Published : 24 Jun 2023 07:50 AM
Last Updated : 24 Jun 2023 07:50 AM

மாயம் செய்யும் மத்தன் எண்ணெய்

புற மருத்துவ முறைகள் சித்த மருத்துவத்தில் பிரசித்திபெற்றவை. பல மூலிகைச் சாறுகளை / கலவைகளைப் பலவிதமான எண்ணெய்களோடு சேர்த்துப் பதமாகக் காய்ச்சி வெளிமருந்தாகப் பயன்படுத்தும் வெளிப்பிரயோக உத்தி சித்த மருத்துவத்துக்கே உரித்தானது. அவ்வகையில் தோலில் ஏற்படும் காயங்களுக்காகப் புற மருந்தாகப் பயன்படுத்தப்படும் மத்தன் எண்ணெய் சிறப்பு வாய்ந்தது.

ஊமத்தைத் தாவரத்தின் (Datura metel என்பது தாவரவியல் பெயர்) இலைச் சாறைக் கொண்டு தயாரிக்கப் படுவதால் இது ‘மத்தன்’ என்கிற பெயரைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு வீட்டின் மருத்துவப் பெட்டியிலும் கட்டாயம் இடம்பெற வேண்டிய வெளி மருந்து மத்தன் எண்ணெய்.

பச்சை எண்ணெய்

ஊமத்தை இலைச் சாறோடு தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பிலேற்றிக் காய்ச்சி, சாறு கொஞ்சம் சுண்டியதும் சுத்திசெய்து பொடித்து வைத்த மயில் துத்தம் (துருசு) சேர்த்துக் காய்ச்சப்படுகிறது. பச்சை நிறத்தில் மருத்துவக் குணமிக்க எண்ணெய்யாக உருவாகும் மத்தன் எண்ணெய்க்கு ‘பச்சை எண்ணெய்’ என்கிற பெயரும் உண்டு.

மயில் துத்தத்தை ஊமத்தை இலைச் சாறோடு தொடக்கத்திலேயே சேர்த்துக் காய்ச்சியும் மத்தன் எண்ணெய்யைத் தயாரிக்கலாம். வெண் ஊமத்தை இலைகளைவிடக் கரு ஊமத்தை இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மத்தன் எண்ணெய்க்கே கூடுதல் பலன் கிடைக்கும். ஊமத்தை இலைச் சாறோடு குப்பைமேனி இலைச் சாறு சேர்த்துத் தயாரிக்கப்படும் மத்தன் எண்ணெய்யும் வழக்கத்தில் உண்டு.

‘புண்ணாற்றுங் காமியத்தின்...’ எனத் தொடங்கும் மயில் துத்தம் குறித்த சித்த மருத்துவப் பாடல், ரணத்தைப் போக்கும் அதன் பண்பு குறித்து எடுத்துரைக்கிறது. அழுகலகற்றி, துர்மாமிச வளர்ச்சியைத் தடுக்கும் செய்கை மயில் துத்தத்துக்கு இருப்பதாகச் சித்த மருத்துவம் பதிந்திருக்கிறது. தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் (Lauric) அமிலத்திற்குப் புண்களை விரைந்து குணமாக்கும் தன்மை இருப்பது குறிப்பிடத்தக்கது. வலி நிவாரணி, கிருமிநாசினி, வீக்கமுறுக்கி போன்ற செய்கைகள் ஊமத்தை இலைகளுக்கு இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ‘விரணமும்போம் குழிப்புண் கட்டிகளு மாறுங்காண்...’ என ஊமத்தை இலைச் சாறின் வெளிப்பிரயோக பலன் குறித்து அகத்தியர் குணவாகடப் பாடல் எடுத்துக்கூறுகிறது.

வெளிப்பிரயோக மருந்து மட்டுமே

மத்தன் எண்ணெய் கண்டிப்பாக வெளிப்பிரயோகத்துக்காக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டிய புற மருந்து. ஊமத்தை இலைச் சாறு, தேங்காய் எண்ணெய், மயில் துத்தம் சேர்க்கப்பட வேண்டிய அளவும் காய்ச்சும் பதமும் முக்கியம். எனவே, வீட்டிலேயே தயாரிப்பதும் முறையல்ல.

