

பப்புவா நியூ கினியின் வடக்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய தீவு மனுஸ். இங்கே தென்னை மரங்கள் நிறைந்த ஒரு கிராமத்தில் ‘டாடா கபான்' என்கிற முதியவர் வாழ்ந்து வந்தார். அவர் அந்தக் கிராமத்தின் சிறந்த ‘கராமுட்' (முரசு) செதுக்குக் கலைஞர். அவர் உருவாக்கும் முரசுகளில் இருந்து வரும் ஓசை பல கி.மீ. தூரத்திற்குத் தெளிவாகக் கேட்கும்.
டாடா கபானுக்கு வயதாகிவிட்டது. இறுதியாக ஒரு முரசைச் செதுக்கத் தீர்மானித்தார். இதற்காகக் காட்டிற்குள் சென்று பல மாதங்கள் தேடி, மின்னல் தாக்கியும் சாயாத ஒரு வலிமையான மரத்தைத் தேர்ந்தெடுத்தார்.
அந்த மரத்தில் அவர் முரசைச் செதுக்கி முடித்தபோது, அது படகின் வடிவில் கம்பீரமாக இருந்தது. அதன் இரு முனைகளிலும் அந்த ஊரின் தெய்வமான முதலையின் தலை செதுக்கப்பட்டிருந்தது.
அந்த முரசைக் கிராமத்தின் மையத்திலிருந்த ஒரு பொதுக்கூடத்தில் வைத்தார். ஒவ்வொரு முறை காற்றுப் பலமாக வீசும்போதும் யாரும் தட்டாமலேயே அந்த முரசு ஒலி எழுப்பியது. அதைக் கண்டு மக்கள் வியந்தனர்.
ஒருநாள் காலை கடல் வழக்கத்திற்கு மாறாக மிகவும் பின்வாங்கியது. கடலுக்குள் இருந்த பவளத்திட்டுகள் வெளியே தெரிந்தன. மக்கள் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
“கடல் நமக்கு வழிவிடுகிறது, இன்று நிறைய மீன்கள் பிடிக்கலாம்” என்று மீனவர்கள் உற்சாகமாக வலைகளைத் தூக்கிக்கொண்டு ஓடினர். ஆனால், டாடா கபான் மட்டும் கவலையுடன் கடலைப் பார்த்தார். அவருக்கு ஏதோ ஆபத்து வருவதுபோலத் தோன்றியது. அப்போது, யாரும் தொடாமலேயே அந்தப் புதிய ‘கராமுட்' ஒலியை எழுப்பியது.
‘டும்... டும்... டும்... டும்...' முதலில் மெதுவாகத் தொடங்கிய அந்த ஒலி, பிறகு வேகம் பிடித்தது. அது எச்சரிக்கை ஒலிபோல இருந்தது. அந்த முரசின் பிளவிலிருந்து வெளிவந்த சத்தம், ஒரு மனிதன் கத்துவதைப்போலவே இருந்தது. ‘ஓடுங்கள்... மலை ஏறுங்கள்... பேரலை வருகிறது...’ என்று அந்த முரசு பேசுவதாக டாடா கபான் உணர்ந்தார்.
தள்ளாடும் கால்களுடன் ஓடிச் சென்று, முரசடிப்பான் கொம்புகள் இரண்டையும் எடுத்து, அந்த முரசை ஆவேசமாக அடிக்க ஆரம்பித்தார். “எல்லாரும் மலை உச்சிக்கு ஓடுங்கள்... கராமுட் பேசுகிறது... ஆபத்து வருகிறது...” என்று கத்தினார் டாடா கபான்.
“என்ன பேசுகிறீர்கள் டாடா கபான்? புயல் சூழலோ, ஆபத்து அறிகுறிகளோ இல்லாதபோது ஏன் இப்படிப் பதறுகிறீர்கள்?” என்று மக்கள் கேட்டனர். அப்போது பல திசைகளில் இருந்தும் நாய்கள் ஊளையிட்டன. கடற்காகங்கள் அபாயக் கூச்சலோடு கூட்டம் கூட்டமாக மலையை நோக்கிப் பறந்தன.
வரவிருக்கும் பேராபத்தை அந்த உயிரினங்கள் தங்கள் நுண்ணுணர்வால் அறிந்துகொண்டதன் அறிகுறிகள் இவை. அதைக் கண்டதும் மக்கள் பயந்து, தங்கள் குழந்தைகளையும் முதியவர்களையும் தூக்கிக்கொண்டு தீவின் உயரமான மலைப்பகுதியை நோக்கி ஓடினர். வளர்ப்பு விலங்குகள், பறவைகளையும் தங்களோடு அழைத்துச் சென்றனர்.
மக்கள் அனைவரும் மலைஉச்சியை அடைந்த சில நிமிடங்களில், கடற்பரப்பின் அடிவானில் மாபெரும் கறுப்புச் சுவர் எழுந்ததுபோலத் தெரிந்தது. அது பிரம்மாண்டமான ஆழிப்பேரலை. கடல் நீர், தென்னை மர உயரத்திற்கு மேல் எழும்பி, சீறிக்கொண்டு கரையை நோக்கிப் பாய்ந்துவந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் கடற்கரையில் இருந்த தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் வைக்கோல்போல அடித்துச் செல்லப்பட்டன. மலைஉச்சியில் நின்றிருந்த மக்கள் பீதியால் நடுங்கிக்கொண்டே அந்தப் பேரழிவைப் பார்த்தனர்.
ஆழிப் பேரலைக்கு மேலே அந்த அதிசய ‘கராமுட்' ஒரு படகைப்போல மிதந்துகொண்டிருந்தது. அது அந்தப் பேரலையில் மூழ்கவோ அடித்துச் செல்லப்படவோ இல்லை.
அதைக் கண்டு வியந்த மக்கள், “நிச்சயமாக அது, 'டாடா கபான் மூலம் கடல்தாய் நமக்கு அளித்த வெகுமதிதான்! அது எச்சரிக்கவில்லை என்றால், இன்று நாம் அனைவரும் கடல் நீரால் அடித்துச் செல்லப்பட்டிருப்போம்” என்று பேசிக்கொண்டனர்.
வெள்ளம் வடிந்த பிறகு, மக்கள் மலையிலிருந்து கீழே இறங்கிவந்தனர். கிராமமே உருக்குலைந்துபோயிருந்தது. கிராமத்தின் மையத்தில் இருந்த பொதுக்கூடமும் சிதைந்திருந்தது.
ஆயினும், அதன் உள்ளே அதிசயக் ‘கராமுட்' முரசு அப்படியே இருந்தது! அது மீண்டும் பழைய இடத்திற்கே வந்து அமைதியாக அமர்ந்திருந்தது.
டாடா கபான் நெகிழ்ச்சியோடு அந்த முரசை வருடினார். “நீ பேசினாய்... என் கிராம மக்களின் உயிரைக் காப்பாற்றினாய்! மிக்க நன்றி” எனத் தழுதழுத்தார். மக்கள் அந்த முரசுக்கு ‘உயிர் முரசு' என்று பெயரிட்டனர்.