தெளிவான பார்வை குழந்தைகளின் பிறப்புரிமை

தெளிவான பார்வை குழந்தைகளின் பிறப்புரிமை
Updated on
3 min read

‘காலை எழுந்தவுடன் படிப்பு... மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா’ என்றார் பாரதி. ஆனால், நாள் முழுவதும் இணையத்தில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய குழந்தைகளின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது சற்று கவலைகொள்ள வேண்டியுள்ளது. அண்மையில் உலகம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற ஆய்வில் கைபேசி, கணினி போன்ற சாதனங்களை மூன்று மணி நேரத்துக்குத் தொடர்ந்து பார்க்கும் குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வை குறைபாடு, ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ போன்ற பாதிப்புகள் வரக்கூடும் எனத் தெரியவந்திருக்கிறது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களாக இணையவழி வகுப்பில் தினமும் கணினியில் நான்கு மணி நேரம் படிப்பதாகவும், அதிலிருந்து தனக்குக் கண் வலி, கண்ணில் சிவத்தல், கண் மங்கலாக இருத்தல், கண்களை அடிக்கடி சிமிட்டிக் கொண்டிருத்தல், கண் உறுத்தல், தலைவலி, கழுத்து வலி போன்ற பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி கண் மருத்துவரைச் சந்தித்துள்ளார். அவரைப் பரிசோதித்த கண் மருத்துவர் அவருக்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் இருப்பதாகக் கூறினார்.

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் என்றால் என்ன?

கணினி, கைபேசி போன்ற சாதனங்களின் வருகை அறிவியல் சாதனையாகக் கருதப்படுகிறது. நம் வாழ்வில் பல மாற்றங்களை அது ஏற்படுத்தி உள்ளது. ஆனால், அவற்றைப் பயன்படுத்தும்போது நாம் நம்மை மறந்துவிடுகிறோம். நம் கண்களை எங்கும் அசைக்காமல் பல மணி நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருக்க நேரிடுகிறது. இதனால், நமது கண் சிமிட்டும் நேரத்தின் அளவு குறைந்துவிடுகிறது. கண் சிமிட்டும் நேரத்தின் அளவு குறைவது, கண்ணில் நீர்சத்துக் குறைவை ஏற்படுத்தும். இந்த நீர்ச்சத்து குறைவால் ஏற்படும் பாதிப்பே ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’. நீண்ட நேரம் அலைபேசியைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், கணினியில் பணிபுரிபவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் உண்டு. கணினியில் வேலை செய்யும் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் பேரிடம் இதன் சில அறிகுறிகளாவது தென்படும்.

நமது கடமை

ஒரு குழந்தைக்கு நல்ல பார்வை கிடைப்பது என்பது அவர்களது பிறப்புரிமை. எனவே, குழந்தைகளின் கண் நலனுக்கு அதிக முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். கண் மருத்துவரிடம் சரியான இடைவெளியில் குழந்தைகளைப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதுவே, பார்வை இழப்பு அல்லது குறைபாட்டைத் தடுத்து நல்ல பார்வை கொண்ட சமூகத்தை உருவாக்கும்.

காரணங்கள்

கணினி, கைபேசியை நீண்ட நேரம் பயன்படுத்துவது
கணினியில் படிப்பது
பார்வைக் குறைபாட்டை அலட்சியம் செய்வது
கணினித் திரையில் வெளிச்சம் அதிக அளவில் இருப்பது

அறிகுறிகள்

கண் எரிச்சல்
கண் சிவத்தல்
கண் உறுத்தல்
கண் துடிப்பு
கண் வலி
கண் மங்கலாகத் தெரிதல்
இரண்டு இரண்டாகத் தெரிதல்
கண் சோர்வு
தலைவலி
கழுத்து வலி


அதிகரித்துவரும் பாதிப்பு

கரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின் இணையவழி வகுப்பும் இணையம்வழியே படிப்பதும் அதிகமாகிவிட்டன. இதன் காரணமாக உலகம் முழுவதும் கிட்டப்பார்வை குறைபாடும் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் பாதிப்பும் பள்ளி மாணவ, மாணவியரிடம் அதிகரித்துள்ளன.

கண் நலம் காக்க குழந்தைகள் என்ன செய்ய வேண்டும்?

