இனிப்பான பொருளைத் தேடி எப்படி வருகிறது எறும்பு? | டிங்குவிடம் கேளுங்கள்

இனிப்பான பொருளைத் தேடி எப்படி வருகிறது எறும்பு? | டிங்குவிடம் கேளுங்கள்
Updated on
1 min read

இனிப்பான பொருள் கீழே விழுந்த உடனே எறும்புகள் வந்து மொய்ப்பது எப்படி டிங்கு? - ர. தக் ஷ்ணா, 8-ம் வகுப்பு, நாச்சியார் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.

எறும்புகள் தலையில் இருக்கும் உணர்கொம்புகள் (ஆண்டெனா) மூலம் வாசனையைக் கண்டறிகின்றன. வேலைக்கார எறும்புகள் உணவு தேடி அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்கும். ஓர் எறும்பு உணர்கொம்புகள் மூலம் காற்றில் மிதந்து வரும் இனிப்புப் பொருளின் வாசனையை அறியும்.

உடனே அந்த இடத்துக்குச் சென்று உணவு இருப்பதைப் பார்த்துவிட்டு, தன் உடலில் இருந்து வேதிப் பொருளைச் (Pheromones) சுரந்துகொண்டே தன் புற்றுக்குச் செல்லும். அங்கே தகவலைத் தெரிவித்துவிட்டு, மற்ற எறும்புகளுடன் அந்த இடத்தை நோக்கி வரும்.

அப்படி வரும்போது அனைத்து எறும்புகளும் வேதிப்பொருளைச் சுரந்துகொண்டே செல்லும். இதனால் பின்னால் வரும் எறும்புகளால் பின்தொடர்ந்து வர முடியும். சிறிது நேரத்தில் எறும்புக் கூட்டமே அந்த இனிப்புப் பொருளை நோக்கிப் படையெடுத்துவிடும்.

இனிப்புப் பொருள் தீர்ந்துவிட்டாலோ நாம் சுத்தம் செய்துவிட்டாலோ எறும்புகள் வாசனையைச் சுரப்பதை நிறுத்திவிடுகின்றன. அதற்குப் பிறகு அந்த இடத்துக்கு அவை வருவதில்லை, தக் ஷ்ணா.

மனிதர்களுக்கு மழைக்காலத்தில் தண்ணீர் சோறு சாப்பிட்டால் சளி பிடிக்கிறது. ஆனால் ஆடு, மாடுகளுக்குத் தண்ணீர் சோறு சாப்பிட்டால் சளி பிடிப்பதில்லையே ஏன், டிங்கு? - ப. சுஜிதா, 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி. பள்ளி. தங்களாச்சேரி. மதுரை.

பழைய சோறு சாப்பிடுவதால் சளி பிடிக்காது. மழைக்காலத்தில் வெளிப்புற வெப்பநிலை குறை வாக இருக்கும். அப்போது குளிர்ச்சியான பழையசோற்றைச் சாப்பிடும்போது உடலின் வெப்பநிலை குறையலாம்.

அப்போது சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் உள்ளே நுழைந்து சளியை உண்டாக்கலாம். அல்லது பழைய சோற்றிலிருக்கும் சில கிருமிகள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் சளி பிடிக்கலாம்.

ஆடு, மாடு போன்ற விலங்குகளின் செரிமான மண்டலம் வேறு, மனிதர்களின் செரிமான மண்டலம் வேறு. எனவே பழைய சோற்றைச் சாப்பிட்டாலும் அவற்றுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை, சுஜிதா.

இனிப்பான பொருளைத் தேடி எப்படி வருகிறது எறும்பு? | டிங்குவிடம் கேளுங்கள்
நறுமணத்தில் மறைந்திருக்கும் தொழில் உலகம்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 31

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in