மெத்தனமாக இருந்தால் மெத்தனாலும் எமனாகும்!

மெத்தனமாக இருந்தால் மெத்தனாலும் எமனாகும்!
Updated on
3 min read

அது என்ன மெத்தனால் என்று சிலர் கேட்கலாம். சிலருக்குப் புரிந்தும் இருக்கலாம். கள்ளச் சாராயம், விஷச் சாராயம் என்றெல்லாம் செய்திகளில் வெளியாகி அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்டதே, அந்தச் சாராயத்தின் வேதியியல் பெயரே ‘மெத்தனால்’. இதை, ‘மெத்தில் ஆல்கஹால்’ என்றும் அழைப்பார்கள், மரச்சாராயம் என்றும் கூறுவார்கள். அப்படியெனில், மதுக்கடைகளில் கிடைப்பது? அதுவும் ஒரு வகை ஆல்கஹால்தான். அதன் வேதியியல் பெயர் ‘எத்தனால்’. இதை ‘எத்தில் ஆல்கஹால்’ என்று அழைப்பார்கள்.

கடையில் வாங்கிக் குடிப்பது (எத்தனால்) கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மரணத்துக்குக் கொண்டு செல்லும். கள்ளத்தனமாக வாங்கிக் குடிப்பது (மெத்தனால்) உடனடியாக மரணத்துக்கு இட்டுச் செல்லும். கடையில் குடிப்பது ஒரு தொடர்கதை. கள்ளத்தனமாகக் குடிப்பது திடீர் திருப்பங்களைக் கொண்ட ஒரு புதிர் கதை. இந்த ‘மோசமான ஆல்கஹால்’ குறித்து அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்வதே இழப்புகளைத் தடுக்க உதவும்

மெத்தனால்: ராபர்ட் பாயில் என்கிற ஐரிஷ் வேதியியலாளர் 1661இல் ‘மெத்தனாலை’த் தனியாகப் பிரித்தெடுத்தார். இது ஒரு வேதிச் சேர்மம்; நிறமற்ற திரவம்; ஆல்கஹால் நெடி உடையது; எளிதில் தீப்பற்றக்கூடியது. ஆரம்பக் காலத்தில் மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட இந்த ஆல்கஹால், தற்போது செயற்கை முறையில் ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கப்படுகிறது.

பயன்கள்

* அசிட்டிக் அமிலம், ஃபார்மால்டிஹைடு ஆகியவற்றின் உற்பத்திக்கு இது பயன்படுகிறது.

* செயற்கைச் சாயங்கள், பிசின்கள், ஞெகிழித் தயாரிப்பு, வாசனைத் திரவியங்கள் எனப் பல்வேறு தொழிற்சாலைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

* கரைப்பானாகவும் எரிபொருளாகவும் வண்ணப் பூச்சுகள், வெடிமருந்துகள் ஆகியவற்றின் தயாரிப் புக்கு உதவுகிறது.

* வாகனங்களின் ரேடியேட்டர் களுக்கான ஸ்கிரீன்வாஷ், உறைதல் தடுப்பானாக (Anti freeze) பயன்படுத்தப் படுகிறது.

உடல் அடையும் மாற்றங்கள்: இந்த வகை ஆல்கஹாலைக் குடித்த பிறகு, அது எளிதில் உட்கிரகிக்கப்பட்டு 30 முதல் 60 நிமிடங்களில் ரத்த ஓட்டத்தைச் சென்றடையும். இந்த ஆல்கஹால் கல்லீரலை அடையும். அங்குள்ள வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும் நொதிகளின் மூலம் ’ஃபார்மால்டீஹைடு (FORMALDEHYDE), ஃபார்மிக் அமிலமாக மாறும்.

இதில் ஃபார்மிக் அமிலமே மனிதர்களின் உடலில் மோசமான விளைவுகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. இந்த அமிலம்தான் கண் நரம்புகளையும் விழித்திரையையும் பாதித்து, பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. இது மூளையையும் பாதித்து இறப்பையும் எளிதாக்கிவிடும். உடனடியாகச் சிகிச்சை பெறத் தவறினால், பார்வையிழப்பு நிரந்தரமாகிவிடும்.

10 மி.லி. அளவு தூய மெத்தனால் பார்வையிழப்பை ஏற்படுத்திவிடும். 20 மி.லி. அளவைத் தாண்டினாலே பிரச்சினைதான். 30 மி.லி. முதல் 60 மி.லி. வரை மெத்தனால் பயன்படுத்தியவர்கள் கண்டிப்பாக இறக்க நேரிடும். குடித்த 12 முதல் 24 மணி நேரத்தில் துயரச் சம்பவங்கள் நடைபெறும்.

பாதிப்புகள்

* குமட்டல், வாந்தி

* வயிற்று வலி

* பார்வை மங்குதல்

* மூச்சுத்திணறல்

* வலிப்பு, படபடப்பு

* குறை ரத்த அழுத்தம்

மேலும், உடலில் அமிலத் தன்மை மிகும். கணைய அழற்சியும் ஏற்படலாம். சிறுநீரகம் பழுதடையலாம். கண் பாதிக்கப்பட்டு பார்வை முதலில் போகும். அதன் பிறகு மூளைப் பாதிப்பாலும் அங்கு ஏற்படும் ரத்தக் கசிவாலும் இறப்பு ஏற்படும்.

சிகிச்சை: மெத்தனால் குடித்தவர்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து, சிகிச்சையளிக்க வேண்டும். இவர்களது உடலைக் கண்காணித்துக் கொண்டே அமிலத்தன்மையைக் குறைப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஃபார்மிக் அமிலத்தின் விளைவுகளைத் தடுக்கும் - முறிக்கும் மருந்துகள், ஃபோலினிக் அமிலம் (Folinic Acid) ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல, மெத்தனால் தீவிரப் பாதிப்பைக் குறைக்க எத்தனாலை மருந்தாகப் பயன்படுத்துவதும் உண்டு.

மேலும், ரத்தத்தில் மிகுந்துள்ள மெத்தனால், ஃபார்மிக் அமிலத்தை வெளியேற்ற டயாலிசிஸ் செய்யப்படுவதும் உண்டு. தயமின், ஃபோலேட் மருந்துகளும் சிகிச்சைக்கு உதவும். மேற்கூறிய மருந்துகளை உரிய அளவில் கொடுத்து, தொடர்ந்து கண்காணித்துக் கொடுக்க வேண்டும்.

விழிப்புணர்வு அவசியம்: மெத்தனால் அருந்தி இறப்பவர்கள், பார்வை இழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்தால், அவர்கள் பெரும்பாலும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மெத்தனால் குறித்த விழிப்புணர்வு அவர்களிடையே இல்லை. குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் இதுபோன்ற மதுவை அவர்கள் குடிக்கிறார்கள்.

இத்தகைய சம்பவங்கள் மதுவிலக்கு இல்லாத காலத்திலேயே நடைபெறுவதால், இது குறித்துக் கூடுதல் ஆய்வும் ஆராய்ச்சியும் தேவை. இதுபோன்ற இடங்களில் மருத்துவ முகாம் நடத்தி மதுவுக்கு அடிமையான வர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை மது அடிமைத்தனத்திலிருந்து மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மெத்தனால் வாய்வழியாக மட்டுமல்ல, தோல் வழியாகவும் நாசி வழியாகவும்கூட உடலுக்குள் நுழைந்துவிடும். மெத்தனால் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுவதால், தொழிற்சாலைகளில் மக்கள் பணிபுரியும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in