வெட்டுக் காயங்கள், படர்தாமரை, சிரங்கு, கரப்பான், அடிபட்ட வீக்கம், மதுமேகப் புண்கள் (Diabetic ulcer), நாளவிபாதப் புண்கள் (Varicose ulcer) போன்ற நிலைகளுக்கு வெளி மருந்தாக உபயோகிக்கலாம். அட்டைக் கடிவாயில் மத்தன் எண்ணெய்யை வைத்துக்கட்ட, வடியும் ரத்தம் விரைவில் தடுக்கப்படும். முற்காலங்களில் ராஜ பிளவை என்று குறிப்பிடப்படும் புண்ணுக்கான மருந்தாகவும் மத்தன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மயில் துத்தம் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் மத்தன் எண்ணெய்யைச் செவி நோய்களுக்கான புற மருந்தாக உபயோகிக்கும் வழக்கமும் சித்த மருத்துவத்தில் இருக்கிறது. துருசு சேர்க்காத மத்தன் எண்ணெய்யை ஆசன வாயில் ஏற்படும் புண்களுக்குத் தடவலாம். முற்காலங்களில் நாய்க்கடி புண்களில் வைத்துக் கட்டும் அவசர மருந்தாகவும் மத்தன் எண்ணெய் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. விலங்கின மருத்துவத்தில் விலங்குகளுக்கு ஏற்படும் தோல் நோய்களுக்கு மத்தன் எண்ணெய் அற்புதப் பலன் அளிப்பதைக் கால்நடை மருத்துவர்கள் பதிவுசெய்துள்ளனர்.

தீவிரப் புண்களுக்கு...

மதுமேகப் புண்கள், நாளவிபாதப் புண்களுக்கு மருத்துவரின் ஆலோசனை, மேற்பார்வையில் மத்தன் எண்ணெய்யைப் பயன்படுத்துவது முக்கியம். புண்ணின் தீவிரம், காயம் ஆறும் தன்மை, எண்ணெய் பயன்படுத்திய பின் ஏற்படும் முன்னேற்றம் (Progression) ஆகிய விஷயங்களைக் கருத்தில் கொண்ட மருத்துவரின் கண்காணிப்பு அவசியம். மருத்துவரின் பரிந்துரையின்றி எண்ணெய் மருத்துவத்தை நாமே செய்துகொள்ளும் சுய மருத்துவ எண்ணம் மதுமேகப் புண்கள் விஷயத்தில் தவறு.

ரத்தச் சர்க்கரை அளவைக் கருத்தில் கொண்டு சித்த மருத்துவரின் ஆலோசனையோடு பயன்படுத்துவது நலம். நவீன மருந்துகளோடு கூட்டுமருத்துவமாகச் சித்த மருந்துகளைப் பயன்படுத்தும் ஒருங்கிணைந்த மருத்துவ நிலையங்களில் மத்தன் எண்ணெய்யின் பங்கு மிக முக்கியமானது. மதுமேகப் புண்ணில் மத்தன் எண்ணெய்யின் தாக்கம் குறித்த ஆரம்ப நிலை ஆய்வுகள் மகிழ்ச்சியான செய்தியைக் கொடுக்கின்றன.

பக்க வாதம், வயோதிகம் போன்ற காரணங்களால் நீண்ட நாளுக்கு ஒரே நிலையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் படுக்கைப் புண்களுக்கு மத்தன் எண்ணெய்யைத் தடவிவரப் புண்களின் தீவிரம் விரைவாகக் குறையும். தொழுநோயில் உண்டாகும் ரணங்களுக்கு மற்ற உள் மருந்துகளோடு, மத்தன் எண்ணெய்யை வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தும்பாரம்பரிய வழக்கத்தை இப்போதும் முயன்று பார்க்கலாம்.

பயன்படுத்தும் முறை

மத்தன் எண்ணெய்யைப் பஞ்சில் நனைத்து, துணியில் வைத்து மருத்துவ முறையில் கட்டுப்போடும் வகையில் (Following dressing procedure) புண்களில் வைத்துக் கட்டிவர விரைவில் குணம் கிடைக்கும். கரப்பான், சிரங்கு, படர்தாமரை போன்ற தோல் நோய்களுக்கு மேற்பூச்சாகத் தடவிவந்தால் போதுமானது. அதாவது குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு, அறிகுறிகள் உள்ள பகுதியில் தடவிய பின் குளிக்கலாம். எண்ணெய்ப் பிரயோகம் செய்த பின்பு கைகளை நன்றாகச் சுத்தம் செய்துகொள்வது அவசியம்.

காயம் ஆற்றும் தன்மை

புண்களை விரைந்து குணமாக்கும் தன்மை மத்தன் எண்ணெய்க்கு இருப்பதை உறுதிபடக் கூறலாம். தோலில் காயம் ஏற்பட்ட பிறகு பல காரணிகளைப் பொறுத்து, காயம் ஆறும் தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. ரத்த உறைதல் செயல்பாடு, காயத்தைச் சுற்றி வீக்கம் ஏற்படுதல், அப்பகுதியில் ரத்த அணுக்களின் செயல்பாடு, தோல் புத்துயிர் பெறும் நிகழ்வு, தோல் பழைய நிலைக்குத் திரும்புதல் போன்ற விஷயங்கள் இயற்கையாக நிகழும் செயல்பாடுகள். காயம் ஏற்பட்டதிலிருந்து தோல் புத்துயிர் பெறுவது வரையிலான செயல்பாடுகளில் மத்தன் எண்ணெய் எவ்வகையில் செயலாற்றுகிறது என்பதைக் கூடுதல் ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தலாம்.

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x