பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் ஏன் அதிகரிக்கவில்லை? | வானம் நமக்கொரு போதிமரம் 23

பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் ஏன் அதிகரிக்கவில்லை? | வானம் நமக்கொரு போதிமரம் 23
Updated on
2 min read

பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருப்பதாக நவீன வானியல் கூறுகிறது. ஆனால் நாம் காணும் கோள்களுக்கு இடையேயான தூரம், அல்லது சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவு மாறுவதாகத் தெரியவில்லை.

பிரபஞ்ச விரிவாக்கமும் ஈர்ப்பு விசையும் எதிரெதிர் திசையில் செயல்படுவதன் விளைவாகத்தான் இந்த இரு முரண்பட்ட தோற்றங்கள் ஏற்படுகின்றன. பிரபஞ்ச விரிவாக்கம் என்பது விண்வெளி என்கிற அடிப்படைத் தளமே (Fabric of Space) இழுத்து நீட்சியடைவதைக் குறிக்கிறது.

இந்த விளைவு மிகப் பெரிய அளவுகளில், குறிப்பாக விண்மீன் மண்டலங்களுக்கு இடையேயான பரந்த இடைவெளியில் மட்டுமே கணிசமாக உள்ளது. தொலைதூர விண்மீன் மண்டலங்களை நோக்கும்போது, அவை நம்மிடமிருந்து விரைவாக விலகிச் செல்வதாகத் தெரிகிறது. இன்னும் தொலைவில் உள்ளவை மேலும் வேகமாக விலகுகின்றன.

பலூன் விரிவடைவதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதன் மேற்பரப்பில் இடப்பட்ட இரண்டு புள்ளிகளை எடுத்துக்கொள்ளலாம். பலூன் விரியும்போது, அந்த இரு புள்ளிகளுக்கு இடையேயான தூரமும் அதிகரிக்கும். பிரபஞ்ச விரிவாக்கமும் இதே போன்றது. பலூனின் மேற்பரப்புதான் வெளி; அதில் உள்ள புள்ளிகள்தான் விண்மீன் மண்டலங்கள்.

மறுபுறம் உலர்திராட்சை கலந்த ஒரு கேக் மாவு அடுப்பில் சுடப்படுவதாகக் கற்பனை செய்யுங்கள். கேக் சுடப்பட்டு விரிவடையும்போது, அதனுள் இருக்கும் ஒவ்வோர் உலர்திராட்சையின் அளவும் கணிசமாகப் பெரிதாகாது. அவை தனியாக நகர்வதும் இல்லை. ஆனால், ஓர் உலர்திராட்சையிலிருந்து அடுத்த உலர்திராட்சைக்கான இடைவெளி மட்டும் அதிகரிக்கும்.

இதேபோலவே, பிரபஞ்ச விரிவாக்கத்தில் விண்வெளி எனும் ‘கேக் மாவு’ நீளும். விண்மீன் மண்டலங்கள் எனும் ‘உலர்திராட்சைகள்’ தாமாக விரிவடையாது.

ஆனால், அவற்றுக்கு இடையேயான தொலைவு மட்டும் விரிந்துகொண்டே போகும். இப்படித்தான் பிரபஞ்சவெளி விரிவடைந்தாலும் விண்மீன் மண்டலங்களும் சூரிய குடும்பமும் விரிவடைவது இல்லை.

ஏன் எனில் இந்த விரிவாக்கம் எங்கும் ஒரே சமமான வலிமையில் செயல்படுவதில்லை. இயற்பியலின் மற்ற விசைகளுடன், குறிப்பாக ஈர்ப்பு விசையுடன் (Gravitational Force) அதன் போட்டிதான் இறுதி முடிவை நிர்ணயிக்கிறது.

சிறிய அளவுகளில், அணுக்களின் அளவிலோ மனிதர்களின் அளவிலோ, மின்காந்த விசை (Electromagnetic Force) மற்றும் அணுக்கருப் பிணைப்பு விசைகள் (Nuclear Forces) மற்ற எல்லா விசைகளைவிடவும் மிகவும் வலிமையானவை.

