நீங்களும் சேர்ந்து விளையாடுங்கள்

நீங்களும் சேர்ந்து விளையாடுங்கள்

Published on

பெற்றோருக்கு மழலைக் குழந்தைகளுடன் விளையாடச் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. சின்னஞ்சிறு வயதில், அதாவது மழலைப் பருவத்தில் தாய், தந்தை இருவரும் தம் குழந்தைகளுடன் அன்றாடம் பெருவிருப்புடன் விளையாடுவார்கள். ஆனால், அவர்கள் வளர்ந்து பத்து வயதுச் சிறார்களாகும்போது அவர்களுடன் விளையாடுவதில் பெற்றோர் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.

இந்த வளர்ச்சிக் கட்டத்தில் அவர்கள் தங்கள் நண்பர்களுடன் விளையாடத் தொடங்குகிறார்கள். அவர்கள் உலகம் விரிவடைகிறது. இந்த நிலையில் பெற்றோர் ஓரளவு ஒதுங்கிக்கொள்கிறார்கள். பத்து வயதுச் சிறாருடன் விளையாடுவது பெற்றோருக்கு உகந்ததாகத் தோன்றுவதில்லை.

ஆனால், இந்த வயதிலும் பெற்றோர் சிறார்களுடன் விளையாடுவது முக்கியம் என்பதை சிறார் நல மருத்துவர்களும் உளவியலாளர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். பெற்றோர் சிறார்களுடன் விளையாடும்போது, அது அவர்கள் இருவருக்குமிடையே அன்பும் பாசமும் உருவாகும் வாய்ப்பையும் தோழமை உணர்வு பெருகும் வழியையும் ஏற்படுத்தித் தருகிறது.

தனிப்பட்ட விளையாட்டு நேரம்: சொல்பேச்சு கேட்காத சிறார்களைக் கையாளும் பயிற்சியின் முதல் கட்டமாக, தங்களுடைய குழந்தையுடன் தனியாக விளையாடத் தாயும் தந்தையும் ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்கிவைக்க வேண்டப்படுகிறார்கள். இது ‘தனிப்பட்ட விளையாட்டு நேரம்’ (Private playtime) என்று அழைக்கப்படுகிறது.

பத்து வயதுப் பையனுடன் வாரத்துக்கு 4 - 5 நாள்களாவது அவனுடைய தந்தை / தாய் குறைந்தது 20 நிமிடங்களாவது விளையாட நேரத்தை ஒதுக்க வேண்டும். இது அவர்கள் இருவரது பிரத்யேக நேரம்; வேறு எவரும் தலையிடக் கூடாது. எந்த விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்துச் சிறாருடன் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். குடும்பத்தின் வசதிக்கு ஏற்றபடி தாய் ஒரு நாளும் தந்தை மறுநாளும் விளையாடலாம்.

இந்தத் தனிப்பட்ட விளையாட்டு முறை இரண்டு குறிக்கோள்களைக் கொண்டது. ஒன்று, இதுவரை குடும்பத்தில் நிலவிவந்த எதிர்ப் பேச்சுக்கும் கண்டனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து,முன்னர் நிலவிவந்த முறுகல் நிலையைத் தவிர்ப்பது; மற்றது, குடும்பத்தில் அன்பையும் ஆதரவையும் பெருக்கிக்கொள்வது.

என்ன விளையாட்டு விளையாடுவது? - திரைப்படங்கள் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது, கணினி விளையாட்டுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இவற்றில் முழுக்கவனமும் அந்த விளையாட்டில் அல்லது திரைப்படத்தில் மட்டுமே குவிந்திருக்கும். இன்னொருவர் உடன் இருப்பதை அவ்வளவாகக் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இதனால் ஒத்துழைப்பு, ஊடாட்டம் ஆகிவை அற்றுப் போகின்றன. இருவருக்குமிடையே அன்புப் பாலம் அமைவதற்கு இது தடையாக அமைந்துவிடுகிறது. அதேபோல, அவர்கள் தேர்ந்தெடுக்கும் விளையாட்டில் பெற்றோருக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை என்றாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளக் கூடாது.

குறிக்கோள்: பெற்றோரும் சிறாரும் சேர்ந்து கூட்டாக விளையாடுவதும் அந்த நேரத்தை இன்பமாகக் கழிப்பதுமே இந்த விளையாட்டு முறையின் குறிக்கோள். எனவே, இருவரும் பங்கெடுக்கக்கூடிய விளையாட்டுகளே பொருத்தமானவை.

பத்து வயதுள்ள ஒரு சிறுவனுக்கு கேரம் விளையாட்டு (Carrom) பொருத்தமாக இருக்கலாம்; இன்னும் சிலருக்குப் பெற்றோருடன் கதைப்புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் இருக்கலாம்; சிலர் கிரிக்கெட் விளையாட ஆசைப்படலாம். சிறுவனின் வயதுக்கும் அவனது ஆர்வத்துக்கும் பொருத்தமான ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

எந்தெந்த விளையாட்டுகளை குழந்தை விரும்புகிறது என்று இருவருமாகக் கூடி ஒரு பட்டியல் தயாரிப்பது இதற்கு உதவும். ஒவ்வொரு நாளும் அந்தப் பட்டியலிலிருந்து ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள்; பின்பு அதில் விருப்பம் இல்லையென்றாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் சேர்ந்து விளையாடுங்கள்.

