

கவலையோடு இருந்தார் மீனாவின் தாத்தா. மிகப் பிரபலமான கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தின் பராமரிப்புப் பணி அவருடையது.
பள்ளிவிட்டதும் தாத்தாவைத் தேடி மீனா வந்துவிடுவாள். படிக்கட்டுகளில் ஏறியும் இறங்கியும் ஒளி விளக்கின் அருகே சென்று நிழல்களைப் பார்த்தும் விளையாடுவது அவளுக்குப் பிடித்தமானவை.
“என்ன தாத்தா, ஏதோ கவலையாக இருக்கிற மாதிரி தெரியுது. என்னைப் பார்த்து இன்னிக்கு ஏன் சிரிக்கல?” என்று தாத்தாவின் கையைப் பிடித்தாள் மீனா. தாத்தா பதில் சொல்லாமல் மும்முரமாக ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்தாள் மீனா.
கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதியில் அவர்கள் இருந்தார்கள். எப்போதும்போல் ஒளிரவிட வேண்டிய அந்தப் பிரம்மாண்டமான விளக்கு சுற்றவோ எரியவோ இல்லை என்பதைச் சட்டென்று கவனித்தாள் மீனா. இதுதான் விஷயம், திடீரென்று லைட் ஹவுஸ் அணைந்துவிட்டது.
அவர் அங்கிருந்த பல வகையான மின்கருவிகளை இயக்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார். மாலை நேரம் என்பதால் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. ஆனால் இன்னும் சற்று இரவாகிவிட்டால், அந்த இருளில் கண்டிப்பாகக் கலங்கரை விளக்கத்தின் வெளிச்சம் கடல் மாலுமிகளுக்குத் தேவை.
கடலில் பயணம் செய்யும் கப்பல்கள் கரையைக் கண்டறியவும் திசையை அறியவும் நம்பி இருப்பது கலங்கரை விளக் கத்தைத்தான் என்பதை மீனா அறிவாள். தாத்தாவைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதை உணர்ந்து, வழக்கம்போல் படிக்கட்டுகளில் பந்து போட்டு விளையாடத் தொடங்கினாள்.
மேலிருந்து கீழாக வட்டமாக ஓடுகின்ற படிகளில் பந்து தடக் தடக் தடக் என்று பாய்ந்து ஓடுகிறபோது, உடன் ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் மீனா.
தாத்தாவின் திறன்பேசி இருந்தாலும் அதில் விளையாடுவதைவிட, ரீல்ஸ் பார்ப்பதைவிட பந்து விளையாட்டைத்தான் அவள் விரும்பினாள். அது அவளிடமிருந்த நல்ல பழக்கம் என்று தாத்தா அடிக்கடி பாராட்டுவார்.
ஆனால், அப்படிக் கீழே வந்த பந்து மேலே வீசி எறியப்பட்ட போது எங்கோ சிக்கிக்கொண்டது. பந்தைத் தேடி இண்டு இடுக்குகளை நாடிச் சென்றாள் மீனா. அந்தக் கலங்கரை விளக்கம் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 105 அடி உயரமுள்ள கட்டிடம். அந்த ஆறாவது அடுக்கில் பந்து சிக்கிக்கொண்டிருந்தது.
அதை எடுக்கப் போன மீனாவின் கண்களில் அந்தச் சுவரில் எழுதப்பட்டிருந்த நான்கு வரி கண்ணில் பட்டது. கவிதைபோல அது எழுதப்பட்டிருந்தது.
‘பகலும் இரவும் ஒன்று சேரும் வேளை மூன்று கடல்களும் சங்கமிக்கும் அலை ஒளிக்கூடம் அணைந்தால் கண்ணாடியைத் திற தீர்வுகளை உரை’ உடனே மீனாவின் மூளை வேகமாகச் செயல்பட்டது.
இந்தப் புதிரை அவிழ்ப்பதற்கு ஓடிப்போய் முகம் பார்க்கும் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்த அலமாரியைத் தேடினாள். இரண்டு அடுக்குக்குப் பின்னால் அது இருந்தது.
அதைத் திறந்தாள். மிகப் பழங்காலத்து கதவு. அதனுள்ளே கையால் எழுதப்பட்ட ஒரு சிறு புத்தகம் இருந்தது. தூசியைத் தட்டினாள்.
அதை எடுத்துக்கொண்டு தாத்தாவிடம் ஓடினாள் மீனா. அதைக் கையில் வாங்கிய தாத்தா, பழங்காலக் காகிதத்தைப் பிரித்து வாசித்தார். அவர் முகம் பிரகாசமானது.
வேகமாக ஓடத் தொடங்கினார். கலங்கரை விளக்கம் ஒளி தருவதை நிறுத்தினால் எப்படிச் சீர் செய்ய வேண்டும் என்பதை, தாத்தாவைப் போல் அங்கே பணியாற்றியவர்கள் யாரோ எழுதி, மறைத்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அதை இன்று மீட்டுவிட்டாள் மீனா! அடுத்த அரை மணி நேரத்தில் கடல் மாலுமிகளுக்கு வழக்கம்போல் ஒரு கலங்கரை விளக்கம் கிடைத்துவிட்டது. தன் பேத்தி மீனாவைப் பாராட்ட தாத்தா தேடியபோது, வழக்கம்போல் அவள் பந்துகளை வீசி விளையாடிக் கொண்டிருந்தாள்.