

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தில் கிணற்றுப்பாசனம் மூலம் மானாவாரி விவசாயம் நடந்துவருகிறது. இங்கே வற்றலுக்கான மிளகாய், பருத்தி, காய்கறிகள் பயிரிடப்பட்டுவந்தன.
1986இல் சீனி என்பவர் தனக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் பரப்பளவில் முதன்முதலாக 400 எலுமிச்சைக் கன்றுகளை நடவுசெய்தார். குற்றாலத்தில் உள்ள அரசுப் பண்ணையிலிருந்து மானிய விலையில் ஒரு கன்றுக்கு ரூ.1 எனக் கொடுத்து வாங்கி வந்துள்ளார். தனக்குத் தெரிந்த நண்பர்களை எலுமிச்சை சாகுபடி செய்ய ஊக்குவித்துள்ளார். தற்போது 800 ஏக்கர் பரப்பில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.
தூர்வாரப்பட்ட ஊருணிகள்
எலுமிச்சை சாகுபடி பரப்பு அதிகரித்தபோது வறட்சிக் காலத்தில் எலுமிச்சை மரங்களைப் பாதுகாக்க ஒவ்வொரு விவசாயியும் தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் செலவு செய்துவந்தனர். இதைக் கருத்தில் கொண்டு, எலுமிச்சை விவசாயிகள் கூடி முடிவெடுத்து, அரசிடம் அனுமதி பெற்று, ‘நமக்கு நாமே’ திட்டத்தில் இங்குள்ள 11.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராமர் ஊருணி, 5.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட அய்யனார் ஊருணி ஆகியவற்றைத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தினர். இங்கு 40 மி.மீ. மழைப்பொழிவு இருந்தாலே, இந்த ஊருணிகள் நிரம்பிவிடும். இதன் மூலம் கூடுதலாக 12 கோடி லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும் என்பது விவசாயிகளுக்குக் கூடுதல் பலமாக உள்ளது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டிய தேவை எழவில்லை.
இயற்கை விவசாயம்
இங்குள்ள 60% விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறி விட்டனர். வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பும் பருவமழை முடிவடையும் தறுவாயிலும் உரமிடுவது வழக்கம். தற்போது மாட்டுச்சாணம், குப்பை கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை உரத்தையே அவர்கள் பயன்படுத்திவருகிறார்கள். அதற்காக அருகிலிருக்கும் 40 கிராமங்களுக்கும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கும் சென்று திடக்கழிவைச் (குப்பையை) சேகரித்து வருகிறார்கள்.
வளம்குன்றா வளர்ச்சி
தொடக்கக் காலத்தில் கோவில்பட்டி சந்தையை மையமாக வைத்தே எலுமிச்சை பயிரிடப்பட்டது. ஆனால், 1996 - 97 காலகட்டத்தில் ஏற்பட்ட வறட்சிக்குப் பின்னர் வளம்குன்றா வளர்ச்சியே அவர்களது குறிக்கோளாக மாறியது. இதற்காக எலுமிச்சை சந்தையை விரிவாக்கம் செய்தார்கள். அதன்படி திருநெல்வேலி, புளியங்குடி, கோவில்பட்டி என மூன்று சந்தைகளுக்கு எலுமிச்சைகளை அனுப்ப முடிவு செய்தார்கள். இதற்காக ஒரு சங்கமும் தொடங்கப்பட்டது. இன்று சங்கத்தின் மூலம் ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து எலுமிச்சையைச் சந்தைப்படுத்தி வருகிறார்கள். மற்ற கிராமங்களில் இல்லாத ஒரு சிறப்பு வசதி வில்லிசேரி கிராமத்துக்கு உண்டு. நான்கு சக்கரச் சரக்கு வாகனங்களால் அங்குள்ள விளைநிலங்களுக்கு எளிதில் சென்று வந்துவிட முடியும். செடிகளிலிருந்து பறிக்கப்படும் எலுமிச்சையை மூட்டைகளாகக் கட்டி வைத்தாலே போதும்; ஒவ்வொரு நாள் மாலையும் நிலத்துக்கு அருகேயே வாகனம் மூலம் எடுத்துச்செல்லப்பட்டுவிடுகிறது.
முன்னோடி கிராமம்
ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடியது எலுமிச்சை. ஆண்டுக்கு ஓர் ஏக்கருக்குச் சுமார் பத்து டன் எலுமிச்சை கிடைக்கும். கோடைக்காலத்தில் இதற்கு வரவேற்பு அதிகம். அதேபோல் மழைக்காலத்திலும் விற்பனை குறையாமல் இருக்கும். இங்கு, 60% நிலத்தில் சொட்டு நீர்ப் பாசனத்தில்தான் எலுமிச்சை பயிரிடப்பட்டுள்ளது. இங்குள்ள விவசாயிகள் அனைவருமே இயற்கை விவசாயத்துக்கு மாறுவது என முடிவெடுத்துள்ளார்கள். இனி சந்தை விலையில் அவர்களால் எலுமிச்சையை விற்பனை செய்ய இயலாது. அதற்கு ஒரு தனிச் சந்தையை அமைக்க அவர்கள் முயன்று வருகிறார்கள்.
பசுமைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வோர் ஊருணிக் கரையிலும் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் மரக்கன்றுகளை நடவுசெய்து பாதுகாத்து வருகிறார்கள். ஓர் ஏக்கருக்குத் தினம் ஒரு பெண் கூலியும், அரை ஆண் கூலியும் கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும். இதனால், அங்கே ஆண்டு முழுவதும் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வில்லிசேரி கிராமத்துக்கு மட்டுமன்றி அருகே உள்ள பத்துக் கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இக்கிராமத் தினர் வேலை வழங்கி வருகிறார்கள். முக்கியமாக, கரோனா காலத்துக்கு முன்பு வெளிநாடுகளில் பணிபுரிந்த சுமார் 20 இளைஞர்கள், தற்போது வில்லிசேரி கிராமத்தில் எலுமிச்சை விவசாயத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்றி யுள்ளதுடன், பாரம்பரிய விவசா யத்தைப் பாதுகாப்ப தற்குப் புதிய தலைமுறையை உருவாக்கி யுள்ளது. சமூக மாற்றம், பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல், இயற்கை வளப் பாதுகாப்பு ஆகிய வற்றுக்கு முன்னோடி கிராமமாக வில்லிசேரி திகழ்கிறது.