

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த சோலைக்காடு. மாலை வெயில் பாறைகளில் பொன்னிறமாகப் படர்ந்தது. உயரமான மரங்களுக்கு இடையே குளிர்ந்த காற்று வீசியது. பறவைகள் கூடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தன.
பாறைகளில் குதித்து விளையாடிய ஒரு வரையாட்டின் தலையில் வளைந்து வளர்ந்திருந்த கொம்புகள் அழகாக இருந்தன. அதே பாறையில் உட்கார்ந்து நாவல் பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த கரடி, வரையாட்டின் கொம்புகளையே பார்த்தது.
‘ஆஹா! என்ன அழகான கொம்புகள்! எனக்கும் இரண்டு கொம்புகள் இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று நினைத்தது. வரையாட்டின் மேல் பொறாமையாக இருந்தது. உடனே, “உன் தலையில் இருக்கும் கொம்புகளைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது” என்றது கரடி.
“தாவரங்களைச் சாப்பிடும் பல விலங்குகளுக்குக் கொம்பு இருக்கே! அதுக்கு ஏன் சிரிப்பு?” என்று கேட்டது வரையாடு. “உனக்குத் தெரியாதா? எதையும் ஆழமாகச் சிந்திக்கத் தெரியாததால்தான் உன் சிந்தனைகள் எல்லாம் தலைக்குள் தங்காமல் வெளியே கொம்புகளாக முளைத்திருக்கின்றன” என்ற கரடி, பெருமையாகத் தன் தலையைத் தடவிக்கொண்டது.
வரையாட்டுக்கு எதுவும் புரியவில்லை. “நான் அறிவாளி. என் சிந்தனைகள் எல்லாம் தலைக்குள் பத்திரமாக இருக்கின்றன. அதனால்தான் கொம்பு முளைக்கவில்லை” என்றது கரடி. அருகில் மரக்கிளைகளை ஒடித்துத் தின்றுகொண்டிருந்த யானை, காதுகளை அசைத்தபடியே திரும்பிப் பார்த்தது. “அப்படி என்றால், எனக்கு உள்ள தந்தங்கள் சிந்திக்காததன் அடையாளமா?” என்று கேட்டதும் கரடி திடுக்கிட்டது.
“அது... உங்க விஷயம் வேற...” யானை சிரித்தது. கரடி பதில் சொல்லாமல் நாவல் பழத்தை வாயில் போட்டுக்கொண்டது. அப்போது புதருக்குள் இருந்து ஒரு முள்ளம்பன்றி வெளியே வந்தது. உடலிலிருந்த முள்களைச் சிலிர்த்துக் காட்டியது.
“கரடியாரே, என் உடல் முழுவதும் சிந்தனைகள் வெளியேறி முள்களாக முளைத்திருக்கின்றன” என்று சொல்லிச் சிரித்ததும் கரடி தலையைத் திருப்பிக்கொண்டது. அப்போது ஒரு முயல் குதித்து வந்தது. அது தனது நீண்ட காதுகளை நிமிர்த்திக்கொண்டது. “கரடியாரே... அப்படியென்றால் சிந்தனைகள் வெளியேறியதால்தான் என் காதுகளும் இவ்வளவு நீளமாக இருக்கின்றனவா?” என்றது.
அவ்வளவுதான்! எல்லா விலங்குகளும் சிரிக்கத் தொடங்கின. கரடியின் முகம் வாடியது. கரடியின் அருகில் யானை வந்து, “உடல் அமைப்பைப் பார்த்து அறிவை அளக்க முடியாது. இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் தனிச் சிறப்பைத் தந்திருக்கிறது” என்றது.
அப்போது அருகிலிருந்த பாறையிலிருந்து ஓர் அலறல் சத்தம் கேட்கவே எல்லா விலங்குகளும் திரும்பிப் பார்த்தன. இரண்டு பாறைகளுக்கு நடுவே கரடியின் குட்டி சிக்கிக்கொண்டிருந்தது. யானை உடனே தன் தும்பிக்கையைப் பாறைகளுக்கு இடையே நுழைக்க முயன்றது. ஆனால், இடைவெளி மிகவும் குறுகலாக இருந்தது.
எவ்வளவு முயற்சி செய்தும் யானையால் குட்டியை வெளியே எடுக்க முடியவில்லை. வரையாடு தன் கொம்புகளைப் பாறையின் இடுக்குக்குள் செலுத்தி, பாறையைத் தள்ள முயன்றது. பாறை சிறிது நகர்ந்தது. ஆனால் குட்டி வெளியே வருவதற்குப் போதுமான அளவு இடம் கிடைக்கவில்லை.
கரடி தன் நகங்களால் பாறையின் அடியில் இருந்த மண்ணைத் தோண்டிப் பார்த்தது. பாறையின் ஒரு பக்கம் மண்ணுக்குள் ஆழமாகப் புதையவில்லை. மறுபக்கம் சிறிய கற்களால் இறுக்கமாக அடைக்கப் பட்டிருந்தது. “இந்தப் பாறையைத் தள்ள வேண்டாம். கீழே இருக்கும் கற்களை அகற்றினால் போதும்” என்றது வரையாடு.
யானை உடனே தும்பிக்கையால் கற்களை ஒதுக்கியது. முள்ளம்பன்றி மூக்கால் மண்ணைத் தள்ளியது. முயல், சிறிய கால்களால் உருண்டு வந்த கற்களை எடுத்துப் போட்டது. வரையாடு மறுபடியும் கொம்புகளைப் பாறையின் இடுக்குக்குள் செலுத்தியது. “ஒன்று... இரண்டு... மூன்று... கரடியும் தன் முழு வலிமையைப் பயன்படுத்தித் தள்ளியது. பாறை நகர்ந்தது. குட்டி வெளியே பாய்ந்து தாயிடம் ஓடியது. எல்லா விலங்குகளும் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தன.
“உங்கள் ஒவ்வொருவரின் சிந்தனையாலும் முயற்சியாலும்தான் என் குட்டி பத்திரமாக வெளியே வந்தது. சிந்தனைக்கும் கொம்புக்கும் தொடர்பில்லை என்பதை உணர்ந்துகொண்டேன். அனைவருக்கும் நன்றி” என்றது கரடி.
யானை சிரித்தபடி, “நீயும் புத்திசாலிதான். கொம்பு உனக்கு இல்லையே என்கிற வருத்தத்தில், பொறாமையுடன் அப்படிச் சொல்லிவிட்டாய் என்று நினைக்கிறேன்” என்றது. “ஆமாம், சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள்” என்று கரடியும் சிரித்தது.