கொசுவுக்கு இதயம் உண்டா? | டிங்குவிடம் கேளுங்கள்

கொசுவுக்கு இதயம் உண்டா? | டிங்குவிடம் கேளுங்கள்
Updated on: 
1 min read

கொசுக்களுக்கு இதயம் இருக்குமா, டிங்கு? – சி. சக்தீஸ்வரன், 5-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.

கொசுக்களுக்கும் இதயம் உண்டு, சக்தீஸ்வரன். ஆனால், மனிதர்களின் இதயத்தைப் போன்று தனி உறுப்பாக அது இருக்காது. நீண்ட குழாய் போன்று இருக்கும் கொசுவின் இதயம் இரண்டு பகுதிகளாகச் செயல்படுகிறது.

கொசுக்களின் ரத்தம் ஹீமோலிம்ப் (Hemolymph). இது நம் ரத்தத்தைப் போல் சிவப்பாக இருக்காது. குழாய் போன்ற இதயம் சுருங்கி விரியும்போது ஹீமோலிம்ப் தலைப்பகுதியை நோக்கிப் பாய்கிறது. பிறகு அங்கிருந்து உடல் முழுவதும் பரவுகிறது.

தேன் கெட்டுப் போகாமல் இருக்கும் என்று கேள்விப்பட்டேன். அப்பா வாங்கி வந்த தேன் பாட்டிலில் காலாவதி தேதி என அச்சிட்டு இருந்தார்களே ஏன், டிங்கு? – சு. இமயா, 4-ம் வகுப்பு, புனித அந்தோணியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கணேசபுரம், கோவை.

தேனில் நீர்ச் சத்துக் குறைவு. அதனால் பாக்டீரியாக்கள் வளரத் தேவையான ஈரப்பதம் இல்லை. அதோடு தேனில் இருக்கும் லேசான அமிலத்தன்மை பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

தேனீக்கள் தேனை உருவாக்கும்போதே, அதைப் பாதுகாக்கும் விதத்தில் சில நொதிகளைச் சேர்த்துவிடுகின்றன.

அதனால் தேன் கூட்டில் இருக்கும் தேன் எளிதில் கெட்டுப் போவதில்லை. ஆனால், ஒரு பொருளை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும்போது, இந்தியாவின் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளின்படி காலாவதி தேதியைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம், இமயா.

கொசுவுக்கு இதயம் உண்டா? | டிங்குவிடம் கேளுங்கள்
ஒளியின் தனித்துவமான பண்புகள்! - ஒளிமின் விளைவு | அறிவியல் திருப்புமுனைகள் 28

X