

‘நிலவொளி பூமியில் இறங்கும் நிதானத்துடன், மரங்களைவிட உயரத்தில் பறந்து காற்றில் மிதந்து இறங்கியது அந்தப் புறா.’ ஜான் ஹெரால்ட் என்கிற கவிஞர் அந்தப் புறாவுக்காக எழுதிய கவிதையின் ஒரு வரி இது. கவிதை எழுதி, கண்ணீர் சிந்துமளவுக்கு அந்தப் புறா எதுவும் சாதிக்கவில்லை. ஆனால், இறுதி அடையாளமாக இந்த மண்ணில் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறது. அந்தப் புறாவின் பெயர் மார்த்தா (Martha). Passenger Pigeon (பயணிப் புறா) என்பது காட்டுப் புறா.
வட அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தது. மற்ற வகைப் புறாக்களைவிட இவை அதிக வேகத்தில் பறப்பவை. மணிக்கு 100 கி.மீ. வரை, களைப்பே இன்றி நீண்ட தூரத்துக்குப் பறக்கக்கூடியவை. சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவை பூமியில் இருக்கின்றன. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை வட அமெரிக்காவின் அடர் காடுகளில், நீர்நிலை ஓரங்களில் பல கோடிக்கணக்கான புறாக்கள் இருந்தன. காடுகளின் அழிவு, தட்பவெப்ப மாற்றம், உணவுப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் இந்தப் புறாக்கள் அடிக்கடி இடம்பெயர்ந்தபடி இருந்தன.
அமெரிக்கப் பூர்வகுடிகளுக்கு இந்தப் பயணிப் புறாக்களின் இறைச்சி மிகவும் விருப்பமானது. ஆகவே, பயணிப் புறாக்களை வேட்டையாடும் வழக்கம் அவர்களிடம் இருந்தது. பொது வாகவே பழங்குடிகள், தங்கள் உணவுத் தேவைக்காக மட்டுமே வேட்டையாடுவதால் எந்த உயிரினமும் முற்றிலுமாக அழிந்து போனதில்லை. ஆனால், எப்போது அந்நியர்கள் உள்ளே நுழைகிறார்களோ, அப்போதே அந்த மண்ணின் வளத்துக்கும், உயிரினங்களின் வாழ்க்கைக்கும் பேராபத்து நேர்கிறது என்பதே வரலாறு.
வட அமெரிக்கக் கண்டத்தில் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் பெருகப்பெருக, பயணிப் புறாக்களுக்கான ஆபத்தும் பெருகியது. அதையும் ஜான் ஹெரால்ட், தன் வரிகளில் குறிப்பிட்டிருக்கிறார். ‘பசித்த கூட்டம் துப்பாக்கியுடன் வந்தது. இயற்கை மடியும் சத்தம் அங்கே கேட்டது. அமைதி நொறுங்கி மண்ணாகிப் போனது.’ பத்தொன்பதாம் நூற்றாண்டில் வட அமெரிக்கக் கண்டத்தில் பயணிப் புறாவின் இறைச்சி விலை குறைந்த உணவாகப் புகழ்பெற்று இருந்தது.
சார்லஸ் ஓடிஸ் விட்மேன்
பெருமளவில் விற்பனையும் ஆனது. அதற்காகவே அவற்றைத் தேடித்தேடி வேட்டையாடினர். அந்தப் புறாக்களை வேட்டையாடும் போட்டிகளும் நடத்தப்பட்டன. அதிகப் புறாக்களைக் கொன்றோர், வெற்றிப் புன்னகையுடன் வீடு திரும்பினர். 1800 முதல் 1870 வரையிலான காலக்கட்டத்தில் எண்ணிக்கை மிகவும் குறைந்துபோனது. அடுத்த இருபது ஆண்டுகளில் சில ஆயிரங்களுக்குள் குறைந்து போகு மளவுக்கு வேட்டை தாண்டவமாடியது.
