நவீன மருத்துவம் | மாரடைப்புக்கு லேசர் சிகிச்சை! - இனி, பைபாஸ் அறுவை சிகிச்சை தேவையில்லை!

நவீன மருத்துவம் | மாரடைப்புக்கு லேசர் சிகிச்சை! - இனி, பைபாஸ் அறுவை சிகிச்சை தேவையில்லை!

Published on

புனேயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர். வயது 58. என்றைக்கும்போல் அன்றைக்கும் அவர் பணி நிமித்தமாக வீடியோ காலில் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தபோது நடுநெஞ்சில் வலித்தது; லேசாக வியர்த்தது. ‘வாயு’வாக இருக்கலாம் எனக் கருதி, ஒரு ‘ஜெலுசில்’ மாத்திரையைப் போட்டுக்கொண்டு பணியைத் தொடர்ந்தார்.

வலி குறையவில்லை. தலையைச் சுற்றியது; மயக்கம் வருவது போலிருந்தது. உதவியாளரை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு ‘இசிஜி’ எடுத்தார்கள். “உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக இதயநோய் மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது” என்றார்கள்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர் இதயநோய் சிறப்பு மருத்துவமனையில் இருந்தார். அங்கு ‘எக்கோ’, ‘ஆஞ்சியோகிராம்’ எடுக்கப்பட்டு, அவருக்கு வந்துள்ளது மாரடைப்புதான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. பைபாஸ் அறுவைசிகிச்சை ஒன்றுதான் அவருக்குத் தீர்வு என்று முடிவானது. ஆனால், அவருக்குச் சிறுநீரகத்திலும் பெரிய பிரச்சினை இருந்ததால், பைபாஸ் அறுவைசிகிச்சையை மேற்கொள்ள முடியாத நிலை.

மாற்றாக, ‘ஸ்டென்ட்’ (Stent) பொருத்த முடியுமா என்று மருத்துவர்கள் யோசித்தனர். அதுவும் முடியாது என்றே தோன்றியது. காரணம், அவருக்கு இதயத் தமனியில் (Coronary artery) ஸ்டென்ட் நுழைய முடியாத அளவுக்கு கால்சியம் பாறைபோல் இறுகிப்போயிருந்தது. கடைசியில், “நீங்கள் சென்னைக்குச் செல்லுங்கள். அங்கே உங்களுக்குத் தேவையான சிகிச்சை கிடைக்கும்” என்று வழிகாட்டப்பட்டது.

சென்னையில் அவர் எதிர்பார்த்து வந்த பைபாஸ் அறுவை சிகிச்சையும் கிடைக்கவில்லை. ஸ்டென்ட் சிகிச்சையும் கிடைக்கவில்லை. வரப் பிரசாதமாகக் கிடைத்ததோ, லேசர் சிகிச்சை! ஆம், இந்தியாவில் முதன்முறையாக சென்னை யில் லேசரைப் பயன்படுத்தி மாரடைப்புக்குத் தீர்வு தரப்பட்டிருக்கிறது. கடுமையான மாரடைப்புடன் வந்த புனே தொழிலதிபர் பூரண மாகக் குணமடைந்து, சிகிச்சை பெற்ற மூன்றாம் நாளில் ஊர் திரும்பிய செய்தி வைரல் ஆனது.

அது என்ன லேசர் சிகிச்சை? - மருத்துவ மொழியில் இதைச் சொன்னால், ‘லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி’ (Laser angioplasty). இன்னும் தெரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் ‘ஸ்டென்ட் சிகிச்சை’யைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதயத் திசுக்களுக்கு உணவையும் ஆக்ஸிஜனையும் கொடுக்கும் தமனி ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு வருகிறது. இந்த ரத்தக்குழாயின் உள்பக்கத்தில் கொழுப்புப் படிவது, கால்சியம் படிவது, ரத்தம் உறைவது போன்ற காரணங்களால் இதயத்துக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. அடைபட்ட ரத்தக்குழாயைச் சரிசெய்யும் வகையில், 1977இல் ‘பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி’ (Balloon angioplasty) சிகிச்சை அறிமுகமானது.

