

வெயிலில் அதிகம் திரிந்து வேலை செய்பவர்களுக்கு முன் நெற்றி தோல் கருமை நிறமடைய வாய்ப்பு உண்டு. சோற்றுக் கற்றாழை மடலினுள் நொங்கு போலிருக்கும் சதைப் பற்றால் பாதிக்கப்பட்ட இடத்தைத் தொடர்ந்து கழுவிவந்தால் கருமை நிறம் மறையும்.
வெயிலில் சென்று வந்தால் வரும் தலைவலி சிலருக்கு வாழ்நாள் பிரச்சினை. இந்தத் தலைவலிக்குச் சுக்குமல்லி காபி உகந்த மருந்து. மைக்ரேன் முதலான தலைவலிகளைக் குறைப்பதில் சுக்குத் தூளுக்கு உள்ள ஆற்றலைப் பல மருத்துவ இதழ்கள் ஆதாரங்களுடன் நிரூபித்து உள்ளன. உலர்ந்த சுக்குத் தூளைக் கொத்துமல்லி விதைகளுடன் சம பங்கு கலந்து வைத்துக்கொண்டு, காபித் தூளுக்குப் பதிலாக இக்கலவையைப் போட்டுத் தயாரிப்பதே சுக்குமல்லி காபி.
சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் அதிக அளவில் கண்களுக்குள் நுழையும் நிலையில், முன்கூட்டியே கண்புரை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, புறஊதாக் கதிர்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்ட கூலிங்கிளாஸ் (யு.வி. புரொடெக்டட் சன்கிளாஸ்) அணிவது நல்லது. மேலும், வெட்டிவேர் தொப்பி அணி வது கோடைக்கு நல்லது.
கோடையில் மெட்ராஸ் ஐ பிரபல விருந்தாளி. படுவேகமாகப் பரவும். இந்நோயிலிருந்து கண்ணைப் பாதுகாக்க நந்தியாவட்டைப் பூவைக் கண்ணில் வைத்து அழுத்துவதும் இளநீரால் கண்களைக் கழுவுவதும் பலன் தரும்.
நன்றி: ‘வேனிற்காலத்தில் வேண்டும் பழக்கங்கள்’
நூலில் இருந்து