸைமர் டிமென்ஷியா: டிமென்ஷியா நோயாளிகளில் சுமார் 70 சதவீதம் பேர் அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அல்ஸைமர் நோய் ஏற்படுவதற்கான காரணத்தை மருத்துவ அறிவியல் இன்னும் தெளி வாகக் கண்டறியவில்லை. இதன் காரணமாக, அல்ஸைமர் நோயால் ஏற்படும் டிமென்ஷியாவுக்குத் தகுந்த சிகிச்சை கிடையாது. முழுமையாகக் குணப் படுத்தவும் முடியாது என்பதே இன்றைய நிலை.
வாஸ்குலர் டிமென்ஷியா: மூளையிலுள்ள வேதிப்பொருள்கள் குறைவது, திசுக்கள் அழிவது, மூளையில் ரத்தக் கசிவு, ரத்த ஓட்டம் தடைபடுவது, ரத்தக் கட்டி, பக்கவாதம் போன்ற காரணங்களால் ஏற்படும் டிமென்ஷியா ‘வாஸ்குலர் டிமென்ஷியா’ எனப்படுகிறது.
நீரிழிவு நோய், உயர் ரத்தஅழுத்தம், அதிக உடல் எடை, ரத்தத்தில் அதிகக் கொழுப்புச் சத்து, புகைபிடித்தல், நீண்ட காலமாகத் தொடர்ந்து மது அருந்துவது போன்றவை வாஸ்குலர் டிமென்ஷியா ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும். சிலருக்கு வாஸ்குலர் டிமென்ஷியாவுடன் சேர்த்து அல்ஸைமர் டிமென்ஷியாவும் இருக்கக்கூடும்.
இவை தவிர, ரத்தத்தில் வைட்டமின் பி1, வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம் போன்றவை குறைவதாலும் டிமென்ஷியா ஏற்படும் ஆபத்து உண்டு. வயதான பெண்களுக்கு தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரப்பதாலும் டிமென்ஷியா ஏற்படலாம்.
சிகிச்சை முறை: வாஸ்குலர் டிமென்ஷியா ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிந்து, முறையான சிகிச்சை அளித்தால், நோயாளிகள் குணமடையும் வாய்ப்பு உண்டு.
அல்ஸைமர் டிமென்ஷியாவுக்குத் உரிய சிகிச்சை கிடையாது என்றாலும், மருந்துகளின் மூலம் அதன் வீரியத்தைக் குறைக்க முடியும்.
டிமென்ஷியாவுடன் மனச்சோர்வும் (Depression) உள்ளவர்களுக்கு மனச்சோர்வுக்கு உண்டான சிகிச்சை அளிப்பது அவசியம். இது அவர்களின் பாதிப்பைச் சற்று குறைக்கும்.
என்ன செய்ய வேண்டும்? - தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு டிமென்ஷியா வருவதற்கான ஆபத்து 35 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தினமும் நடைப்பயிற்சி செய்வது நல்லது. வீடு, தோட்டம் போன்றவற்றைச் சுத்தப்படுத்திப் பராமரிப்பதும் நல்ல பலன் தரும்.
முதுமையில் தனியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களை அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடுவதும், குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதும் மறதி நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க உதவும்.
நமது வீட்டில் 60 முதல் 65 வயதைக் கடந்தவர்களுக்கு மறதி அதிகமாக இருப்பது தெரியவந்தால், அவர்களை உடனடியாக மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று பரிசோதிக்க வேண்டும். முக்கியமாக, நோயாளிகள் புகை, மதுப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும். தூக்க மாத்திரையின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் அல்லது முற்றிலும் நிறுத்த வேண்டும்.
டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் ஒரு குழந்தையைப் போல் மாறிவிடுவார்கள். பொதுவாக, பாதிப்புக்குப் பின்னர் நோயாளியின் ஆயுள்காலம் 4 முதல் 8 ஆண்டுகள் வரையே நீடிக்கும். இருப்பினும், ஒரு சிலர் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றனர். இது நோயாளியின் மீது அவரது குடும்பத்தினர் செலுத்தும் அக்கறையைப் பொறுத்தே அமையும்.
வரும்காலத்தில் உலகம் சந்திக்கப்போகும் மிகப்பெரும் மருத்துவ நெருக்கடியாகவும், சமூக நெருக்கடியாகவும் டிமென்ஷியா இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, டிமென்ஷியா குறித்துப் போதிய விழிப்புணர்வை அனைவரும் பெறுவதும், நோய்க்கான காரணிகளைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியம்.
(தொடரும்)
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.\