செப்சிஸ்: ஆபத்தில் முடியும் அலட்சியம்

செப்சிஸ்: ஆபத்தில் முடியும் அலட்சியம்
Updated on
2 min read

செப்சிஸ் என்பது ஒரு நோய்த்தொற்றுக்கு எதிராக உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சரியாக வினையாற்றாத மருத்துவ அவசர நிலை. பொதுவாக உடலில் ஏற்படும் தொற்றை உடலின் நோயெதிர்ப்பாற்றல் அழித்துவிடும். ஆனால், செப்சிஸின்போது, உடலின் நோயெதிர்ப்பாற்றலுக்குக் கட்டுப்படாத தன்மையை நோய்த்தொற்று பெற்றுவிடுகிறது. இதன் காரணமாக, தொற்று தீவிரமடையும்; பரவல் வேகமெடுக்கும். இந்தப் பாதிப்பின்போது உடல் உறுப்புகளின் செயல்பாடும் மோசமடையும். இதற்கு உடனடி தீவிர மருத்துவ சிகிச்சை தேவை.

செப்சிஸ் பாதிப்பை உடனடியாகக் கவனிக்காவிட்டால், அது செப்டிக் ஷாக்காக வீரியமடையும். செப்டிக் ஷாக் என்பது செப்சிஸ் பாதிப்பின் கடுமையான நிலை; இறுதிக் கட்டமும்கூட. செப்டிக் ஷாக்கின்போது நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் சேதமடையும்; ரத்த அழுத்தமும் அபரிமிதமாகக் குறையும். இந்தப் பாதிப்பு கடுமையாகும்போது உயிரிழப்பும் ஏற்படலாம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட முதியோரின் காலில் ஏற்படும் புண், போதிய சிகிச்சையளிக்காத காரணத்தால் விரலையோ, பாதத்தையோ, காலையோ எடுக்கும் ஆபத்தில் முடிவதற்கு செப்சிஸ் முதன்மைக் காரணமாக இருக்கலாம். நடிகர் சரத்பாபு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் மரணத்துக்கும்கூட செப்சிஸே காரணமாகக் கூறப்பட்டது.

செப்சிஸின் அறிகுறிகள்

# மனநிலையில் மாற்றம்
# வேகமாக மூச்சுவிடுதல்
# முழுமையற்ற சுவாசம்
# காரணமின்றி வியர்த்தல்
# தலை லேசாக இருப்பதுபோல் உணர்தல்
# உடல் நடுக்கம்
# சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது வலி
# கடுமையான இருமல்

செப்டிக் ஷாக்கின் அறிகுறிகள்

# எழுந்துகூட நிற்க முடியாத நிலை
# கடுமையான தூக்கம் அல்லது விழித்திருப்பதில் சிரமம்
# மனநிலையில் அதீத மாற்றம்
# தீவிர மனக்குழப்பம்

காரணங்கள்

# எந்த வகையான தொற்றாலும் செப்சிஸ் ஏற்படலாம். இதில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைத் தொற்றுகளும் அடங்கும். பொதுவான காரணங்கள்:
# நுரையீரலில் ஏற்படும் நிமோனியா போன்ற தொற்றுகள்
# சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர் அமைப்பின் பிற பாகங்களில் ஏற்படும் தொற்று
# செரிமான அமைப்பில் ஏற்படும் தொற்று
# ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தொற்று
# வளைகம்பி (கதீட்டர்) பொருத்தும் இடத்தில் ஏற்படும் தொற்று
# நாள்பட்ட காயங்கள்
# தீக்காயங்கள்

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

செப்சிஸின் அறிகுறிகளோ, தொற்றோ, நாள்பட்ட காயமோ இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும். மனக்குழப்பம், வேகமாக மூச்சுவிடுதல் போன்ற அறிகுறிகள் கொண்டவர்களுக்கு அவசர சிகிச்சை தேவை.

யாருக்கு ஏற்படலாம்?

# புற்றுநோய்க்குச் சிகிச்சை பெறுபவர்கள்
# எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள்
# குறைந்த நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவர்கள்
# நீரிழிவு, சிறுநீரக நோய் அல்லது சிஓபிடி (நாள்பட்ட நுரையீரல் அடைப்பு) போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்
# தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டவர்கள்
# நீண்ட காலம் மருத்துவமனையில் இருப்பவர்கள்
# 90 நாளுக்கு மேலாக ஆன்டிபயாடிக் சிகிச்சை பெறுபவர்கள்

ஆபத்துகள்

# செப்சிஸ் பாதிப்பு மோசமடையும்போது மூளை, இதயம், சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புகளுக்குத் தேவையான அளவு ரத்தம் கிடைக்காது. செப்சிஸ் வித்தியாசமான ரத்த உறைதலை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவாக ஏற்படும் சிறிய ரத்தக் கட்டிகள் (clots) அல்லது ரத்த நாள வெடிப்புகள் திசுக்களைச் சேதப்படுத்தும் அல்லது அழிக்கும்.
# பெரும்பாலான நோயாளிகள், லேசான செப்சிஸிலிருந்து மீண்டு விடுகிறார்கள் என்பதே உண்மை. செப்டிக் ஷாக் ஏற்பட்டால் மட்டுமே அது ஆபத்தான கட்டத்துக்கு நோயாளியை இட்டுச்செல்லும்.

சிகிச்சை

# செப்சிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்படும். சுவாசம், இதயச் செயல்பாட்டை உறுதிப்படுத்த உயிர்காக்கும் நடவடிக்கைகள் தேவைப்படலாம்.
# செப்சிஸ் ஓர் ஆபத்தான நிலை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இருப்பினும், செப்சிஸ் பாதிப்புக்கு ஆரம்பக் கட்டத்திலேயே முழுமையான சிகிச்சையளிப்பது பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கும்; உடல் மீளும் வாய்ப்பை அதிகரிக்கும்; உயிரிழக்கும் ஆபத்தையும் தவிர்க்கும்.

- mohamed.hushain@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in