விடை தேடும் அறிவியல் 6: நாம் பார்க்கும் வண்ணங்கள் நிஜமா?

விடை தேடும் அறிவியல் 6: நாம் பார்க்கும் வண்ணங்கள் நிஜமா?
Updated on
2 min read

இந்த உலகம் அழகிய வண்ணங்களால் ஆனது. பூமியில் ஒரு கோடிக்கும் அதிகமான வண்ணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நாம் பார்க்கும் வண்ணங்கள் எல்லாம் நிஜம்தானா?

சூரியனில் இருந்து மின்காந்த அலைகள் வெளியாகின்றன. இவை பல்வேறு அலைநீளங்களைக் கொண்டிருக்கும். இவற்றில் கிட்டத்தட்ட 400 முதல் 700 நானோ மீட்டர்கள் அளவிலான அலைநீளங்களைத்தான் நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும். இதைத்தான் நாம் கண்ணுறு ஒளி (Visible Light) என்கிறோம். கண்ணுறு ஒளியின் குறுகிய அலைநீளம் நம் கண்களுக்கு ஊதா நிறமாகவும், நீண்ட அலைநீளம் சிவப்பு நிறமாகவும் தெரிகிறது. இடைப்பட்ட அலைநீளங்கள் நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய வண்ணங்களாகத் தெரிகின்றன.

மின்காந்த அலைகள் கண்ணுறு ஒளியைவிடக் குறுகிய அலைநீளங்களையும் நீண்ட அலைநீளங்களையும் கொண்டுள்ளன. அவற்றை நம்மால் பார்க்க முடியாது. 400 நானோ மீட்டருக்குக் குறைவான அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளை நாம் புற-ஊதாக் கதிர்கள், எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் என வகைப்படுத்தியிருக்கிறோம். அதேபோல 700 நானோ மீட்டர்களைத் தாண்டிய மின்காந்த அலைகளை அகச்சிவப்பு கதிர், நுண்ணலை, வானொலி அலை என்று குறிப்பிடுகிறோம்.

மனிதர்களால் பார்க்க முடிகிற ஒளியில் வண்ணங்கள் இருக்கின்றனவா? இல்லை. நாம் பார்க்கும் வண்ணங்கள் அனைத்தும் நம் மூளையால் உருவாக்கப்படும் அடையாளங்கள்தாம். மனித கண்களுக்குத் தெரியும் ஒளி மின்காந்த அலைகள்தாம். அந்த அலைகள் நம் கண்களின் லென்ஸ் வழியாகச் சென்று விழித்திரையில் (retina) பிம்பமாக விழுகின்றன. விழித்திரையில் அமைந்திருக்கும் கூம்புகள்தாம் (Cones) இந்த அலைநீளங்களுக்கு வண்ணங்களை வழங்குகின்றன.

நமது விழித்திரையில் S, M, L என்கிற மூன்று வகைக் கூம்பு செல்கள் அமைந்துள்ளன. அவற்றில் S கூம்பு நீல வண்ணத்தையும் M கூம்பு பச்சை வண்ணத்தையும் L கூம்பு சிவப்பு வண்ணத்தையும் உருவாக்குபவை. அதேபோல இந்தக் கூம்புகள்தாம் மின்காந்த அலைகளை உள்வாங்கி நமக்குக் காட்சியாகத் தருகின்றன. S கூம்பு 440 நானோ மீட்டர் அளவுக்கு நெருங்கிய அலைநீளங்களைக் கொண்ட மின்காந்த அலைகளை மட்டும் உணரும் திறனைக் கொண்டுள்ளது.

அதனால், அந்த அலைநீளங்கள் நீல நிறமாகத் தெரிகின்றன. அதேபோல் M கூம்பு 545 நானோ மீட்டர் அருகே உள்ள அலை நீளங்களையும், L கூம்பு 580 நானோ மீட்டருக்கு அருகே உள்ள அலைநீளங்களையும் உள்வாங்கு வதால் அந்த அலைநீளங்கள் முறையே பச்சை, சிவப்பு வண்ணங்களில் தெரிகின்றன.

