ரயிலைப் பிடிப்போமா? | எங்கள் வீட்டில் நடந்தது!

ரயிலைப் பிடிப்போமா? | எங்கள் வீட்டில் நடந்தது!
Updated on
1 min read

நானும் அப்பாவும் மதுரைக்குச் செல்வதற்காக திண்டுக்கல் ரயில் நிலைய நடைமேடையில் ரயிலுக்காகக் காத்திருந்தோம். ‘இருப்பா, தண்ணி வாங்கிட்டு வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டு அப்பா சென்றுவிட்டார். நான் பைகளுடன் அமர்ந்திருந்தேன்.

சில நிமிடங்களில் ரயில் வந்துவிட்டது. ஆனால், என் அப்பாவைக் காணோம். எல்லாரும் வேகமாக ரயிலில் ஏறிக்கொண்டிருந்தார்கள். எனக்குப் பதற்றமாக இருந்தது. அப்பாவை கைபேசி மூலம் தொடர்புகொண்டேன். ஆனால், இணைப்புக் கிடைக்கவில்லை.

என் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது. எல்லாரும் ஏறிவிட்டனர். ரயில் புறப்பட ஆரம்பித்தது. எங்கிருந்தோ ஓடிவந்த அப்பா பைகளை எடுத்துக்கொண்டு, என்னை அவசர அவசரமாக ரயிலில் ஏற்றிவிட்டு, அவரும் ஓடிவந்து ஏறினார்.

தன் செயலுக்கு வருந்தினார். என் பயம் மறைவதற்குள் மதுரை வந்துவிட்டது. இந்த விஷயத்தை வீட்டில் உள்ளவர்கள் சொல்லிச் சொல்லி சிரிக்கிறார்கள்.

- ச. ஹரிகிருஷ்ணா, 7-ம் வகுப்பு, சிற்பி குளோபல் பள்ளி, நங்கநல்லூர், சென்னை.

பத்திரிகையாளர் மகிழினி! - நான் எழுதிய கதை

மகிழினி விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்கு வந்திருந்தாள். எப்போதும் அருகில் இருந்த பூங்காவில் நண்பர் களுடன் விளையாடுவாள். இந்த முறைபூங்காவில் தண்ணீர் இல்லாமல் செடிகள் எல்லாம் வாடி இருந்தன.

பூங்காவுக்கு அருகில் ஒரு குழாயில் சரியாக மூட முடியாமல் தண்ணீர் வீணாகிக்கொண்டிருந்தது. பாட்டியிடம் விஷயத்தைச் சொன்னாள் மகிழினி. “இந்த வருஷம் மழை அதிகம் இல்ல. அதனால பூங்காவுக்குத் தண்ணி சப்ளை இல்லை.

இந்தக் குழாயை மாத்தறதுக்கு யாரும் தயாரா இல்ல. தண்ணி வீணாகுது” என்று வருத்தப்பட்டார் பாட்டி. மாமாவிடம் திறன்பேசியை வாங்கிக்கொண்டு, பூங்காவையும் தண்ணீர்க் குழாயையும் படம் எடுத்தாள் மகிழினி.

ஒரு கடிதம் எழுதி, இந்தப் படங்களைப் பத்திரிகைக்கு மாமாவின் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தாள். இரண்டாவது நாள் படமும் கடிதமும் மகிழினியின் பெயருடன் பிரசுமாகியிருந்தன.

அடுத்த நாள் மாநகராட்சியிலிருந்து ஆள்கள் வந்து பூங்காவுக்குத் தண்ணீர் வர ஏற்பாடு செய்தனர். தண்ணீர்க் கொட்டிக் கொண்டிருந்த குழாயையும் சரிசெய்தனர். அன்று முதல் ‘பத்திரிகையாளர் மகிழினி’ என்று எல்லாரும் அவளை அழைக்க ஆரம்பித்தனர்.

- பு. கனிதா, 6-ம் வகுப்பு, ஓம் சக்தி மெட்ரிக். பள்ளி, ஏ. நடுப்பட்டி, கரூர்.

ரயிலைப் பிடிப்போமா? | எங்கள் வீட்டில் நடந்தது!
இப்படியும் சில பொறியாளர்கள்! | இளம் தொழில்முனைவோர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in