

சீன நாட்டின் ஒரு கிராமத்தில் மிங் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது, ஒரு ஜாடி கிடைத்தது. அதைத் திறந்து பார்த்தார். ஜாடி முழுவதும் தங்க நாணயங்கள் இருந்தன. மீண்டும் அதை, கிடைத்த இடத்திலேயே வைத்துப் புதைத்துவிட்டார். வீட்டுக்கு வந்ததும் மனைவி சிங் இடம் விஷயத்தைச் சொன்னார்.
“அந்த ஜாடியை வீட்டிற்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். யாராவது திருடிச் சென்றுவிட்டால் என்ன செய்வது?” என்று கேட்டார் சிங். “அது நமக்குக் கிடைக்க வேண்டும் என்றால், எப்படியாவது நம்மைத் தேடி வரும்” என்றார் மிங்.
இருவரும் பேசியதை அந்தப் பக்கம் வந்த ஜங் கேட்டார். உடனே வயலுக்குச் சென்று அந்தப் புதையல் இருந்த ஜாடியைத் தேடி எடுத்து, தன் வீட்டிற்குக் கொண்டு சென்றார். ஜாடியைத் திறந்து பார்த்தபோது விஷப்பாம்பு இருந்தது. பயந்து போனவர் அந்த ஜாடியை மூடி வைத்துவிட்டார்.
மறுநாள் வழக்கம்போல வயலுக்குச் சென்று வேலை செய்தார் மிங். அந்த ஜாடியை வைத்த இடத்தில் காணவில்லை. ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலைகளைக் கவனித்தார். மாலை வீடு திரும்பி தன் மனைவியிடம் விஷயத்தைத் தெரிவித்தார் மிங். “ஜாடி கிடைத்தால் அதை அப்படியே விட்டுவிட்டு வருவார் களா? இப்போ யாரோ எடுத்துச் சென்றுவிட்டார்கள்” என்று வருத்தப் பட்டார் சிங்.
“கவலைப்படாதே, அந்தப் பொருள் நமக்குச் சேர வேண்டும் என்றால் எப்படியாவது நம்மிடம் வந்தே சேரும்” என்றார் மிங். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜங் யோசித்தார். விஷப்பாம்பு இருக்கும் ஜாடியைக் கொண்டு வந்து மிங்கின் நிலத்தில் புதைத்துவிடலாம். பொய் சொன்ன மிங்கைப் பாம்பு கொத்தட்டும் என்று நினைத்தார்.
மறுநாள் வயலுக்குச் சென்ற மிங், வேலைகளை முடித்துவிட்டுத் தன் மனைவியிடம் வந்து அந்த ஜாடி மீண்டும் நம் நிலத்திற்கே வந்து விட்டது என்றார். “இப்பவாவது அதைக் கொண்டு வருவதுதானே?” என்று சிங் கேட்டார். “கவலைப்படாதே, அந்த பொருள் நமக்குச் சேர வேண்டும் என்றால் எப்படியாவது நம்மிடம் வந்தே சேரும்” என்றார் மிங்.
மறைந்திருந்து கேட்ட ஜங், இன்று இரவு எப்படியும் அந்த ஜாடியைக் கொண்டுவந்து மிங்கின் வீட்டில் வைத்து விடவேண்டும் என்று முடிவு செய்தார். அன்றிரவு ஜாடியைக் கொண்டு வந்து மிங்கின் வீட்டு முன்னால் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார் ஜங். மறுநாள் காலை வயலுக்குப் புறப்பட்ட மிங், வீட்டின் முன்னால் ஜாடி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
மிங்கும் சிங்கும் அதைத் திறந்து பார்க்க, தங்க நாணயங்கள் மின்னின. “ஒரு பொருள் நமக்குச் சேர வேண்டும் என்றால் அது எப்படியாவது நம்மிடம் வந்து சேரும் என்றேன். அப்படியே ஜாடி நம்மைத் தேடி வந்துவிட்டது” என்றார் மிங்.
“ஆமா, ஒரு பொருள் நமக்குச் சேர வேண்டும் என்றால் அது எப்படியாவது நம்மிடம் வந்தே சேரும். நீங்கள் பாம்புக்குப் பதிலாக தங்க நாணயங்களை அன்று இரவு வைத்தது அவருக்குத் தெரியவில்லை” என்று சிங் மகிழ்சியாகச் சிரித்தார்.