 இணையவழி வகுப்புகளைக் குழந்தைகள் பார்க்கும்போது அவர்கள் அதைக் கைபேசியில் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து, கணினியில் பார்க்க அறிவுத்த வேண்டும்.

 கணினி மேஜையின் மீது வைக்கப்பட்டு இருக்கும் மானிட்டர் குழந்தைகளின் முழங்கைக்கு இணையான உயரத்தில் இருக்க வேண்டும்.

 கணினித் திரையின் (Monitor Screen) வெளிச்சத்தைப் பாதியாக குறைத்துக்கொள்ள வேண்டும். கணினித் திரையின் மீது எந்த விளக்கு வெளிச்சமும் நேரடியாகப் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பட்டால் கண் கூச்சம் ஏற்பட்டு தலைவலி உண்டாகும்.

 கணினித் திரைக்கும் பார்ப்பவர்களின் கண்ணுக்கும் இடையே 18 முதல் 24 அங்குலம் (ஒன்றரை அடி முதல் 2 அடி) வரை இடைவெளி இருக்க வேண்டும். கணினித் திரையின் மையப் பகுதி கண்ணின் மையப் பகுதிக்கு 20 டிகிரி கீழே இருக்க வேண்டும். படுக்கையில் படுத்துக்கொண்டு கணினி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 45 நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகக் கணினியைப் பார்த்தால் 15 நிமிடங்கள் ஓய்வு தேவை. கணினியைப் பார்க்கும்போது 20-20-20 விதியான இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை இருபது அடி தூரத்தில் இருபது செகண்ட் பார்த்துப் பழக வேண்டும். சன்னல் வழியாக 20 அடி தொலைவில் பார்க்கப் பழகிக்கொள்ளலாம். இதை நினைவூட்ட அலாரம் வைத்துக்கொள்ளலாம்.

 குழந்தைகள், பெரியவர்கள் தூங்கப் போகும் இரண்டு மணி நேரத்துக்கு முன் கணினி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், தூக்கம் பாதிக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.

 இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் கணினி, அலைபேசியைப் பார்ப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்கிறது அமெரிக்க குழந்தைகள் நலக் கழகம். குளிர்சாதன அறையில் படிக்கும் குழந்தைகளின் கண்ணுக்கு நேராகக் குளிர்ந்த காற்று படும்போது கண் உலரலாம். குளிர்ந்த காற்று கண்ணில் படாதவாறு அமர்ந்து படிக்க வைக்க வேண்டும்.

 கணினியைத் தொடர்ந்து பார்க்கும்போது, ஒரு நிமிடத்துக்கு 10 - 15 முறை கண்களைச் சிமிட்ட குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

 பழச்சாறு, மோர், பால் போன்ற திரவ உணவை அடிக்கடி குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்

 குழந்தைகளுக்கு வைட்டமின் சத்துள்ள கீரை, கேரட், இனிப்புப் பூசணி போன்ற காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு உள்பட அனைத்து வகையான பழங்களையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

 கண்களைக் கடிகார திசையில் சுழற்றுவது, தொலைவில் இருக்கும் பொருளைச் சில விநாடிகள் பார்ப்பது போன்ற கண் பயிற்சிகள் நல்ல பலன் தரும்.

 முக்கியமாக, வீட்டில் உணவு அருந்தும் அறையிலும் படுக்கை அறையிலும் கணினி, கைபேசி பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.

 கைபேசியைத் தவிர்த்துத் திறந்தவெளியில் அதிகமாக விளை யாடும் குழந்தைகளுக்குப் பார்வை குறைபாடு குறைவாகவே காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மொட்டை மாடி விளையாட்டுகள், வீட்டின் அருகில் சைக்கிள் ஓட்டுவது, எளிய முறை உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடக் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.

 இணையவழி வகுப்பு அல்லது கணினியில் உங்கள் குழந்தை படித்துக் கொண்டுள்ளது என்றால், முறையான கண் பரிசோதனைக்கு குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டும். பார்வைக் குறைபாடு இருந்தால், அதற்குக் கண்ணாடி அணிய வேண்டும்.

- டாக்டர் பெ. ரங்கநாதன்

கட்டுரையாளர், கண் மருத்துவ நிபுணர்

தொடர்புக்கு: drranganathansocial@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in