குழந்தைகளைப் புரிந்துகொள்வோம் - 2 | சொல்பேச்சு கேட்காத சிறார்: ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?

குழந்தைகளைப் புரிந்துகொள்வோம் - 2 | சொல்பேச்சு கேட்காத சிறார்: ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?
Updated on
3 min read

சொல்பேச்சு கேட்காத சிறார் பற்றிக் கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆராய்ச்சிகளின்படி, அறிவுரை கூறுதல், கவுன்சலிங், சிறார்நல வல்லுநர் ஒருவர் நேருக்குநேர் பேசி நடத்தையைச் சீர்படுத்துவது ஆகிய அணுகுமுறைகள் சொல்பேச்சு கேட்காத சிறார்களின் நடத்தையைச் சீர்படுத்த உதவாது.

இம்மாதிரியான சிறார், பெற்றோர் சொல்வதை மட்டுமல்லாமல்; மருத்துவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கூறும் அறிவுரைகளையும் ஒரு காதால் வாங்கி மறு காதால் விட்டுவிடுவார்கள். பெரியவர்கள் கூறுவதை அமைதியாக எண்ணிப்பார்த்து அதை உள்வாங்கி நடந்துகொள்ளும் திறன் இவர்களுக்குக் குறைவாகவே காணப்படுகிறது; அதைக் கற்றுக்கொள்ளத் தேவையான பொறுமையும் இருக்காது. இவர்கள் நடத்தையைக் கட்டுப்படுத்த பெற்றோர் எடுக்கும் வழிமுறைகள் பலனளிக்காததற்கு இதுவும் ஒரு காரணம். இம்மாதிரியான சிறார்களின் நடத்தையைச் சீர்படுத்த பெற்றோர் சில அடிப்படை உத்திகளைக் கற்றுக்கொள்ள வேண்டும், அவற்றைச் சீராகக் கடைப்பிடிக்கவும் வேண்டும் என்று அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பொது அறிவு போதாது

‘ஆண்டாண்டு காலமாக எல்லாப் பெற்றோரும் இதைத்தானே செய்துவருகிறார்கள். இதில் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?’ என முணுமுணுப்பது கேட்கிறது. இதில் ஓரளவு உண்மையும் உண்டு. குழந்தை வளர்ப்பு என்பது மனிதர்களுக்கு ஓர் உடன்பிறந்த ஆற்றல். இதைப் பாட்டிமார், குடும்பப் பெரியவர்கள் ஆகியோரின் உதவியுடன் பெற்றோர் அறிந்துகொள்கிறார்கள். குறிப்பாக, நாம் எவ்வாறு வளர்க்கப்பட்டோம் என்கிற அனுபவமும் சமுதாயத்தில் காணப்படும் நடைமுறைகளுமே நம் குழந்தை வளர்ப்பு முறைக்கு அடிப்படையாக அமைகின்றன. சாதாரணமாக எவரும் புத்தகங்கள் வாசித்து இதைக் கற்றுக்கொள்வதில்லை.

ஆனால், சொல்பேச்சு கேட்காத சிறார்களைப் பொறுத்தவரை இந்தப் பொது அறிவு மட்டும் போதுமானதல்ல; இவர்களைக் கையாள பெற்றோர் என்னென்ன உத்திகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் இன்றைய ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தியுள்ளன.

பெற்றோர்களுக்குப் பயிற்சிகள்

இம்மாதிரியான சிறார்களின் நடத்தையைச் சீர்படுத்த பல நாடுகளில் பெற்றோர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறன. எட்டு அல்லது பத்துப் பெற்றோர்களை ஒரு குழுவாகக் கூட்டி இரண்டு உளவியலாளர்கள் அல்லது இரண்டு செவிலியர்கள் இந்தத் திறன்களை முறைப்படி கற்றுக்கொடுக்கிறார்கள். இந்த ‘பெற்றோர் பயிற்சிக் குழு’க்கள் (Parent Training Groups) வாரந்தோறும் கூடி இந்தப் பயிற்சியைப் பெறுகிறார்கள். தாம் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்திப் பெற்ற அனுபவத்தை அடுத்த கூட்டத்தில் பயிற்சியாளரோடும் மற்றவர்களோடும் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்தக் கட்டுரைத் தொடரில் பெற்றோர் குழுக்களில் கற்றுக்கொடுக்கப்படும் சிறார் வளர்ப்பு உத்திகள் யாவை என்பது பற்றியும் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

தண்டனைகள் தேவையா?

பொதுவாக, இம்மாதிரியான சிறார்களின் நடத்தையைச் சீர்படுத்த பெற்றோர்கள் பலவிதமான தண்டனைகள் விதிப்பதுண்டு. ‘இன்றைக்குக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போக மாட்டேன்’, ‘இன்றைக்கு உனக்கு கிரிக்கெட் இல்லை’, ‘உன் அறைக்குப் போ, நான் கூப்பிட்ட பிறகுதான் வெளியே வர முடியும்’ என்பது போன்ற தண்டனைகளை வழங்குவதே வழக்கமாக இருந்துவருகிறது.