இந்தச் சிகிச்சையின்போது பயனாளியின் கை அல்லது தொடையில் உள்ள ரத்தக்குழாயில் சிறிய துளையிட்டு, அதன் வழியாக ‘கதீட்டர்’ எனும் வளைகம்பி மூலம் ஒரு பலூனையும் ‘ஸ்டென்ட்’ எனும் வளைச்சுருளையும் இதயத் தமனிக்குச் செலுத்துகிறார்கள். அங்கே அடைப்பு ஏற்பட்ட இடத்தில் பலூனை விரியச் செய்து அடைப்பை நீக்குகிறார்கள்.

மறுபடியும் அந்த இடத்தில் அடைப்பு ஏற்படாதபடி, ‘ஸ்டென்ட்’டை அங்கே பொருத்திவிடுகிறார்கள். பிறகு, பலூனைச் சிறிதாக்கி வெளியில் எடுத்துவிடுகிறார்கள். இதன் மூலம் இதயத்துக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்க வழி செய்யப்படுகிறது. ‘ஸ்டென்ட்’ என்பது ஒரு குகைக் கூடாரம்போல் செயல்படுகிறது. இதன் குகைப் பாதையில் எப்போதும்போல் ரத்தம் செல்வதால், மீண்டும் மாரடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

ஸ்டென்ட் சிகிச்சையில் பிரச்சினைகள்: சில வேளைகளில் மொத்தம் உள்ள மூன்று இதயத் தமனிகளில் இரண்டுக்கு மேற்பட்ட தமனிகளில் அடைப்பு ஏற்படுவதுண்டு. அப்போது மேற்சொன்னபடி ‘பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சையை மேற்கொள்ள முடியாது. அந்தப் பயனாளிகளுக்கு பைபாஸ் அறுவைசிகிச்சை ஒன்றுதான் தீர்வு தரும். ஆனால், பலருக்கும் இதயத்தசை நோய் (Cardiomyopathy), சிறுநீரகப் பிரச்சினை, வயது மூப்பு போன்ற சிக்கல்கள் இருக்கும்.

அப்போது அவர்களுக்கு பைபாஸ் அறுவைசிகிச்சையை மேற்கொள்ள முடியாது. உதாரணமாக, புனே தொழிலதிபருக்கு மூன்று தமனிகளிலும் அடைப்பு இருந்தது; சிறுநீரகத்திலும் பெரும் பிரச்சினை இருந்தது. அதனால்தான் அவருக்கு பைபாஸ் அறுவைசிகிச்சையை மேற்கொள்ள முடியவில்லை.

அடுத்ததாக, பலருக்கும் இதயத் தமனிகளில் கால்சியம் படிந்திருக்கும். இது ‘ஸ்டென்ட்’ நுழைவதைத் தடுக்கும். இவர்களுக்குத் தற்போது ‘ரோட்டாபிலேட்டர்' (Rotablator) எனும் கருவிகொண்டு கால்சியப் படிகத்தை உடைத்து, அதன் பின்னர் ‘ஸ்டென்ட்’டைச் செருகுவது நடைமுறையில் உள்ளது. ஆனாலும், சிலருக்கு இந்தக் கருவி மூலமும் கால்சியப் படிகத்தை முழுவதுமாக உடைக்க முடியாமல் போகும். அப்போது ‘பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சையை மேற்கொள்வது கடினமாகிவிடும்.

இன்னும் சிலருக்கு ‘ஸ்டென்ட்’ நுழைய முடியாத அளவுக்கு இதயத் தமனி மிகச் சிறியதாக இருக்கும். அல்லது 20 மி.மீ.க்கும் அதிகமான நீளத்தில் கொழுப்பு அல்லது கால்சியம் அடைத்திருக்கும். அடுத்து, ஏற்கெனவே ஸ்டென்ட் பொருத்தப்பட்டவர்களுக்கு மறுபடியும் அந்த இடத்தில் அடைப்பு ஏற்படும் (Restenosis). அப்போதும் ‘பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி’யை மேற்கொள்ள முடியாது. இந்த மாதிரியான நேரத்தில் ‘லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி’ கைகொடுக்கும்.

லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை: இதயத் தமனியில் ஸ்டென்டைப் பொருத்துவதற்கான வழிமுறைதான் இதிலும் பின்பற்றப்படுகிறது. இதற்கெனத் தயாரிக்கப்பட்ட வளைகம்பியைப் பயனாளியின் தொடை ரத்தக்குழாய் வழியாக, உள்நாள கேளா ஒலி ஸ்கேனில் (Intra vascular ultra sound - IVUS) கண்காணித்துக்கொண்டே இதயத்தின் அடைபட்ட ரத்தக்குழாய்க்கு அனுப்புகிறார்கள்.

