

அழகிய ஒரு மலைப் பகுதியில் சின்னா என்கிற குருவி வாழ்ந்து வந்தது. அதுக்குத் தான் வாழும் காட்டைவிட, தலைக்கு மேலே மிதக்கும் வெண் மேகங்களைப் பிடிக்கும். எப்போதும் வானை நோக்கி ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே இருக்கும்.
‘ஏன் நாம் எப்போதும் மண்ணிலேயே இருக்க வேண்டும்? உயரப் பறந்து அந்தப் பஞ்சு மேகங்களுக்குள் கூடு கட்டினால் எவ்வளவு சுகமாக இருக்கும்!’ என்று அது அடிக்கடி நினைத்துக்கொண்டது. ஒரு நாள் தன் நண்பனான ஆந்தையிடமும் காக்கையிடமும் தன் ஆசையைச் சொன்னது.
ஆந்தை மெதுவாகக் கண்களைத் திறந்து, “சின்னா, பறவைகளுக்கு வானம் பறக்கத்தான், வசிக்க அல்ல” என்று எச்சரித்தது. ஆனால், சின்னா அதைக் கண்டுகொள்ளவில்லை.
எத்தனையோ கூடுகளைக் கட்டிய காக்கையும், “மேகத்தில் எல்லாம் கூடு கட்ட முடியாது சின்னா” என்றது. “நீங்கள் சொல்வதை நான் நம்ப மாட்டேன். நாளை காலை மேகங்களை நோக்கிப் பறந்து செல்வேன்” என்று சொல்லிவிட்டு, தன் கூட்டுக்குச் சென்றுவிட்டது சின்னா.
மறுநாள் காலை தன் அலகில் சிறு குச்சி, நாரை எடுத்துக்கொண்டு மேகங்களை நோக்கிப் பறந்தது சின்னா. மேலே செல்லச் செல்ல ஜில்லென்று காற்று வீசியது. ஒரு பெரிய வெண் மேகத்தின் அருகில் சென்று, “மேகமே, நான் உன்னிடத்தில் ஒரு கூடு கட்டப் போகிறேன். எனக்கு அனுமதி தர வேண்டும்” என்றது சின்னா.
மேகம், “சின்னஞ் சிறு சிட்டே, நான் நிலையானவன் அல்ல. இங்கும் அங்கும் அலைந்து திரிகிறவன். என்னிடம் நீ எப்படி வீடு கட்டுவாய்?” என்று கேட்டது. சின்னா பிடிவாதமாக, தான் கொண்டுவந்த சிறு குச்சியையும் நாரையும் மேகத்தின் மீது வைக்க முயன்றது. ஆனால், குச்சியும் நாரும் மேகத்தைத் துளைத்துக் கொண்டு கீழே விழுந்தன.
“ஐயோ” என்று கத்தியபடி சின்னா மீண்டும் மீண்டும் முயன்றது. ஆனால், மேகம் மீது ஒரு சிறு துரும்பைக்கூட நிறுத்த முடியவில்லை. திடீரெனப் பலமான காற்று வீசத் தொடங்கியது.
சின்னா அமர நினைத்த மேகம் துண்டு துண்டாகக் கலைந்தது. இப்போது சின்னாவுக்கு அமரக்கூட இடமில்லை. மழை மேகங்கள் திரண்டு வர, இடி மின்னலோடு மழை பெய்யத் தொடங்கியது. மேகம் இப்போது நீராக மாறி பூமியை நோக்கி இறங்கத் தொடங்கியது.
சின்னா நனைந்த இறக்கைகளுடன் சிரமப்பட்டுக் கீழே பறந்து வந்தது. தான் எப்போதும் அமரும் அந்தப் பழைய வேப்ப மரத்தின் கிளையில் தஞ்சமடைந்தது. அந்த மரம் மழையைத் தாங்கி, தன் அடர்ந்த இலைகளால் சின்னாவுக்குக் குடைபிடித்தது.
மழை நின்றதும் சின்னா ஆந்தையிடம், “நீங்கள் சொன்னது சரிதான். வானில் பறப்பது சுகம், ஆனால் தங்குவதற்குப் பூமிதான் சரியானது. மேகம் என்பது ஒரு அழகான ஓவியம் போன்றது, அதில் நாம் குடியிருக்க முடியாது” என்றது.
அன்று முதல் சின்னா மேகங்களை ரசித்துப் பார்த்ததே தவிர, அங்கு கூடு கட்ட நினைக்கவில்லை. மரக்கிளையில் கட்டிய கூடே அதுக்குச் சொர்க்கமாகத் தெரிந்தது.