குழந்தைகளைப் புரிந்துகொள்வோம் - 1 புதிய தொடர் | சொல்பேச்சு கேட்காத சிறார்: கையாள்வது எப்படி?

குழந்தைகளைப் புரிந்துகொள்வோம் - 1 புதிய தொடர் | சொல்பேச்சு கேட்காத சிறார்: கையாள்வது எப்படி?
Updated on
3 min read

“இவன் படிப்பில் கெட்டிக்காரன் என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால், வீட்டில் அவனுக்கு விருப்பமில்லாத ஏதாவது ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லுங்கள். அவன் குணமே மாறிவிடுகிறது. நான் சொல்வது எதையும் காதில் போட்டுக்கொள்வது இல்லை. எப்போதும் விளையாட்டுதான். பகலில் பையன்களுடன் கிரிக்கெட், இரவில் கணினி விளையாட்டுகள்.

‘நேரமாகிறது, படுக்கப் போ’ என்று சொன்னால் கோபமடை கிறான். கொஞ்சம் உரத்துச் சொன்னால் எதிர்த்துப் பேசுகிறான், ஆத்திரப் படு கிறான், கோபத்தில் பொருள்களைத் தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்கிறான். தன் தங்கையை அடிக்கிறான். முன்பெல்லாம் அவன் தந்தை வீட்டில் இருக்கும்போது அவருக் குப் பயந்து நல்லபடி நடந்துகொள்வான். இப்போது அவரையும் எதிர்த்துப் பேசுகிறான். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை”. - இது பத்து வயதுப் பையனின் தாயின் அங்கலாய்ப்பு.

சொல்பேச்சு கேட்க மறுக்கும் குழந்தைகள்

இவ்வாறான சிறார்களின் நடத்தையை எப்படி விவரிக்கலாம்? சுருக்கமாகக் கூறுவதானால், இந்த மாதிரியான சிறார், பெற்றோரின் சொல்பேச்சைக் கேட்க மறுப்பார்கள், பெற்றோரை எதிர்த்துப் பேசுவார்கள். நியாயமான கோரிக்கை களுக்கும் ஆணைகளுக்கும் கட்டுப்பட மறுப்பார்கள். அடிக்கடி ஆத்திரப்படு வார்கள், எடுத்ததற்கெல்லாம் கோபப்படு வார்கள். சிறு விஷயங்களுக்கெல்லாம் கோபம் கொண்டு சீறுவார்கள். பெரியவர்களுடன் தேவையில்லாமல் வாக்கு வாதம் செய்வார்கள். மற்றவர்களை வம்புக்கு இழுப்பார்கள். அடிக்கடி மற்றவர்களுடன் சண்டை போடுவார்கள். பெற்றோரையும் பெரியவர்களையும் மதிப்பதில்லை. தாங்கள் செய்த குற்றங்களுக்கு மற்ற வர்கள் மீது பழி சுமத்துவார்கள். பிறர் மனம் புண்படுத்தும்படி நடந்து கொள்வார்கள். பள்ளிக்கூடத்திலும் வெளியிடங்களிலும் இம்மாதிரி நடந்துகொள்வதால் பல பிரச்சினை களுக்கு ஆளாகிறார்கள். குழந்தை மருத்துவத்திலும் மனநல வட்டாரங் களிலும் இவர்கள் ‘சொல்பேச்சு கேட்க மறுக்கும் குழந்தைகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் உலக அளவில் ஐந்து முதல் பத்து சதவீதச் சிறார்களிடம் இந்த ‘நடத்தைச் சீர்குலைவு’ காணப்படுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதை ஆரம்பத்திலேயே திருத்தாவிட்டால், நாளடைவில் பிரச்சினை அதிகரிக்குமே தவிர தானாகக் குறையாது. இந்தத் தன்மை பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளில் இரண்டு மடங்கு கூடுதலாகக் காணப்படுகிறது (இந்தக் கட்டுரைகளில் ‘அவன்’ என்று குறிப்பிடப் படுவதற்கு இதுவே காரணம்). இது ஒரு மனநோயோ மனக்கோளாறோ அல்ல. இவை கற்றுக்கொண்ட நடத்தைகள்.

உடன்பிறந்த ஆற்றல்

குழந்தை வளர்ப்பை பொதுவாக நாம் பெற்றோர் எப்படிக் கற்றுக் கொள்கிறோம்? நாம் எவ்வாறு வளர்க்கப்பட்டோம் என்பதை அடிப்படையாக வைத்தே குழந்தை களை நாம் வளர்க்கிறோம். புத்தகங்களை வாசித்து இதை அறிந்து கொள்வதில்லை. மீனுக்குத் தானாக நீந்த வருவதுபோல, குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்கு, குறிப்பாகத் தாய்மார்களுக்கு ஓர் உடன்பிறந்த ஆற்றலாக அமைந்துள்ளது. இதில் இன்னொருவர் சொல்லி நாம் கற்றுக் கொள்வதற்கு என்ன இருக்கிறது என்று சிலர் அங்கலாய்த்துக் கொள்ளலாம்.

