

திடுக்கிட்டு எழுந்த தாமரை கடிகாரத்தைப் பார்த்தார். மணி எட்டரை. அயர்ந்து தூங்கிவிட்டிருந்தார். ஒத்துழையாமையைக் கையில் எடுத்திருக்கும் தன் உடலை எண்ணி வருந்தியவாறு படுக்கையிலிருந்து எழுந்து அன்றாடப் பணிகளைச் செய்ய ஆயத்தமானார். அவர் மகனுடைய திருமணத்துக்கு இன்னும் சில நாள்களே இருந்த நிலையில் இவ்வாறு புலம்பிக்கொண்டிருக்கக் கூடாது என்று அவருக்குத் தோன்றியது.
குளியலறைக்குள் நுழைந்தவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. சில மாதங்களாகத் தென்பட்டுக் கொண்டிருந்த வெள்ளைப்படுதல் இன்னும் நின்றபாடில்லை. சில நாள்களாக ரத்தமும் கலந்து வருவதுபோல் தோன்றியது. சூடு பிடித்திருக்கலாமோ? இளநீர் குடிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டார். ஆனால், ரத்தம் கலந்து ஏன் வர வேண்டும் என்று குழப்பமாக இருந்தது. மாதவிடாய் மீண்டும் வரத் தொடங்கிவிட்டதா? மொத்தமாக நின்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதே எனக் குழம்பினார்.
உதவிக்கு வந்த தோழி: 52 வயதில் மாதவிடாய் நின்ற பிறகு உடல் எந்தத் தொந்தரவும் தரவில்லை. சமீபத்தில்தான் இந்த வெள்ளைப்படுதல் வந்து படுத்துகிறது. நினைக்க நினைக்க அவருக்கு இன்னும் அயர்ச்சியாக இருந்தது. குழந்தைகளையும் கணவரையும் வேலைக்கு அனுப்பிவிட்டுச் சோர்வாக சோபாவில் சாய்ந்தார். அடிவயிறில் சுருக்கென்றது.
எதிரில் இருந்த நிலைக்கண்ணாடியில் மெலிந்த தேகமும் குழி விழுந்த கன்னங்களுமாகத் தெரிந்த அவரது பிம்பத்தை உற்று நோக்கினார். எடை குறைந்தது போல் தோன்றியது. ரவிக்கை தோளில் நிற்காமல் சரிந்துகொண்டிருந்தது. அன்றாடம் 100 முறை மாடி ஏறி இறங்கினால் யாருக்குத்தான் எடை குறையாது என்று அலுத்துக்கொண்டார்.
மெதுவாக சோபாவிலிருந்து எழுந்து உலர்ந்த துணிகளை எடுக்கலாம் என்று மாடி ஏறத் தொடங்கினார். இரண்டு எட்டு வைத்திருப்பார். தலை சுற்றிக் கண்கள் இருட்டி நிலைதடுமாறியது. நிதானத்துக்கு வரச் சில நிமிடங்கள் பிடித்தன. பயம் மனதைச் சூழ தன் உற்ற தோழி மாலதியை அழைத்தார்.
பரிசோதனை முடிவுகள்: மாலதியின் வற்புறுத்தலின் பேரில் அருகில் இருந்த ஒரு பன்னோக்கு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்தார்கள். மருத்துவர் ஸ்கேன் உள்ளிட்ட சில பரிசோதனைகளைப் பரிந்துரைத்தார். பரிசோதனை முடிவுகள் அவருக்கு நான்காம் நிலை கருப்பை வாய்ப் புற்றுநோய் (CERVICAL CANCER) இருப்பதை உறுதிப்படுத்தின.
அந்தப் புற்றுநோய் ஏற்கெனவே நுரையீரலுக்கும் கல்லீரலுக்கும் பரவியிருப்பதாகத் தெரிவித்த புற்றுநோய் மருத்துவக் குழுவினர் இப்போது எஞ்சியிருக்கும் சிகிச்சை முறைகளைத் தாமரையின் குடும்பத்தினரிடம் விவரித்தனர். தாமரை தன் நோயின் ஆரம்பநிலை அறிகுறிகளை நீண்ட காலமாக அலட்சியம் செய்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
கருப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன?
l அதிக அளவில் வெள்ளைப்படுதல்
l மாதவிடாய் நின்ற பின் மீண்டும் ஏற்படும் ரத்தப்போக்கு
l உடல் சோர்வு
l வயிற்று வலி
l எடை குறைதல்
புற்றுநோய் எப்போது ஆரம்பித்திருக்கக்கூடும்? - ஆறு மாதங்களுக்கு முன்னால் நோயின் அறிகுறிகளில் கவனம் செலுத்திப் பரிசோதனை செய்திருந்தால் எளிதில் குணப்படுத்தக்கூடிய நிலையிலேயே (ஸ்டேஜ்1) தாமரையின் கருப்பைவாய்ப் புற்றுநோயைக் கண்டறிந்திருக்கலாம்.
புற்றுநோய் முன்னறியும் பரிசோதனைகளை (screening tests) மேற்கொண்டிருந்தால் நோயை எளிதில் குணப்படுத்தியிருக்க இயலுமா? - நிச்சயமாக. கருப்பைப் புற்றுநோய்களில் மிகவும் அதிகமாக நிகழ்வது கருப்பை வாய்ப் புற்றுநோய். அதை ’பாப் ஸ்மியர்’ பரிசோதனை (Pap smear) மூலமாக ஆரம்பநிலையிலேயே கண்டறியலாம். ஆரம்ப நிலைகளில் மிகவும் எளிதாகக் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய்களில் இதுவும் ஒன்று.
என்னென்ன சிகிச்சை முறைகள் இருக்கின்றன?
l அறுவை சிகிச்சை
l கீமோதெரபி
l ரேடியேஷன்
l இவற்றை உள்ளடக்கிய சிகிச்சை புற்றுநோயின் நிலையைப் பொறுத்துப் பரிந்துரைக்கப்படும்.
சிகிச்சை முடிந்தபின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியுமா? - திரும்ப முடியும். சிகிச்சை முடிந்தபின் புற்றுநோய் திரும்ப வர சாத்தியம் இருப்பதால், மருத்துவர் அறிவுரைப்படி தொடர்ச்சியாகச் சில மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதித்துக்கொள்வது மட்டும் போதுமானது.
கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க இயலுமா? - ஹியூமன் பாபிலோமா வைரஸ் (Human Papilloma Virus- HPV) பாதிப்பே கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கு மிக முக்கியக் காரணி. 9 வயதுக்கு மேல் உள்ள பெண் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இதைத் தடுக்க இயலும்.
21 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பாப் ஸ்மியர் (Pap Smear) எனப்படும் எளிய பரிசோதனையை மேற்கொள்வதன் மூலமாக இந்த நோயை ஆரம்ப நிலைகளிலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்தவும் முடியும்.
- கட்டுரையாளர், புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர்; dayanandasrinivasan@gmail.com