

அவருக்கு வயது சுமார் 60 இருக்கும். காலை 11 மணி அளவில் கடைக்குச் சென்றபோது கால்கள் சற்றுத் தடுமாறிப் பின்னியுள்ளன. வீட்டுக்குத் திரும்பியவர் சிறிது நேரம் இருந்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார். வேலையின்போது அவரது இடக்கையில் வலி ஏற்பட்டதால், வீட்டுக்குத் திரும்ப வந்துவிட்டார். வீட்டில் உள்ளவர்களிடம் எதுவும் சொல்லாமல் தூங்கிவிட்டார். மாலை 6 மணி அளவில் விழித்தவரின் பேச்சு சற்று குழறத் தொடங்கியது. அருகிலிருந்த மருத்துவரிடம் மனைவி அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த மருத்துவர் அவரை ஸ்கேன் எடுத்துவரச் சொல்லி அனுப்பியிருக்கிறார். ஸ்கேன் எடுத்த பின்னர், நன்றாகத்தானே இருக்கிறோம், நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று வீட்டுக்கு வந்துவிட்டார்.
இரவு 11 மணி அளவில், திடீரென்று அவருக்குக் குளித்ததுபோல் உடலெல்லாம் வியர்த்து ஊற்றியது. குடிக்கத் தண்ணீர் கேட்டிருக்கிறார். மனைவியிடம் இருந்து தண்ணீரை வாங்க முயலும்போது, இடக்கை செயல்படவில்லை. மறுநாள் காலை 5 மணி அளவில் மருத்துவரைப் பார்க்கச் சென்றபோது இடது காலும் செயல்படவில்லை. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு வாரம் அவர் மருத்துவமனையில் தங்க நேர்ந்தது. இன்று கையும் காலும் சற்றுச் செயல்படுகின்றன என்றாலும், அவரால் பழைய நிலைமைக்கு முழுமையாகத் திரும்ப முடியவில்லை. அவருக்கு ஏற்பட்டது பக்கவாதம். அதன் அறிகுறிகள் தென்பட்ட உடனே, குறைந்தபட்சம் நான்கு மணி நேரத்துக்குள் சிகிச்சை பெற்றிருந்தால், அவருடைய கை, கால் செயல்பாடுகளை மீட்டெடுத்திருக்கலாம். அவரின் அறியாமை, அலட்சியத்தின் காரணமாகப் பக்கவாதத்தின் பாதிப்பு மோசமடைந்துவிட்டது.
பக்கவாதம்
தொற்றா நோய்களில் தீவிரப் பாதிப்பின் அடிப்படையில் இதய ரத்தக் குழாய் நோய்களுக்கு (கார்டியோ வாஸ்குலர்) அடுத்தபடியாக மூளையின் ரத்த நாள நோய்கள் (செரிபரோ வாஸ்குலர்) உள்ளன. இதய நோய்களில் மாரடைப்பு முதன்மையானது என்றால், மூளை சார்ந்த நோய்களில் பக்கவாதம் முதன்மையானது.
மூளையின் ஏதோ ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, செயல்படாமல் போகும்போது உடலின் மறுபக்கத்தில் ஒரு கை, ஒரு கால், முகத்தின் ஒரு பகுதி செயலிழந்துபோகும். இதுவே பக்கவாதம். மூளையின் ரத்த நாளங்களில் ரத்த உறைவாலோ கசிவாலோ இது ஏற்படுகிறது. இதன் பாதிப்பின் அளவும் தன்மையும் தீவிரமும் மூளையில் ரத்தவோட்டம் தடைபடும் பகுதியைப் பொறுத்து மாறுபடும். பாதிப்புக்குள்ளாகும் மூளையின் பகுதியைப் பொறுத்துக் கேட்கும் திறனோ, பார்வைத் திறனோ, கை, கால் செயல்பாடுகளோ பாதிப்படையலாம். ஒருவேளை இதயத்தைக் கட்டுப்படுத்தும் பகுதியிலோ, தண்டுவடம் தொடங்கும் இடத்திலோ பாதிப்பு ஏற்பட்டால் அது உடனடி மரணத்திலும் முடியக்கூடும்.
காரணிகள்
l உயர் ரத்த அழுத்தம்
l ரத்தக் கொழுப்பு
l நீரிழிவு
l புகைபிடித்தல்
l உடல் பருமன்
l உடற்பயிற்சியின்மை
l உடல் செயல்பாடற்ற வாழ்க்கை முறை
l ஆரோக்கியமற்ற உணவு முறை
l மன அழுத்தம், கவலை, பயம், பதற்றம்
எப்படி ஏற்படுகிறது?
பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாக உயர் ரத்த அழுத்தமும் ரத்தக் கொழுப்பும் உள்ளன. இதய ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதால், அதன் உள்ளளவு குறைந்து ரத்த உறைவு (கிளாட்) ஏற்பட்டு, ரத்தவோட்டம் தடைபடும். அதேபோல் மூளையின் ரத்த நாளங்களில் படியும் கொழுப்பினாலும் அடைப்பு ஏற்பட்டு ரத்தவோட்டம் தடைபட நேரிடலாம்.
