

எஸ்டோனியாவின் எல்லையோரக் கிராமம் ஒன்றில் 'கஸ்பர்' என்கிற மரம்வெட்டி வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த அந்த நிலப்பரப்பு எப்போதும் பனிமூட்டத்தாலும் அடர்ந்த பைன் மரங்களின் வாசனையாலும் நிறைந்திருக்கும்.
அந்தக் காலத்தில் காடுகள் அமைதியாக இருக்காது; காற்று வீசும்போது மரங்கள் ஒன்றோடு மற்றொன்று பேசிக்கொள்ளும், பாடல்களை இசைக்கும். சில நேரம் அந்தப் பாடல்கள் ஒரு தாயின் தாலாட்டைப் போலவும், சில நேரம் பழங்காலப் போர் வீரர்களின் வீரகதையைப் போலவும் ஒலிக்கும்.
கஸ்பரின் முன்னோர் ஒரு விதியைப் பின்பற்றினர். ‘உன் தேவைக்கு அதிகமாக ஒரு கிளையைக்கூட வெட்டாதே. வெட்டுவதற்கு முன்னால் அந்த மரத்திடம் அனுமதி கேள். ஏனெனில், ஒவ்வொரு மரமும் ஓர் ஆன்மாவைச் சுமந்து நிற்கிறது.
நீ கோடரியால் அதன் பட்டையைத் தீண்டும்போது, அது தன் முனகலால் உனக்கு எச்சரிக்கை விடுக்கும்.’ ஆனால் கஸ்பர் பேராசைக்காரர். அவருக்கு மரங்களின் மொழி கேட்கவில்லை.
அவரது காதுகளில் கோடரி மரத்தைத் தாக்கும் சத்தமும் பொற்காசுகளின் ஓசையும் மட்டுமே கேட்டன. அவரது கோடரியின் முனை, காட்டின் உயிரைக் குடிக்கக் காத்திருக்கும் ஒரு வேட்டைக்காரரின் பற்களைப் போலக் கூர்மையாக இருந்தது.
காட்டுக்குள் ஒரு பழமையான கருவாலி மரம் இருந்தது. அது அந்தக் காட்டின் இதயம் போன்றது. மற்ற மரங்கள் அதற்கு மரியாதை செய்தன. அந்த மரம் பாடும்போது காடு முழுவதும் தெய்விக அமைதி நிலவும்.
ஒரு பணக்கார வணிகர் கஸ்பரை அணுகினார். "கஸ்பர், அந்தப் பெரிய கருவாலி மரத்தை வெட்டி எனக்குக் கொடு. அதனைக் கொண்டு நான் ஒரு மாளிகை கட்ட வேண்டும். உனக்கு நான் மூன்று தலைமுறைக்குத் தேவையான தங்கத்தைத் தருகிறேன்" என்றார்.
கஸ்பரின் கண்கள் வணிகர் வாக்குறுதி அளித்த அந்தத் தங்கத்தின் கற்பனை மினுமினுப்பிலேயே குருடாயின. அந்தக் கருவாலி மரம் அவரது குழந்தைப் பருவத்தில் நிழல் கொடுத்தது என்பதைக்கூட அவர் மறந்துபோனார்.
அவர் தனது கூர்மையான கோடரியுடன் காட்டுக்குள் சென்றார். அவர் காட்டின் எல்லைக்குள் நுழைந்தவுடனேயே மரங்கள் பாடுவதை நிறுத்திவிட்டன. காற்றில் பரவி இருந்த இசை சட்டென்று நின்று போனது. சுற்றி இருந்த பறவைகள் சிறகடிக்கக்கூட அஞ்சி, தத்தம் கூடுகளுக்குள் ஒடுங்கின.
காட்டில் மயான அமைதி நிலவியது. அவர் கருவாலி மரத்தின் அருகே சென்றபோது, அந்த மரம் மெல்லிய குரலில் பேசியது: "கஸ்பர், உன் முன்னோர் என்னைப் பாதுகாத்தனர். நான் வீழ்ந்தால் இந்தக் காட்டின் இசை நின்றுவிடும். உனக்குத் தேவையான விறகுகள் தரையில் விழுந்து கிடக்கின்றன,
அவற்றை எடுத்துக்கொள். என் உயிரைப் பறிக்காதே."