இந்த விசைகள், விண்வெளியின் விரிவாக்கம் காரணமாக உண்டாகும் நீட்சி விளைவை முற்றிலும் வென்று, அணுக்களை அல்லது உடல்களை ஒன்றாகப் பிணைத்து வைக்கின்றன. அதனால்தான் நமது உடலின் அணுக்களுக்கு இடையேயான தூரம் மாறுவதில்லை.

சூரிய மண்டலம் அல்லது விண்மீன் மண்டலத்தில் ஈர்ப்பு விசை கையோங்கி இருக்கும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசை, அவற்றுக்கு இடையேயான விண்வெளித் தளத்தின் நீட்சி விளைவைவிடப் பல ஆயிரம் மடங்கு வலிமையானது.

எனவே, பூமி சூரியனைச் சுற்றும் சுற்றுப்பாதைத் தொலைவு நிலையாக உள்ளது. நிலவும் பூமியைப் போலவே சூரியனைச் சுற்றி வருவதால், அவற்றுக்கு இடையேயான தூரமும் மாறாது.

இந்தக் காரணத்திற்காகவே, நமது பால்வெளி மற்றும் அதன் அண்டை விண்மீன் மண்டலங்கள் ஒன்றை மற்றொன்று ஈர்க்கின்றன. விரிவடையும் பிரபஞ்சத்தால் ஒன்றிடமிருந்து மற்றொன்று விலகிச் செல்லவில்லை.

மிகப் பெரிய அளவில் பல லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் மண்டலக் கொத்துகள் (Galaxy Clusters) இடையே, ஈர்ப்பு விசையின் பிணைப்பு மிகவும் பலவீனமாக இருக்கும். அங்குதான் விண்வெளித் தளத்தின் விரிவாக்கம் வெல்கிறது.

அந்த மாபெரும் கட்டமைப்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று விலகிச் செல்வதை நம்மால் காண முடியும். இந்த விளைவின் தொடர்ச்சியாக, நமது பால்வெளிக்கு அருகில் உள்ள விர்கோ கொத்து (Virgo Cluster) போன்றவைகூட, நீண்ட காலத்தில் பிரபஞ்ச விரிவாக்கத்தால் நம்மிடமிருந்து விலகிச் செல்லும்.

எனவே, பிரபஞ்ச விரிவாக்கம் என்பது ஒரு வலுவான விளைவுதான். ஆனால் அதன் தாக்கம் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை.

அது ஒரு பின்னணி இசைக்கருவி போன்றது. பாடும்போது முன்னணிப் பாடகரின் குரல் உயர்ந்து ஒலிக்கும்போது, பின்னணி இசை மங்கும். பாடகரின் குரல் இல்லாதபோது பின்னணி இசை மேலோங்கும்.

ஈர்ப்பு விசை, மின்காந்த விசை போன்றவை அந்த முன்னணிக் குரல்கள். அவை வலுவாக உள்ள இடங்களில், பிரபஞ்சத்தின் விரிவாக்கம் எனும் பின்னணி ஒலி முழுவதுமாக மறைந்துவிடுகிறது.

அதேநேரம், ஈர்ப்பு விசை வலுவற்றுப் பிணைப்பு ஏற்படுத்தும் மாபெரும் பிரபஞ்சக் கட்டமைப்புகளில், பிரபஞ்ச விரிவாக்கத்தின் தாக்கமே மேலோங்கி இருக்கும்.

(அறிவோம்)

- tvv123@gmail.com

பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் ஏன் அதிகரிக்கவில்லை? | வானம் நமக்கொரு போதிமரம் 23
‘ஆப்பம்’ வடிவில் விண்மீன் மண்டலங்கள் இருப்பது ஏன்? | வானம் நமக்கொரு போதிமரம் 22

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in