மன அழுத்தம், மனக் கவலை காரணமாகவும் பக்கவாதம் ஏற்படக்கூடும். மன அழுத்தத்தால் மூளையின் ரத்தக் குழாய்கள் சுருங்க நேரிடும். இவ்வாறு சுருங்கும் பகுதி, ஏற்கெனவே கொழுப்பினால் குறுகியுள்ள பகுதி என்றால், பாதிப்பின் தீவிரம் மோசமடையும். ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு, மன அழுத்தம் போன்றவற்றுக்கு முறையான சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்வது பக்கவாதம் ஏற்படும் சாத்தியத்தை வெகுவாகக் குறைக்கும்.
வேலை, கடன் அழுத்தம், திருமண நிகழ்ச்சிகள், பயணங்கள், விழாக்கள் போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தம் அதிகாலை வேளையில், அதாவது மூளை விழிப்படையும் நேரத்தில் உச்சத்தில் இருக்கும். இந்த நிலையில், உயர் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரையைக் காலையில் சாப்பிட்டால், அடுத்த நாள் காலையில் அதன் செயல்திறன் முற்றிலும் நீர்த்துப் போயிருக்கும். இது பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, உயர் ரத்த அழுத்தப் பாதிப்புக்கான மாத்திரை இரவில் பரிந்துரைக்கப்படுகிறது.
அறிகுறிகள்
l முகத்திலோ உடலிலோ ஒரு பக்கமாக மரத்துப்போதல்
l ஒரு பக்கமாக இழுப்பது போன்ற உணர்வு
l வார்த்தைகள் குழறுதல்
l வாய் லேசாகக் கோணுதல்
l நடக்கும்போது தள்ளாடுதல்
l பார்வைத் திறன் குறைந்து பின்னர் தெளிவடைவது
l கை தடுமாற்றம்
l கை விரல்கள் திடீரென ஒத்துழைக்காமல் போவது
l வழக்கத்துக்கு மாறான தலைவலி, வாந்தி, தலைச்சுற்றுதல்
உடனடித் தேவை
பக்கவாதத்தின் அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது. அறிகுறிகள் தென்பட்ட நான்கு மணி நேரத்துக்குள் மருத்துவரைச் சந்தித்து, தகுந்த சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும். பாதிப்பை உறுதிசெய்வதற்கு ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை, ரத்தக் கொழுப்பு உள்ளிட்ட பரிசோதனைகளும் இசிஜி, டாப்ளர், சி.டி./எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்றவையும் தேவைப்படும்.
சிகிச்சை
ரத்த உறைவால் ஏற்படும் பக்கவாதத்தைச் சமாளிப்பது சற்று எளிது. ரத்தக் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு என்றால், அதைச் சமாளிப்பது கடினமே. ரத்த உறைவால் ஏற்பட்ட பாதிப்புக்கு, அறிகுறிகள் தென்பட்ட நான்கு மணிநேரத்துக்குள் ‘டிபிஏ’ (TPA) எனும் மருந்தைச் செலுத்துவதன் மூலம், பக்கவாதம் வருவதைத் தடுக்க முடியும். உறைவு கடுமையாக இருந்தது என்றால், பாதிக்கப்பட்டவருக்கு ‘ஸ்டென்ட்’ பொருத்தும் சிகிச்சையும் தேவைப்படும். ரத்தக்கசிவின் காரணமாகப் பக்கவாதம் வந்தவர்களுக்கு அறுவைசிகிச்சையின் மூலம் ரத்தக்கசிவை நிறுத்த முடியும். ரத்தக்கசிவு உறைந்து கட்டியாகியிருந்தால், அதையும் அதன் மூலம் அகற்றவிட முடியும்.
பயிற்சிகள்
இயன்முறை சிகிச்சை (பிசியோதெரபி),பேச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை பக்கவாதத்தின் பாதிப்பிலிருந்து விடுபட உதவும். பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், இயல்பு வாழ்க்கைக்கு மெதுவாகத் திரும்ப முடியும். இந்தப் பயிற்சிகளை அவர்கள் தொடர்ந்து செய்வதற்குக் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
பக்கவாதத்தை ஏற்படுத்தும் ஆபத்துக் காரணிகளில் நாம் எப்போதும் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தவுடன் உடனடியாக நம் உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ரத்தக் கொழுப்பு இருப்பது தெரியவந்தால், பொரித்த உணவு வகைகளைத் தவிர்த்து, அவித்த உணவுக்கு மாற வேண்டும். காய்கறி, கீரை பழங்களை உள்ளடக்கிய சமச்சீர் உணவைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்வது முக்கியம். மன அழுத்தத்தைக் குறைக்கும் தியானம், மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட வழிமுறைகளில் ஈடுபடுவது நல்லது.
கடன்களைக் குறைப்பது, தேவைகளைக் குறைப்பது, இருப்பதில் நிறைவு கொள்வது போன்றவை மன நிம்மதியை அளித்து மன அமைதியைப் பெருக்கும். மருத்துவரின் பரிந்துரையின்படி, போதுமான இடைவெளியில் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு ஆகியவற்றின் அளவைப் பரிசோதித்து வர வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின்றி ஒருபோதும் சிகிச்சையை நிறுத்தக் கூடாது. முக்கியமாக, சமூக ஊடகங்களில் உலவும் போலி மருத்துவ அறிவுரைகளால் ஈர்க்கப்பட்டு, அவற்றைப் பின்பற்ற முயலக் கூடாது. அது உயிரையே பறிக்கும் பேராபத்தில் முடியக்கூடும்.
(தொடரும்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.