ஆஸ்துமாவை மட்டுப்படுத்தும் சித்த மருத்துவம்

ஆஸ்துமாவை மட்டுப்படுத்தும் சித்த மருத்துவம்
Updated on
2 min read

ஆஸ்துமாவின் பரவல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது வீரியத்துடன் உள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தற்போது உலக அளவில் 35 கோடிக்கும் மேலானவர்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று கோடிக்கும் மேலானோர் இந்தியாவில் உள்ளனர்.

ஆஸ்துமாவின் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் எல்லா வயதினருக்கும் உண்டு. இருப்பினும், பெரும்பாலும் பெரியவர்களைவிடச் சிறார்களே ஆஸ்துமா பாதிப்புக்கு அதிகமாக ஆளாகின்றனர். இந்தியாவில் உள்ள 18% குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் கண்டறிதலும், முறையான சிகிச்சையுமே ஆஸ்துமாவின் பாதிப்பைக் குறைப்பதற்கான வழிமுறைகள். இருப்பினும், இந்தியாவில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70% தாங்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியாமலேயே வாழ்ந்துவருகின்றனர். இதிலிருந்து நிலைமையின் விபரீதத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

நுரையீரல் நோய்: சிலருக்குக் குறிப்பிட்ட பொருள்களால் ஏற்படும் ஒவ்வாமையால் அல்லது சில குறிப்பிட்ட நிலைகளில் நுரையீரலில் உள்ள மூச்சுக்குழலில் உள்சவ்வு வீக்கம் உண்டாகும். சிலருக்கு மூச்சுக்குழல் தசைகளில் ஏற்படும் இறுக்கத்தால் மூச்சுப்பாதை அழுத்தத்துக்கு உள்ளாகும். இதன் காரணமாக இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இத்தகைய பாதிப்புகள் ஏற்படும் நிலையே ஆஸ்துமா. இது நாள்பட்ட நோய்களுள் ஒன்று.

பாதிப்பை அதிகப்படுத்தும் காரணிகள்

# நுரையீரலில் நோய்த்தொற்று

# ஒவ்வாமை

# பனி, குளிர், அதிக வெப்பம் போன்ற தட்பவெப்ப நிலை மாற்றங்கள்

# மன அழுத்தம், கவலை, பதற்றம், மனக் குழப்பம்

# கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, அதிகமாக உணர்வுவயப்படுதல்

# குடும்பச்சூழல்

# பணிச்சூழல்

ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருள்கள்

# காற்று மாசு

# பூவின் மகரந்தம்

# செல்லப் பிராணிகளின் பொடுகு, மெல்லிய ரோமம்

# சோளம், மீன், கருவாடு, கத்தரிக்காய்

# பதப்படுத்தப்பட்ட இறைச்சி, முட்டை, பாலாடைக் கட்டி

# கிழங்கு உணவு

# வேர்க்கடலை, கொண்டைக்கடலை

# சாக்லேட், வால்நட்

(ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருள்கள் நபருக்கு நபர் மாறுபடும்.)

அறிகுறிகள்

# மார்பு வலியுடன் கூடிய இருமல்

# இருமல் அதிகரிக்க அதிகரிக்கச் சளி வெளிப்படுதலும் அதிகரிக்கும்

# மூச்சுவிடுவதில் சிரமம்

# நெஞ்சை இறுக்கிப்பிடிப்பது போன்ற நிலை

குழந்தைகளுக்கான அறிகுறிகள்

ஆஸ்துமாவின் பெரும்பாலான நிலைகளில் குழந்தைகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்; உடலினுள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும்; நோயின் தீவிரமான நிலையில் உடலில் நீலம்பாயும், சுவாசக் கோளாறு, சீரற்ற இதயத் துடிப்பு, நுரையீரல் சுருக்கம் ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.

பராமரிப்பு

நோயினால் பாதிக்கப்பட்டோர் குழந்தைகளாக இருந்தால் அவர்களின் பெற்றோர் நோயின் நிலை பற்றியும் அதனைத் தவிர்க்கும் வழிமுறைகளையும் மருத்துவரிடம் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மருத்துவர் கூறும் அறிவுரைகளையும் பரிந்துரைகளையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். நோயின் பாதிப்பு தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரைச் சந்திக்க வேண்டும். பாதிப்பின் தீவிரத்தை மட்டுப்படுத்த உடனடி சிகிச்சை தேவை.

சித்த மருத்துவச் சிகிச்சை

ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விடுபட, பெரியவர்களுக்கு மட்டுமன்றி குழந்தைகளுக்கும் சித்த மருத்துவச் சிகிச்சை நன்கு கைகொடுக்கும்.

வெளி மருத்துவம்

ஒத்தடமிடுதல், வேது (ஆவி) பிடித்தல் போன்ற சிகிச்சைகள் நுரையீரல் காற்றுப்பைகளில் தேங்கியுள்ள சளித் தொந்தரவை நீக்கி, மூச்சுப் பாதையை சீரமைத்து சுவாசித்தலை எளிமையாக்க உதவும்.

உள் மருத்துவம்

# நொச்சிக் குடிநீர் போன்ற மருந்துகள் நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும்.

# தாளிசாதி சூரணம் போன்ற சூரண மருந்துகள் வயிற்றில் ஏற்பட்டுள்ள ஆமத்தை நீக்கி செரிமானத்தை அதிகப்படுத்தும்.

# ஆடாதோடை போன்ற வேதி மருந்துகள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்

# தூதுவளை போன்ற நெய் மருந்துகள் இழந்த ஆற்றலை மீட்டெடுக்க உதவும்; பாதிக்கப்பட்ட நுரையீரலின் தசை செல்களைப் புதுப்பிக்கும்.

# கற்பூராதி போன்ற தைலங்கள் தசை இறுக்கத்தைக் குறைக்கும். இதனால், நுரையீரல் மூச்சுக் கிளைகளில் உண்டாகும் அழுத்தமும் வலியும் விரைவாக நீங்கும்.

மூலிகை மருந்துகள் மட்டுமன்றி பற்பம் போன்ற பெருமருந்துகளும் சித்த மருத்துவத்தில் ஆஸ்துமா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்துக்கும் மேலாகத் தனி மூலிகைகள், அவற்றின் சூரணம், குடிநீர் போன்றவையும் ஆஸ்துமா தொந்தரவைக் குறைக்க உதவுகின்றன.

துளசி, திருநீற்றுப் பச்சிலை, அதிமதுரம், அரத்தை, சடாமாஞ்சில், திப்பிலி, சுக்கு, இலவங்கபத்திரி போன்ற மூலிகைகளைச் சித்த மருத்துவரின் பரிந்துரைப்படியே எடுத்துக்கொள்வது பலன்தரும்.

ஆஸ்துமா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாகவே இருக்கும். அவர்கள் போதுமான உடல் எடை இன்றி நலிவடைந்தே காணப்படுவர்.

இந்த நிலையிலிருந்து மீள்வதற்குச் சித்த மருந்துகள் உதவும். முக்கியமாக, நோயின் நிலை தீவிரமடையாமல், இயல்பு வாழ்க்கைக்கு எந்த இடையூறும் இல்லாமல் வாழ்வதற்குச் சித்த மருந்துகளின் செயல்திறன் பாதையமைத்துத் தரும்.

- கட்டுரையாளர், சித்த மருத்துவர்; gayathri6vivek@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in