கஸ்பர் சிரித்தார். "உன் பேச்சு எனக்குத் தங்கமாக மாறாது. எனக்குத் தேவை நீ மட்டுமே" என்று சொல்லிவிட்டுக் கோடரியை ஓங்கினார். முதல் வெட்டு விழுந்தபோது அந்தக் காடு முழுவதும் அதிர்ந்தது. சுற்றி இருந்த மரங்கள் பயத்தில் தங்களின் கிளைகளைச் சுருக்கிக்கொண்டன.
கஸ்பர் கருவாலி மரத்தை வெட்டியபோது அதிலிருந்து ரத்தம் போன்ற திரவம் வழிந்தோடியது. அது அவரின் கைகளிலும் முகத்திலும் பட்டது. கஸ்பருக்கு ஒரு நிமிடம் அருவருப்பு ஏற்பட்டது, ஆனால், தங்கத்தின் மீதுள்ள ஆசை அவரை வெட்டச் செய்தது.
தனது செயலின் கொடூரத்தை உணர மறுத்த அவர், இரக்கமற்ற கண்களோடு மீண்டும் மீண்டும் கோடரியால் அந்த மரத்தைத் தாக்கினார். மரம் கீழே விழுந்தபோது காடு பெரும் அலறல் ஒலியை எழுப்பியது. காட்டில் இருந்த அனைத்துப் பறவைகளும் பறந்தோடின. செடிகள் கருகத் தொடங்கின.
அந்தப் பகுதி முழுவதும் அழுகிய நாற்றம் வீசியது. மனிதச் சுயநலத்தின் நாற்றம் அது. கஸ்பர் அந்த மரத்தை வண்டியில் ஏற்ற முயன்றார். ஆனால், அந்த மரம் இப்போது இரும்பைவிடப் பல மடங்கு கனமாக மாறி இருந்தது.
அவரின் கைகளில் பட்ட அந்த மர்மத் திரவம் காய்ந்து, தோலோடு ஒட்டிக்கொண்டது. அது ஒரு நச்சுக் கொடியைப் போல அவரின் நரம்புகளுக்குள் ஊடுருவியது. அவரின் கைகள் மரத்தின் கிளைகளைப் போலவே மாறின; கால்கள் வேர்களாக மாறித் தரைக்குள் ஊடுருவிப் புதைந்தன.
அவர் நகர முயன்றார், ஆனால் பூமி அவரின் பாதங்களை இறுகப் பற்றிக்கொண்டது. அவர் கத்தினார், ஆனால் அவரின் தொண்டையிலிருந்து குரல் வரவில்லை; காய்ந்த மரம் முறியும் சத்தம் மட்டுமே வந்தது.
அவரின் கண்கள் மரப்பட்டைகளாக மாறின. அவரின் இதயம் ஒரு கட்டையாக உறைந்து போனது. அவர் ஒரு மரமாக மாறிக்கொண்டிருந்தார்.
ஆனால், அது உயிர் உள்ள மரம் அல்ல; பாடத் தெரியாத, இலைகள் இல்லாத ஒரு மரம்! மறுநாள் கிராமத்தினர் காட்டுக்குள் வந்தனர். அங்கே கருவாலி மரம் வெட்டப்பட்டுக் கிடந்ததைக் கண்டனர்.
அதன் அருகே ஒரு விகாரமான ஓர் உலர்ந்த மரம் நின்றிருந்தது. அதன் கிளைகள் ஒரு மனிதன் கைகளை உயர்த்தி மன்னிப்புக் கேட்பது போலவே இருந்தன. அன்று முதல் அந்தக் காட்டில் மரங்கள் பாடுவதை நிறுத்திவிட்டன. மனிதர்களின் பேராசை அதிகரிக்கும்போது மரங்கள் மௌனமாகிவிடும் என்கிற செய்தி எஸ்டோனியாவில் பரவியது.
இன்றும் எஸ்டோனியா மக்கள் மிகுந்த மரியாதையுடனும் அமைதியுடனும் காடுகளுக்குச் செல்வார்கள். ஏனெனில், கோடரி ஏந்திய ஒவ்வொரு கையும் அந்தக் காட்டின் பார்வையில் கஸ்பரின் கையாகவே தெரிகிறது. கஸ்பருக்கு நேர்ந்த கதி தங்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.