மச்சங்கள் எப்படி உருவாகின்றன? | டிங்குவிடம் கேளுங்கள்

மச்சங்கள் எப்படி உருவாகின்றன? | டிங்குவிடம் கேளுங்கள்
Updated on
2 min read

இறந்தவர்களுக்கு மூக்கில் பஞ்சு வைப்பது ஏன், டிங்கு? - மா. மதுநிஷா, 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி. பள்ளி. தங்களாச்சேரி, மதுரை.

இறந்தவுடன் சடலத்துக்குள் இருக்கும் செல்கள் அழிய ஆரம்பிக்கும். அப்போது திரவங்கள், வாயுக்கள், கழிவுகள் போன்றவை வெளியேறத் தொடங்கும்.

காற்று சடலத்துக்குள் சென்றால் பாக்டீரியாக்கள் வேகமாகச் செயல்பட்டு, சடலத்தை அழுக வைக்கும். எனவே சடலத்தைப் பாதுகாக்கும் விதத்தில் மூக்கிலும் காதுகளிலும் பஞ்சை வைத்து அடைக்கிறார்கள், மதுநிஷா.

நமது உடலில் மச்சங்கள் எப்படி உருவாகின்றன, டிங்கு? - சு. இமயா, 4-ம் வகுப்பு, புனித அந்தோணியார் மெட்ரிக் பள்ளி, கோவை.

நம் தோலில் மெலோ சைட்டுகள் எனும் சிறப்பு செல்கள் இருக்கின்றன. இவை மெலனின் எனும் நிறமியை உற்பத்தி செய்கின்றன. இந்த மெலனின்தான் நம் தோலுக்கும் முடிக்கும் நிறத்தைக் கொடுக்கிறது. மெலனோசைட்டுகள் தோல் முழுவதும் பரவியிருக்கின்றன.

சில நேரம் பரவாமல் மெலனோசைட்டுகள் ஒரே இடத்தில் குவிந்துவிடும்போது, அங்கே மச்சம் உருவாகிறது. பெரும்பாலான மச்சங்கள் ஆபத்தற்றவை. ஏதாவது ஒரு மச்சம் திடீரென்று பெரிது ஆனாலோ, மச்சத்தில் அரிப்பு ஏற்பட்டாலோ, மச்சத்தின் நிறம் மாறினாலோ மருத்துவரிடம் செல்ல வேண்டும், இமயா.

வெங்காயம் வெட்டும்போது நம் கண்களில் கண்ணீர் வருகிறதே ஏன், டிங்கு? – ர. நந்தனா , 8-ம் வகுப்பு, மேரி மாதா மெட்ரிக். பள்ளி, தேனி‌.

வெங்காயத்தை வெட்டும் போது செல்கள் உடைகின்றன. அப்போது வெங்காயத்தில் உள்ள நொதிகளும் கந்தகச் சேர்மங்களும் ஒன்றுடன் மற்றொன்று வினைபுரிந்து, கண்களை எரிச்சலூட்டும் வாயுவை வெளியிடுகின்றன.

இதனால் நம் கண்கள் கலங்குகின்றன. இந்த எரிச்சலில் இருந்து கண்களைப் பாதுகாக்க, கண்ணீர்ச் சுரப்பிகள் அதிக அளவு கண்ணீரைச் சுரந்து, அந்த வேதிப் பொருளை வெளியேற்றுகின்றன நந்தனா.

மச்சங்கள் எப்படி உருவாகின்றன? | டிங்குவிடம் கேளுங்கள்
மரத்தில் பாயும் மின்சாரம் ஏன் மரக்கட்டையில் பாய்வதில்லை? | டிங்குவிடம் கேளுங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in