அடைப்பை அடைந்ததும் தொடை ரத்தக்குழாயில் நீட்டிக்கொண்டிருக்கும் அந்தக் கம்பியின் ஒரு முனையில் ஒரு வளைகுழாயைச் சொருகி, அந்தக் குழாயை மேல்நோக்கித் தள்ளி இதயத்தில் அடைப்பு உள்ள இடத்துக்கு அனுப்புகிறார்கள். இப்போது லேசர் குழாயை அந்த வளைகுழாய் வழியாக உள்ளே அனுப்புகிறார்கள். அடைப்பை அடைந்ததும் ஏற்கெனவே கணிக்கப்பட்டுள்ள அளவுக்கு லேசர் கதிர்வீச்சைச் செலுத்துகிறார்கள்.

அப்போது, தண்ணீரில் காற்றை ஊதினால் குமிழ்கள் புறப்படுவதைப்போல ஏராளமான லேசர் குமிழ்கள் அங்கே உண்டாகின்றன. இவை கார்பன் அணுக்களை ஆவியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளன. அதனால், அந்தக் குமிழ்கள் வெடிக்கும்போது, அருகில் உள்ள கொழுப்பு அல்லது கால்சியப் படிகத்தின் கார்பன் அணுக்கள் பொசுங்கி ஆவியாகிவிடுகின்றன.

இந்தச் செயல்முறைப்படி இதயத் தமனியில் அடைப்பை நீக்கிவிடுகிறார்கள். அதன் பின்னர், தேவைப்பட்டால் ஸ்டென்டைப் பொருத்துகிறார்கள். சிகிச்சை முடிந்ததும் வளைகம்பி, வளைகுழாய், லேசர் குழாய் ஆகியவற்றை வெளியே எடுத்துவிடுகிறார்கள். தொடையில் போடப்பட்ட துளையைத் தையல் போட்டு மூடிவிடுகிறார்கள். இந்தச் சிகிச்சையை மூன்று தமனிக் குழாய்களிலும் மேற்கொள்ள முடியும் என்பது முக்கியமான நன்மை.

இந்தச் சிகிச்சையின் பலனால், 100% அடைத்துக்கொண்ட இதயத் தமனியிலும் ஸ்டென்டைப் பொருத்துவது எளிதாகிறது; இதயத் தமனி அடைப்பு முழுமையாகவும் துல்லியமாகவும் நீங்கிவிடுகிறது; இதயத்துக்கு ரத்த ஓட்டம் சீராகிவிடுகிறது; பயனாளிக்கு மாரடைப்பு எனும் அபாயம் முற்றிலும் விலகிவிடுகிறது. இவற்றின் ஒட்டுமொத்த பலனாக அறுவைசிகிச்சை, வலி போன்ற சிரமங்கள் இல்லாமல் ஒரு மனித உயிர் எளிதாகக் காப்பாற்றப்படுகிறது.

மாரடைப்பு சிகிச்சைக்கு 1983இல் அமெரிக்க மருத்துவர் ஜின்ஸ்பர்க் (Ginsburg) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய தொழில்நுட்பம் இப்போது சென்னையிலும் பயன்படுத்தப்படுகிறது. இனி, தமிழகத்தில் இது பரவலாகும்போது பயனாளிகளுக்கு பைபாஸ் அறுவைசிகிச்சை தேவையில்லாமல் போகும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுமா? - வழக்கத்தில், லேசர் கதிர்வீச்சில் வெப்பம் உண்டாகும் அல்லவா? அது இதய தமனிக்குழாயைப் பொசுக்கிவிடாதா என்கிற கேள்வி எழலாம். பொதுவாக, ‘அகச்சிவப்பு லேசர்’தான் (Infra-red laser) வெப்பத்தை உண்டாக்கும். மாரடைப்புக்கான லேசர் சிகிச்சையில் ‘எக்சைமர் லேசர்’ (Excimer laser) பயன்படுத்தப்படுகிறது. இது வெப்பத்தை வெளிப்படுத்துவதில்லை; மாறாக, குளிர்ச்சியைத்தான் வெளிப்படுத்துகிறது. ‘புற ஊதா லேசர்’ (Ultra violet laser) என்று இதைக் குறிப்பிடுகிறார்கள். இதன் ஒளி ஆற்றல் (Photo energy) இங்கே பயன்படுகிறது. இதனால், ரத்தக்குழாய்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in