தவிர, காடுகள் அழிக்கப்பட்டு, ஐரோப்பியர்களின் குடியிருப்புகளும் அங்கே பெருகப்பெருக, பயணிப் புறாக்கள் அழிவை நோக்கித் தள்ளப்பட்டன. 1900ஆம் ஆண்டில், தெற்கு ஓஹையோவில் பயணிப் புறா ஒன்று வேட்டையாடப்பட்டது. காட்டுப் பகுதியில் வேட்டையாடப்பட்ட கடைசிப் பயணிப்புறா அதுவே என்கிற வரலாற்றுக் குறிப்பு உண்டு. அந்தப் புறாக்களில் சில மட்டுமே மீதமிருந்தன. சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் கடைசியாக ஒன்று எஞ்சியிருந்தது. ‘அந்தப் பெருமைக்குரியவள், ஆனால், துயரத்துக்குரியவள்தான் மார்த்தா’ என்று ஜான் ஹெரால்டின் கவிதை இப்படி அறிமுகம் செய்கிறது.
இருபதாம் நூற்றாண்டு பிறந்தபோது, காட்டிலிருந்த பயணிப் புறாக்கள் அனைத்துமே கிட்டத்தட்ட அழிந்து போயிருந்தன. ஓஹையோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி நகர உயிரியல் பூங்காவில் சில பயணிப் புறாக்கள் பிழைத்திருந்தன. அவற்றில் ஒன்றுதான் மார்த்தா. அது, 1885ஆம் ஆண்டில் பிறந்ததாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனின் மனைவி மார்த்தா வாஷிங்டனைக் கௌரவப்படுத்தும் விதத்தில் அந்த அரிய பெண் பறவைக்கு அப்பெயர் சூட்டப்பட்டது.
டேவிட் விட்டேகர் என்கிற உயிரியல் ஆர்வலர், சிகாகோ பல்கலைக்கழகத்தின் விலங்கியல் ஆய்வாளரான சார்லஸ் ஓடிஸ் விட்மேனுக்கு ஆறு பயணிப் புறாக்களை அனுப்பி வைத்தார். அதில் எஞ்சிய மூன்றை வைத்து ஆய்வுகளை மேற்கொண்டார். அவற்றில் மார்த்தாவுடன் இரண்டு ஆண் பயணிப் புறாக்களும் இருந்தன. அவற்றை எப்படியாவது காப்பாற்றி, சந்ததியைப் பெருக்கிவிட வேண்டும் என்கிற சார்லஸ் ஓடிஸின் பரிசோதனை முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
1909ஆம் ஆண்டில் ஒன்றும், அடுத்த ஆண்டில் இன்னொன்றும் இறந்து போயின. உலகின் ஒரே பயணிப் புறாவாக மார்த்தா, சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் தனித்திருந்தது. இன்னொரு பயணிப் புறாவைக் கண்டறிந்து சொல்வோருக்கு ஆயிரம் டாலர் பரிசு என்றெல்லாம் அறிவிக்கப்பட்டது. மார்த்தாவைத் தேடி எந்தப் பயணிப் புறாவும் வரவில்லை. நாளடைவில் அதன் உடல்நிலையும் நலிவடைந்து கொண்டேபோனது. 1914, செப்டம்பர் 1 அன்று உலகின் கடைசிப் பயணிப் புறாவான மார்த்தா இறந்து போனது.
மார்த்தாவின் உடல் பதப்படுத்தப்பட்டது. வாஷிங்டனில் அமைந்த இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சி யகத்தில் இப்போதுவரை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது, பயணிப் புறாக்களும் இந்தப் பூமியில் வாழ்ந்தன என்பதன் அடையாளமாக. ஜான் ஹெரால்ட், மார்த்தாவுக்காக எழுதிய கவிதையை இப்படி முடிக்கிறார். ‘கூண்டில் ஒரு மூலையில் அவள் இறந்து கிடந்தாள். இங்கே வந்ததைப் போலவே மிகவும் மென்மையாகப் புறப்பட்டுச் சென்றாள். அவளின் கடைசிப் பாடல், காற்றில் கரைந்தது. இனி பயணிப் புறா என்பதே இல்லை.’
(சந்திப்போம்)