

பூமியிலிருந்து பார்க்கும்போது நாம் எப்போதும் நிலவின் ஒரே பக்கத்தைத்தான் காண்கிறோம். நாம் தொடர்ந்து நிலவைக் கவனித்தால், அதன் நிலைகள் (phases) மாறுவது தெரியும். ஆனால், அதில் உள்ள பள்ளங்களும் மேடுகளும் ஒரே மாதிரியாகவே இருக்கும்.
பாட்டி வடை சுடுவது போன்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தும் பிரகாசமான, கருமையான பகுதிகள் கொண்ட அதே முகம்தான் எப்போதும் நமக்குப் புலப்படும். இந்தப் பிரகாசமான மேட்டுநிலப் பகுதிகளும், இருண்ட ‘மரியா’ சமவெளிகளும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மை நோக்கியே உள்ளன. பூமியில் வாழ்ந்த எல்லா மனிதர்களும் இதே முகத்தைத்தான் பார்த்துள்ளனர்.
அப்படி என்றால் பூமியைப் போல நிலவு தன்னைத்தானே சுற்றுவதில்லை எனச் சிலர் தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். நிலவும் சுற்றுகிறது. ஆனால் அதன் சுழற்சி வேகமும் பூமியைச் சுற்றும் வேகமும் ஒன்றாக இருப்பதால், நமக்கு ஒரே பக்கம்தான் தெரிகிறது.
அதாவது, நிலவு ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 27.3 நாள்கள் ஆகும். பூமியை ஒருமுறை சுற்றி வரவும் அதே 27.3 நாள்கள்தான் ஆகும். இதன் விளைவாக, பூமியிலிருந்து பார்க்கும்போது நிலவின் ஒரே பக்கமே தெரிகிறது.
வானியல் மொழியில், நிலவு பூமியுடன் ‘ஓதப் பூட்டப்பட்ட’ நிலையில் (tidally locked) உள்ளது. இதற்கு ‘ஒத்திசைவுச் சுழற்சி’ (synchronous rotation) என்றும் பெயர்.
நிலவு எப்படி ஓதப் பூட்டப்பட்டது?
சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலவு உருவானபோது, அது தற்போது இருப்பதை விட மிக வேகமாகச் சுற்றிக்கொண்டிருந்தது. பூமியின் ஈர்ப்பு விசை நிலவின் மீதும் தாக்கம் செலுத்துகிறது.
இந்த ஈர்ப்பு விசை நிலவில் ஒரு புடைப்பை (tidal bulge) உருவாக்குகிறது. அதாவது, நிலவு ஒரு கச்சிதமான கோளமாக இல்லாமல், எலுமிச்சம்பழம் போலச் சற்றே நீண்ட வடிவத்தில் இருக்கிறது. இதன் குவிந்த முனை பூமியை நோக்கியே இருக்கும்.
தொடக்கக் காலத்தில் நிலவு வேகமாகச் சுற்றியபோது, இந்தப் புடைப்பின் இருப்பிடம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது. இது நிலவின் சுழற்சி வேகத்தை மெதுவாக்கியது. இறுதியில், அதன் சுழற்சிக் காலமும், பூமியைச் சுற்றும் காலமும் ஒன்றாகச் சமநிலை அடைந்தன. அப்போதிருந்து, பூமியை நோக்கிய அரைக்கோளம் நிலையாகப் பூட்டப்பட்டுவிட்டது.
எனவே நிலவின் பாதி முகம்தான் நமக்குத் தெரியும். ஆயினும் ‘நிலவின் அலைவு’ (lunar libration) என்று ஒரு நிகழ்வு உண்டு. பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவு சற்று மாறுபடுவதால் இந்த அலைவு ஏற்படுகிறது. இதனால் நிலவின் மொத்தப் புறப்பரப்பில் சுமார் 59 சதவீதத்தைக் காலப்போக்கில் நாம் பார்க்க முடிகிறது. மீதமுள்ள 41 சதவீதம் மட்டுமே முற்றிலும் மறைந்தே இருக்கிறது.
பூமியின் மீதும் நிலவின் விளைவு
பூமியின் மீதும் நிலவு இதே போன்ற விளைவை ஏற்படுத்துகிறது. ஆனால் நிலவு பூமியைவிட மிகச் சிறியது என்பதால், பூமியின் சுழற்சியைப் பாதிக்க அதிக நேரம் ஆகிறது.
என்றாலும், இது ஓர் அளவிடக்கூடிய விளைவுதான். நிலவு, பூமியின் சுழற்சியை ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15 மைக்ரோ விநாடிகள் மெதுவாக்குகிறது. அதாவது, படிப்படியாக நமது நாள்கள் மிகச் சிறிதளவு நீளமாகிக்கொண்டே வருகின்றன.
நிலவு மட்டும்தானா இப்படிப் பூட்டப்பட்டுள்ளது?
இல்லை. நமது சூரியக் குடும்பத்தில் பல நிலாக்கள் இவ்வாறு ஓதப் பூட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, செவ்வாய்க் கோளின் நிலவான போபோஸ் (Phobos) ஓதப் பூட்டப்பட்டுள்ளது. அது செவ்வாயைச் சுற்றி வர 8 மணி நேரம் மட்டுமே ஆகும். தன்னைத்தானே சுற்றிக்கொள்ளவும் 8 மணி நேரமே எடுக்கும்.
மேலும், புளூட்டோவும் அதன் பெரிய நிலவான சரோனும் ஒன்றுடன் மற்றொன்று ஓதப் பூட்டப்பட்டுள்ளன. தட்டாமாலை சுற்றிவருபவர்கள் ஒருவர் முகம் மற்றவருக்குத் தெரியும், அதே நேரம் பின்மண்டையைப் பார்க்க முடியாது அல்லவா? அதுபோல, அவை எப்போதும் ஒரே பக்கத்தை ஒன்றுக்கு மற்றொன்று காட்டிக்கொள்கின்றன.
(அடுத்த இதழில் நிறைவடையும்)
- tvv123@gmail.com