ஆனால், குழந்தைகளை நாளுக்கு நாள் பெற்றோர் கையாளும் விதம் சில வேளைகளில் சிறார்களின் நடத்தை சார்ந்த சீர்கேடுகளுக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக அமைந்து விடுகிறது. கூடவே, சில சிறார் ஓரளவு மூர்க்கமான மனப்போக்கு கொண்டவர்களாக இருப்பார்கள். சொல்பேச்சு கேட்காத சிறார்களைச் சமாளிப்பது பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் சவாலாக இருந்துவருகிறது.

எவ்வாறு கையாள்வது?

பெற்றோருக்கும் ஆசிரியர்களுக் கும் பணிய மறுக்கும் சிறார்கள் உலக அளவில் பெரும் பிரச்சினையாக இருப்பதால் இம்மாதிரியான சிறார் களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்துப் பல அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் நீண்டகாலமாக நடத்தப் பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சிகள் உணர்த்தும் செய்திகள், அந்தக் கண்டுபிடிப்புகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை எடுத் துரைப்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம். இந்த உத்திகள் 4 முதல் 12 வயதுள்ள சிறார்களுக்கு ஏற்றவை. பதின்ம வயதுச் சிறார்களுக்குச் சில மாற்றங்களுடன் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.

சில வேளைகளில் தன் மகனின் மோசமான நடத்தைக்கு ஏதேனும் மனவளர்ச்சி குறைபாடு காரணமாக இருக்கக்கூடும் என்று பெற்றோர் எண்ணலாம். ஆட்டிசம், கற்றல் குறைபாடு போன்ற மன வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளி டையே நடத்தை சார்ந்த பிரச்சி னைகள் கூடுதலாகக் காணப்படுகின்றன என்பது உண்மையே. இது குறித்துப் பெற்றோருக்குச் சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் தன் மகனை ஒரு குழந்தை சிறப்பு மருத்துவரிடம் காட்டுவது நல்லது. ஆனாலும் இங்கே கூறப்படும் குழந்தை வளர்ப்பு உத்திகள் உள வளர்ச்சிக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் பொருந்தும். இம்மாதிரியான சிறார்களை எப்படிக் கையாள்வது என்று விளக்கும் முன்னர் பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை விதிகளை எடுத்துக் கூறுவது முக்கியம்.

அடிப்படை விதிகள்:

முதலாவதாக, இம்மாதிரியான குழந்தைகளைச் சமாளிக்கப் பெற் றோர் சில ஆற்றல்களைக் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.

இரண்டாவதாக, பெற்றோர் இரு வரும் (வீட்டில் உள்ள மற்றவர் களும்) ஒருமனதோடு, ஒரே அணுகு முறை யைக் கடைப்பிடிக்க வேண்டும். பெரும்பாலான குடும்பங்களில் தந்தை கண்டிப்பானவராகவும் தாய் அரவணைத்து விட்டுக் கொடுத்துப் போகிறவராகவும் நடந்து கொள்வதே அன்றாடம் காணப்படும் விதியாக உள்ளது. மகன் வீட்டில் அத்துமீறி நடந்துகொண்டால், “அப்பா வரட்டும், சொல்கிறேன்”, என்று தாய்மார் மிரட்டுவதை நாம் அடிக்கடி காண்கிறோம். இதிலிருந்து சிறுவன் ஒருவன் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? “தந்தை வீட்டில் இல்லாதபோது எனக்கு வேண்டியபடி நடந்துகொள்ளலாம், தந்தை வீட்டில் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்” என்பதே. அதாவது தன் தாய், தந்தை ஆகிய இருவரின் மாறுபட்ட அணுகுமுறைகளையும் அவன் உணர்ந்து அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கி றான். இதன் காரணமாக, தாயுடன் இருக்கும்போது தனக்கு வேண்டியபடி நடந்துகொள்கிறான். தகப்பன் முன் அடக்கி வாசிக்கிறான். எனவே, பணிய மறுக்கும் சிறார்களைக் கையாளுவதில் உள்ள இரண்டாவது விதி பெற்றோர் இருவரும் இணைந்து ஒருமனதுடன் செயல்பட வேண்டும், ஒரே மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பதே.

அடுத்ததாக, நமது நாட்டில் சிறார் தவறு செய்யும்போது அவர்களை அடிக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால், இன்றைய நாளில் குழந்தைகளை அடிப்பது எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ‘அடியாத மாடு படியாது’ என்று ஒரு சொல்வழக்கு உண்டு. அது மாடுகளுக்குப் பொருத்த மாக இருக்கலாம். ஆனால், இது சிறார்களுக்கு நன்மையைவிடத் தீமையே செய்கிறது என்பதே தற்போது ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாக உள்ளது. இது சிறார் துன்புறுத்த லாகவும் கருதப்படுகிறது. பெற்றோர் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தவும் பழகிக்கொள்ள வேண்டும்.

இதுவரை என்ன செய்யக் கூடாது என்று பார்த்தோம். இனி இந்தச் சிறார் களின் நடத்தையைச் சீராக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

அடுத்துவரும் கட்டுரைகளில் பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் யாவை, அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி விரிவாகப் பேசுவோம்.

(தொடரும்)

- தொடர்புக்கு: ibmaht@hotmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in