நாம் ஓர் ஆப்பிள் பழத்தைப் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். அதில் இருந்து வெளிவரும் ஒளியின் அலைநீளம் 580 நனோ மீட்டர்களுக்கு அருகில் இருக்கும். அவற்றை L கூம்பு மட்டுமே உள்வாங்கும் என்பதால் ஆப்பிள் சிவப்பாகத் தெரிகிறது. இதுவே நாம் வாழைப்பழத்தைப் பார்க்கும்போது என்ன நடக்கும்? நமது விழித்திரையில் மஞ்சள் வண்ணத்தைத் தனியாக உள்வாங்கும் கூம்பு கிடையாது.

ஆனால், மஞ்சள் வண்ணம் சிவப்பு, பச்சை ஆகிய இரண்டு அலைநீளங்களுக்கும் இடையேயான அலைநீளத்தைக் கொண்டுள்ளது. அவற்றை L, M ஆகிய இரண்டு கூம்புகளுமே குறிப்பிட்ட விகிதத்தில் உள்வாங்குவதால் சிவப்பும் பச்சையும் கலந்து நமக்கு மஞ்சள் வண்ணத்தில் காட்சி தருகிறது. இப்படித்தான் நாம் பூமியில் பார்க்கும் வண்ணங்களை நம் மூளை காட்டுகிறது.

தொலைக்காட்சிகளில் உள்ள படக் குழாயில் (Picture Tube) சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று வண்ணங்கள் மட்டுமே இருக்கும். நாம் ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதை நம் மூளையில் உள்ள L, M, S கூம்புகள் உள்வாங்கி வண்ணங்களின் கலவையாகக் காட்டுகின்றன.

வண்ணங்களை உள்வாங்கும் தன்மையிலும் மனிதர்களுக்கு இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன. ஒருவருக்குத் தெரியும் வண்ணம், மற்றவருக்கு அதேபோல தெரிவதில்லை. நிறக் குறைபாடு (Colour Blindness) உள்ளவர்களுக்குச் சில வண்ணங்கள் தெரியாது. இதற்குக் காரணம் கூம்புகளில் ஏற்படும் பாதிப்புகள்தாம்.

கூம்புகளைப் போல குச்சி செல்களும் (Rods) விழித்திரையில் உள்ளன. அவை வெளிச்சம் குறைவாக இருக்கும்போது ஒரு பொருளைப் பார்க்க உதவுகின்றன. நமது விழித்திரையில் குச்சி செல்களால் ஒளி, ஒளியற்ற நிலை ஆகிய இரண்டு நிலைகளைத்தாம் புரிந்துகொள்ள முடியும். ஒளியற்ற நிலை நமது கண்களுக்கு இருட்டாகத் தெரியும். ஒளியுள்ள நிலை வெளிச்சமாகத் தெரியும்.

பொருள்களுக்கு வண்ணங்கள் இருக்கின்றனவா? - பூமியில் உள்ள பொருள்களுக்குத் தனியே வண்ணங்கள் கிடையாது. ஒளி என்பது மின்காந்த அலைகள்தாம். இந்த அலைகள் ஒரு பொருளின் மீது விழும்போது அதில் உள்ள அலைநீளங்களை (அதாவது அனைத்து வண்ணங்களையும்) அந்தப் பொருள் உள்ளிழுத்துக் கொண்டு, ஒரே ஓர் அலைநீளத்தை மட்டும் வெளியிடுகிறது. இதற்குக் காரணம் அந்தப் பொருளின் உள்ளே இருக்கும் அணுக்களின் கட்டமைப்பு. இவ்வாறு வெளியிடப்படும் அலைநீளமே அந்தப் பொருளின் வண்ணமாகக் காட்சியளிக்கிறது.

ஆப்பிளில் சூரிய ஒளி படும்போது, அது ஒளியில் உள்ள அலைநீளங்களை எல்லாம் உறிஞ்சிவிட்டு, 580 நானோ மீட்டர் அளவிலான அலைநீளத்தை மட்டும் வெளியே தெறிக்கவிடுகிறது. அதை L கூம்பு உள்வாங்கி, சிவப்பு நிறமாகக் காட்டுகிறது. அதனால், ஆப்பிள் சிவப்பு நிறத்தைப் பெறுகிறது. இப்படியாக வண்ணங்கள் எல்லாம் நம் மூளை புரியும் மாயாஜாலங்கள்தாம்!

(விடைகளைத் தேடுவோம்)

- tnmaran25@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in