இந்தத் ‘தனி விளையாட்டு’ முறையை நடைமுறைப்படுத்தும் முன்னர், அதை குறித்து முன்கூட்டியே யோசித்து ஓரளவு திட்டமிடுவது பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் குழந்தை விளையாடுவதை ஒரு பார்வையாளராகச் சற்று நேரம் உற்றுக் கவனியுங்கள். பின் எந்தவோர் ஆரவாரமும் இல்லாமல் மெல்ல மெல்ல குழந்தை விளையாட்டில் கலந்துகொள்ளுங்கள்.

சில விதிகள்: இந்தப் பிரத்யேக விளையாட்டின்போது பெற்றோர் சில விதிகளைக் கடைப்பிடித்தாக வேண்டும். நீங்கள் ஒரு வேலையில் மும்முரமாக மூழ்கியிருக்கும்போது ஒருவர் வந்து குறுக்கிட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தால், இந்தத் தனி விளையாட்டுக்குக் கூறப்படும் விதிகளின் முக்கியத்துவம் புலப்படும். ஒன்று, இதில் என்ன விளையாட்டு என்பதை குழந்தையே தேர்ந்தெடுக்க வேண்டும். ‘இதை விளையாடுவோம்’, ‘அதை விளையாடுவோம்’ என்று வற்புறுத்த வேண்டாம்.

இரண்டாவதாக, விளையாடும்போது ‘இதைச் செய், அதைச் செய்’, ‘இப்படிச் செய், அப்படிச் செய்’ என்று குறுக்கிடுவதைப் பெற்றோர் முற்றாகத் தவிர்க்க வேண்டும்; முக்கியமாகக் கேள்விகள் கேட்கக் கூடாது. உதாரணத்துக்கு, ‘ஏன் இப்படிச் செய்கிறாய்?’, ‘ஏன் இப்படிச் செய்யவில்லை’ என்று கேட்பது தவறு. கடைசியாக, குழந்தையின் விளையாட்டைப் பார்த்துக் குறைகூறக் கூடாது. ஏனென்றால், இந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதற்கான விதிகள் குழந்தைக்குக் கிடையாது.

கற்றுக்கொள்வது கடினமல்ல: விளையாட ஒதுக்கப்பட்ட நேரத்தில் விளையாட்டைக் கூர்ந்து கவனித்து, குழந்தையின் போக்கில் விளையாட அனுமதியுங்கள். குழந்தை செய்வதைப் பின்பற்றி நடந்துகொள்வது அவசியம். பெரும்பாலான பெற்றோருக்குத் தங்கள் குழந்தை சொல்வதைக் கேட்டு நடப்பது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

இதற்குப் பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவை. விளையாட்டின் இறுதியில் அந்த விளையாட்டு உங்களுக்குச் சுவாரசியமாக இருந்தது என்றும், மீண்டும் விளையாட உங்களுக்கு விருப்பமாக இருக்கிறது என்பதையும் சொற்களாலும் உடல்மொழியாலும் உணர்த்துங்கள்.

உத்தரவிட்டும் ஆணையிட்டும் பழகிய பெற்றோரைப் பொறுத்தவரை இந்தத் தனி விளையாட்டு நேரம் ஒரு சவாலாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், இதைக் கற்றுக்கொள்வது அத்தனை கடினமல்ல. போகப்போக இந்த 15 அல்லது 20 நிமிடங்கள் எவ்வளவு பெறுமதி வாய்ந்தவை என்பது உங்களுக்குத் தெரியவரும். இதனால், இருவருக்குமிடையே ஏற்படும் புரிந்துணர்வும் அன்புப் பிணைப்பும் அளப்பரியது.

சில பெற்றோருக்கு இது அசட்டுத்தனமாகவும் அபத்தமாகவும் தோன்றலாம். ஆனால், இந்தப் பிரத்யேக விளையாட்டு முறையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும்போது சிறார்களின் நடத்தையில் குறிப்பிடும்படியான முன்னேற்றம் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சிகளும் அனுபவமும் கூறுகின்றன. பெற்றோர் இதைப் பொறுமையுடன் கற்றுக்கொள்ள வேண்டும்.

சிலபெற்றோர் தம் இரண்டு குழந்தை களுடனும் ஒரே நேரத்தில் விளையாட விருப்பப் படலாம். ஆனாலும், கூடியவரை இந்த விளையாட்டு நேரத்தில் ஒருவரோடு மட்டும் விளையாடுவதே நல்லது. எனவே, ஒவ்வொருவருக்கும் தனி நேரத்தை ஒதுக்குவதே சிறந்தது.

(தொடரும்)

- கட்டுரையாளர், மனநல மருத்துவர், முன்னாள் பேராசிரியர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in