ஆனால், ஆராய்ச்சிகள் கூறும் செய்தி வேறுவிதமாக உள்ளது. சொல்பேச்சு கேட்காத சிறாரின் நடத்தையைச் சீர்படுத்த முதன்முதலில் அவன்/அவள் நன்னடத்தையை ஊக்குவிக்கும் உத்திகளைச் சில காலம் பயன்படுத்த வேண்டும்; அதன் பின்னர் தண்டனை வழங்கும் உத்திகளைப் பிரயோகிக்கலாம் என்பதை ஆராய்ச்சிகள் அழுத்தமாகக் கூறுகின்றன. பெற்றோர்களுக்கு இது பெரும் வியப்பாகவும் (ஏமாற்றமாகவும்) இருக்கலாம். ஆனால், சிறார் வளர்ப்பு பற்றி அறிவியல் ஆராய்ச்சிகள் கூறும் செய்தி இதுதான்.

சமூகக் கற்றல்

இவர்களின் நடத்தையைக் கட்டுப்படுத்த பெற்றோர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் ஒரே சீரானவையாக இருப்ப தில்லை. சில நேரங்களில்கண்டிப்பாகவும் பிற நேரங்களில் விட்டுக்கொடுத்தும் நடந்துகொள்ளாததால் சிறார்கள் நன்னடத்தையைக் கற்றுக்கொள்வதில்லை. எனவே, இங்கே கூறப்படும் உத்திகளைப் பெற்றோர் இருவரும் எல்லா வேளைகளிலும் கடைப்பிடிப்பது முக்கியம். ஒரு நாள் கண்டிப்பாக இருந்துவிட்டு மறுநாள் அவன் விருப்பப்படி நடந்துகொள்ள அனுமதித்தால், இந்த உத்திகள் பலனளிக்காது.

இந்த அணுகுமுறை சமூகக் கற்றல் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்தக் கோட்பாட்டின்படி சிறார்களின் இந்த நடத்தை கற்றுக்கொண்ட நடத்தையாகக் கருதப்படுகிறது. அதாவது, சிறார்களின் நடத்தையானது அவன் வாழும் குடும்பம், சமுதாயம் ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறது. எனவே, அவனது சூழலை மாற்றி அமைப்பதன் மூலம் அவன் கற்றுக்கொண்டதை மாற்றி அமைக்கலாம் என்பதே இந்த அணுகுமுறையின் அடிப்படைக் கொள்கை. குறிப்பாக, பெற்றோரின் அணுகுமுறையிலும் சிறார் வளர்ப்பு முறையிலும் கணிசமான அளவு மாற்றங்கள் ஏற்படும்பட்சத்தில் சிறார் தாம் கற்றுக்கொண்ட, தொந்தரவு தருகிற நடத்தைகளைக் கைவிடவும் நன்னடத்தையைப் புதிதாகக் கற்றுக்கொள்ளவும் முடியும் என்பதை மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சிகள் எடுத்துக்காட்டியுள்ளன.

நன்னடத்தைகளைக் கவனியுங்கள்

சாதாரணமாக, பெற்றோர் இம்மாதிரியான சிறார் பற்றி முறையிடும்போது அவர்களின் நடத்தை சார்ந்த பிரச்சினைகளை நீண்டதொரு பட்டியலாக நீட்டிமுழக்கிக் கூறுவதுவழக்கம். ஆனால், அவ்வப் போது அவர்கள் நல்லபடியாக நடந்துகொள்வதைக் கண்டுகொள்வதேயில்லை. எந்த ஒரு சிறுவனும் எல்லா வேளைகளிலும் முறைதவறி நடந்துகொள்வது இல்லை. பெரும்பாலான நேரம் அவ்வாறு நடந்துகொண்டாலும்கூடச் சில வேளைகளில் (இவை அரிதாக இருந்தபோதிலும்) நல்லபடி நடந்துகொள்கிறார்கள். ஆனால், அவ்வப்போது நிகழும் இந்த நன்னடத்தை களைப் பெற்றோர்கள் அவ்வளவாகக் கவனிப்பதில்லை. தீய நடத்தைகள் மட்டுமே அவர்களின் கண்களுக்குத் தெரிகின்றன, கவனம் பெறுகின்றன.

எனவே, பையன் நல்லபடியாக நடந்துகொள்ளும் சந்தர்ப்பங்களில் அதைக் கவனிப்பதும் பாராட்டுவதுமே முதல் படியாக அமைய வேண்டும். எனவே, முதன்முதலாகச் சிறார் நல்லபடி நடந்துகொள்ளும்போது அதைக் குறிப்பாகக் கவனிக்க வேண்டும்.

அன்பு காட்டுங்கள்

முன்பெல்லாம் கீழ்ப்படிய மறுக்கும் சிறார்களை அடிப்பது வழக்கமாக இருந்துவந்தது. ‘அடியாத மாடு படியாது’ என்று அறிவுரைகள் வழங்கப்பட்டன. அடித்து வளர்ப்பதுதான் சிறந்த முறை என்றும் கருதப்பட்டது. ஆனால், சிறாரை வழிக்குக் கொண்டுவர அவர்களை அடிப்பது, கொடுமைப்படுத்துவது, பட்டினிபோடுவது போன்றவை இப்போது தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகிறன.

இம்மாதிரியான சிறார்களின் நடத்தையைத் திருத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், அதே வேளையில் சிறார்கள் மீது அன்பு காட்டுவதும், பற்றுடனும் பாசத்துடனும் நடந்துகொள்வதும் முக்கியம். இம்மாதிரியான குடும்பப் பின்னணியில்தான் இங்கே கூறப்படும் உத்திகளை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை அழுத்தம்திருத்தமாகக் கூற வேண்டும்.

(தொடரும்)

கட்டுரையாளர், மனநல மருத்துவர், முன்னாள் பேராசிரியர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in